Friday, 8 May 2020

நரசிங்க முனையரையர்

தினம் ஒரு அடியார்:40

நரசிங்க முனையரையர்:

நடுநாடு என்று அழைக்கப்பட்ட திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட முனையரையர் எனும் குறுநில மன்னர் மரபில் தோன்றியவர் இவர்.முனையரையர்கள் ஆண்டதால் 'முனைப்பாடி நாடு’ என்னும் பெயர் அல்லது, முனைப்பாடி நாட்டை ஆண்டதால் முனையரையர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம். சுந்தரரைத் தம் வளர்ப்புப்பிள்ளையாக எடுத்து வளர்த்து வந்தார்.
இவரது பூசைநாள்: புரட்டாசி சதயம்
மக்களை காத்து நிற்பதில் தலைசிறந்த அரசனாய் விளங்கிய இவர், தன் பெருஞ்செல்வமாய் திருநீற்றையே சிந்தையில் வைத்தவர். இவர் ஆளும் திருமுனைப்பாடி நாடு இயல்பாகவே அனைத்து வளங்களும் நிரம்பியது. ஈசனின் திருவடியார்களின் திருவடியை அடைவதே தன் பெறும் கடமையாய் கொண்டு வாழ்ந்தார். ஈசனின் கோவில்கள் அனைத்திலும் செல்வங்களை பெருகச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவ்வகையில் ஈசரின் ஆதிரை திருநாளில் திருக்கோவில்களை வந்தடையும் அடியார்களுக்கு பசும்பொன்காசுகள்நூறினை தனித்தனியே தந்து உணவும் உண்ணச் செய்வார். இவ்வாறான திருத்தொண்டில் ஈடுபடும்போது ஓர்ஆதிரைநாளில் திறுநீர்அணிந்த அடியார் உடலிலே காமம் மிகுதியால் தன்மானம் இகழப்படுமாறு நோய்குறினை உடையவராய் வந்து நின்றார். அவரின் உடற்குறையை கண்டு அனைவருரேர் இகழ்ந்து ஒதுங்கி நின்றனர் அதுகண்ட நரசிங்கர் அவரை அன்புடன் உபசரித்து மற்றவரைவிட அதிகமாய் மதித்து சிறப்பு செய்தார்.

தற்போது ஒழுக்கம் அறியா நெறியுடையவராய் இருப்பினும், திருநீறு பூசிய காரணம் ஒன்றினால் அவ்வடியாருக்கு இருமடங்கு அளவாய் பொன்னளித்து இனியமொழிகளை கூறி வழியனுப்பி வைத்தார். அவ்வகையில் தம் திருத்தொண்டின் நெறிதவறாமல் உண்மையான அன்பினால் சிறந்த சிவப்பழமாய் வாழ்ந்து வந்த நரசிங்க முனையரையர், திருநீற்றுத் தொண்டின் உயர்வால், ஈசனின் திருவடியை எய்து பிறவாநிலையை அடைந்தார்.

"மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் :ராஜம்

#தினம்ஒருஅடியார்
#நரசிங்கமுனையரையர்
#நாற்பதாம்நாள்



Thursday, 7 May 2020

புகழ்ச்சோழ நாயனார்

தினம் ஒரு அடியார் 39

புகழ்ச்சோழ நாயனார்:

முடியுடை மூவேந்தரில் பார்புகழும் சோழகுலத்தில் உதித்த சிவப்பழம் இவர்.
இவரது பூசைநாள் : ஆடிகிருத்திகை

[குலகிரியின் கொடுமுடிமேல் கொடி 
  வேங்கைக் குறி எழுதி
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு 
  நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச் 
  சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம் 
  உள் உறையூராம் உறையூர்]

இமயத்தின் உச்சியில் தன்குலச்சின்னமான புலிச்சின்னத்தை பொறித்து, குளிர்நிலவு போன்ற தண்ணிய வெண்குடையின் கீழ், நெடிதான இந்நிலஉலகத்தினை காத்து புகழடைந்த வளம்மிக்க சோழர்களின் மூதூரான, அழகுகளுக்கெல்லாம் உள்ளுறையாக விளங்கும் தன்மையுடைய பழம்பதியாய் விளங்கியது உறையூர், அளவற்ற பெருஞ்சிறப்பு வாய்ந்தது. பல்கிய ஒளியினை தரவல்ல மணிகளை கொண்டு இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் வான்வரை உயர்ந்ததாக வீதியின் இருமருங்கிலும் காணப்படும். நகரைச்சுற்றிலும் காணப்படும் மதில்களின் இடையே மலர்கள் நிறைந்த அகழிகள் இருக்கும்.

(அன்றைய உறையூர் எவ்வளவு வளம் பொருந்தியது என நினைக்கையில், இன்று கான்கிரிட் காடான அந்நகரின் நினைவு வந்துவிடுகிறது, உறையூர் இன்று திருச்சிமாவட்டத்தின் முக்கிய நகர்.  தமிழகசங்ககாலம் தொடங்கி 13 ம் நூற்றாண்டு வரை சோழர்களின் முக்கியநகராய் இருந்தது உறையூர். உறையூர், உறந்தை, கோழியூர் என பல பெயர்களில் வழங்கி வந்தது இந்நகர். கி.மு.முதல் நூற்றாண்டை சேர்ந்த பெரிப்ளஸின் நூல் உறையூரை அருகரு என குறிக்கிறது. அகநானூறு, புறநானூறு இரண்டும் உறையூர் அக்காலத்தில் கோட்டை, கொத்தளங்களுடன் சிறப்பாய் இருந்ததாய் கூறுகிறது.

1964ம் ஆண்டு T.V.மகாலிங்கம் தலைமையில் சென்னைப்பல்கலைக்கழக தொல்லியல்துறையால் 1968 ம் ஆண்டு வரை அகழாய்வு மேற்க்கொள்ளப்பட்டது. நிறைய தமிழி எழுத்துக்கள் நிரம்பிய பானையோடுகள், குடியிருப்புகள், கண்டறியப்பட்டது. அக்காலகட்டத்திலே உறையூர் திருச்சியின் முக்கியநகர்.

இன்று அகழாய்வு மேற்கொள்ளவே முடியாதவாறு முற்றிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துவிட்டது.  தொல்லியல்துறை அகழாய்வு செய்ததால் சங்ககால கட்டடத்தின் எச்சமும், பானைகளில் தமிழி கல்வெட்டுகளும் கிடைத்தது. இன்று ஆய்வுசெய்ய இயலாவண்ணம் சுற்றிலும் கட்டடம் சூழ்ந்துவிட்டது. இன்றும் நகரில் ஆங்காங்கே கட்டிடம் கட்ட அடித்தளம் தோண்டுகையில் சங்ககால பொருட்கள் நிறைய கிடைத்த வண்ணம் உள்ளது)

இத்தகைய சிறப்புடைய நகரத்தை தலைநகராய் கொண்டு ஆண்டுவந்தார் அநபாயசோழரின்(இரண்டாம் குலோத்துங்கன்) மரபில் முன்னோராய் வந்த பெருமையுடைய, "பொன்னிநதி புரவ லன்" என சிறப்புபெயர் பெற்ற புகழ்ச்சோழனார். பெருமலைபோன்ற தோள்வலிமையுடையவர் இவர். இவரின் வலிமையை கண்டு அஞ்சி பிறதேச மன்னர்கள் பாதம் பணிந்தனர். வைதீகமும், சைவமும் தலைக்க செங்கோல்நெறிப்படி ஆட்சி செலுத்தி வந்தார். இவரின் காலம் 5-6ம் நூற்றாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.   புகழ்ச்சோழர் கொங்கு நாட்டு அரசரும், மேற்கு திசையில் உள்ள மற்ற நாட்டு அரசர்களும் கப்பம் கட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் தமது தலைநகரை மலைநாட்டுப் பக்கம் உள்ள கருவூருக்கு மாற்றி கொண்டார். அங்கே இறைவன் உறையும் திருவாநிலை கோவிலை வந்தடைந்தார்! அங்கிருந்து அரண்மனைக்கு சென்றார். இந்நிலையில் சிவகாமி எனும் அடியாரை துன்புறுத்திய யானையை எறிபத்தர் எனும் வீரநாயன்மார் ஒருவர் வெட்டி வீழ்தினார். அவரைதண்டிக்க படையெழுப்பி வந்த புகழ்ச்சோழர், தன் வீரர்களை கொன்றவரை தானே கொல்ல முன்னோக்கி வர அவர் சிவனடியார் என்ற உண்மை தெரியவர, எறிபத்தரின் தலையில் தன் உடைவாளை தந்துநின்று,  திருத்தொண்டிலே மிகவும் சிறப்புற விளங்கினார்,

 இக்கதையை விரிவாய் காண (https://m.facebook.com/story.php?story_fbid=3111705772225758&id=100001590970336)

 எம்பெருமானின் அருளால் நல்முறையில் ஆட்சிப்புரிந்து வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழர் மீண்டும் சோதனைகள் ஏற்படத் துவங்கியது. தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அரசர்கள் அனைவருக்கும் கப்பம் விதிக்கப்பட்டது. அரசர்கள் கப்பமாக கொண்டு வந்து கொடுக்கும் யானைகள், குதிரைகள், பொற்குவியல்கள், ரத்தின குவியல்கள் முதலிய திரைப்பொருட்களை எல்லாம் பெற்று, அந்தந்த அரசர்களுக்கு அவரவர்களின் நிலைமைக்குத் தக்க அரசுரிமைத் தொழிலினைப் நல்லமுறையில் புரிந்து வருமாறு பணிந்தார். இவ்விதமாக எண்ணற்ற மன்னர்கள் கப்பம் செலுத்தி வரும் வகையில் அதிகன்(அதியர் எனும் வேளிர் மரபினராய் இருத்தல் கூடும்) என்னும் அரசன் மட்டும் மன்னருக்கு கப்பம் கட்டாமல் இருந்தான். அதிகன் கப்பம் செலுத்தாமல் இருக்கும் செய்தியை அமைச்சர் மூலம் அறிந்துகொண்டார். கடுங்கோபங்கொண்ட புகழ்ச்சோழர் கடல்போன்ற தன்படையை அதிகன் மீது ஏவினார். புகழ்ச்சோழனின் படைமுன் நிற்கமுடியாத அதிகன் படைகள் அழிவுற்றன. வழியெங்கும் அதிகனின் பாதுகாப்பு அரணை துவம்சம் செய்தனர். கொடிகள் சூழ்ந்த மதிலையுடைய பொறையூரை அழித்தனர். தன் நகரை விட்டு இருண்ட காட்டினுள் ஒளிந்தான். நகரின் உள்ளேபுகுந்த வீரர்கள் தம் விருப்பம்போல் அந்நகரின் மங்கைகளையும், யானைகளையும், குதிரைகளையும் கைப்பற்றினர். ஒவ்வொரு வீரனும் தம் மன்னனிடம் வீரத்தைபறைசாற்ற எதிரிகளின் பல தலைகளை தூக்கிக்கொண்டு கருவூர் நோக்கி விரைந்து மன்னரின் முன்பு வெற்றிக்களைப்பில் அடுக்கி காட்டினர்.தமது படை வீரர்களின் வீரம் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த மன்னர் கண்ணில் ஒரு தலையில் மட்டும் சடைமுடி இருப்பது தென்பட்டது. அந்த தலையை கண்டதும் அவர் கொண்ட மகிழ்ச்சியானது நொடி பொழுதில் காணாமல் போனது, ஒருகனம் ஆடிப்போனார்.வருத்தம் கொண்டார். எனது ஆணையானது அடியார்களுக்கு தீங்கிழைக்கும் படி ஆனதே என்று அழுது மனம் ஆற்றியவர் அமைச்சரிடம் என் ஆட்சியில் சைவ நெறிக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே. திருமுடியில் சடைமுடி ஏந்திய அடியாரை நானே கொன்றுவிட காரணமாகிவிட்டேனே. எம்பெருமானுக்கு எத்தகைய தீங்கை யாம் செய்துவிட்டோம்! இனி நான் வாழ்ந்து பயனில்லையென, இனி வெற்றித்திருமுடியை என் மகனுக்கு சூட்டுவீராக!  என கூறிவிட்டு பிணக்குவியலில் தான் கண்ட அடியவரின் தலையை கையில் ஏந்தியவாறே! செந்தீ வளர்க்க ஆணையிட்டு, அடர்ந்து எழுந்த தீயில் மகிழ்ச்சியாய் உள்நுழைந்தார்.

அவர் தீயினுள் உட்புக, அடுத்த கனம் வானுலகிலிருந்து பூமழை பூமியெங்கும் பரவியது!  மங்கல இசைக்கருவிகள் பெருமுழக்கம் செய்தது.ஈசனின் திருவடியில் இன்பநிலையில் நிரந்தரமாய் அமர்ந்தார் புகழ்ச்சோழர்.

"பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழற்கடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#புகழ்ச்சோழநாயனார்
#முப்பத்துஒன்பதாம்நாள்






Wednesday, 6 May 2020

கணநாத நாயனார்:

தினம் ஒரு அடியார்-37

கணநாத நாயனார்:

சோழநாட்டு சீர்காழியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவர் பூசைநாள்: பங்குனி திருவாதிரை
சீர்காழியின் அந்தணர் குலத்தின் தலைவர் இவர். சீர்காழி திருத்தோணியப்பர் கோவிலுக்கு வரும் அடியார்களை, அவர்தம் தகுதி, தேவை அறிந்து அவருக்கு வசதியும், அறிவுரையும் செய்வதையே தொண்டாய் வழக்கமாய் செய்து வந்தார். அவ்வகையில் நந்தவனத்தில் பணிபுரிவோர், திருமஞ்சனநீர் எடுத்து வருவோர், நந்தாவிளக்கு எரிப்போர்,  கோவிலில் திருமுறைகள் வாசிப்போர் (அக்காலத்தில் திருமுறை ஓதுவதற்கு பிடாரர்களை நியமித்திருப்பதை இதன் வாயிலாக அறியலாம்) என கோவிலில் பணிபுரியும் உவச்சர்களுக்கு அவரவர் தேவையறிந்து அவர்கள் இன்பம் அடையும் வண்ணம் தொண்டாற்றுவார்.

சீர்காழியில் அவதரித்த உமையின் திருமுலைப்பாலை அருந்திய தெய்வக்குழந்தையான சம்பந்தரின் திருவடி மீது பேரன்பு கொண்டிருந்தார். ர். ஞானசம்பந்தப் பெருமானை நாளும் வழிபட்ட நலத்தால், கொன்றைமலரை விரும்பி அணியும் சிவபெருமான் உறையும் கயிலைமலையில், சிவகணங்களுக்கு தலைவராய் வழிவழியாய் இருந்துவரும் பெருஞ்சிறப்பினை அடைந்தார்.

“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கணநாதநாயனார்
#முப்பத்துஏழாம்நாள்



கூற்றுவநாயனார்


தினம் ஒரு அடியார் 38

கூற்றுவநாயனார்:

திருக்களந்தை எனும் ஊரில் களப்பிரர் எனும் அரசர்குடியில் தோன்றியவர் கூற்றுவநாயனார். இவரது பூசைநாள்:ஆடிதிருவாதிரை
திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் களப்பால் எனும் ஊர் உள்ளது. இவ்வூரே அன்று களந்தை என்று அழைக்கப்பட்டது. தன்னையெதிர்க்கும் யாவரையும் தன் தோள்வலிமையால் வெல்லக்கூடிய வல்லமை பொருந்திய களந்தை நகரின் தலைவன் கூற்றுவன். சிவபெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதும் வழக்கத்தினை உடையவர். சிவனடியாரை பரவித்தொழுது வணங்கும் இயல்பினையுடையவர். இறைவன் திருவருளால் பகையரசர்கள்(சேர, சோழ, பாண்டியர்) அஞ்சி ஒதுங்கும் தீரம் கொண்டவர், அவர்களின் அளவில்லா செல்வத்தினையும், வீரஞ்செறிந்த யானை,காலாட்படை,தேர்ப்படை, குதிரை படைகளையும், எல்லையற்ற நிலங்களையும் தன்னகத்தே கொண்டு வீரச்செருக்குடன் வாழ்ந்து வருபவர்.

தமிழகத்தில் சைவசமயம் பக்திமார்க்கத்தால் வளர்ச்சியுற்து. அதன் முதல்விதை களப்பிரர் காலத்தில் விதைக்கப்பட்டதே. அதன்பின் பல்லவ சோழர்காலத்தில் அது தலைத்தோங்கியது. களப்பிரர்கள் கருநாடகத்தின் சந்திரகிரிமலையை அடுத்த "களபப்பு பெட்ட" என்ற பகுதியிலிருந்து தமிழகம் வந்ததாய் நம்பப்படுகிறது. அச்சுதவிக்கந்தன் எனும் மன்னன் நம் மூவேந்தர்களை வென்றவர். "யாப்பெருங்கலக்காரிகை" எனும் நூல் நம் மூவேந்தர்கள், களப்பிரரை புகழ்ந்து பாடியதை விளக்குகிறது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கி.பி 5 ம் நூற்றாண்டு முற்பகுதி எழுத்தமைதியை சார்ந்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசனைப்பற்றி கூறுகிறது! இக்கல்வெட்டின் காலம் மற்றும் கூற்றன் என்ற பெயர் இவற்றினைக் கொண்டு இது கூற்றுவநாயனாராக இருக்கலாமோ என கருத இடமுள்ளது. இக்கல்வெட்டு வேள் மருகண் என்பவரின் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவருமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும்(கோவில்), ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளது. என்ற முக்கியதகவலை தருகிறது. இருண்டகாலம் என அழைக்கப்படும் களப்பிரரின் வரலாற்றில் சிறு ஒளிக்கீற்று இக்கல்வெட்டாகும்.

மூவேந்தரையும் ஆட்சிசெய்த களப்பிரன் கூற்றுவனுக்கு சோழமன்ரின் திருமணிமுடியை சூட்டிக்கொள்ள விருப்பம் ஏற்ப்பட்டது. அம்மணிமுடி தில்லைமூவாயிரவர் எனும் தில்லைவாழ்அந்தணர் பாதுகாப்பில் இருந்ததை கேள்விப்பட்டு உடனே தில்லை சென்றார். மூவேந்தரையும் அடக்கியாளும் அரசன் தில்லைஅந்தணரிடம் உரிமையாய் அம்மணிமுடியை கேட்க, அவர்களோ, "தொன்றுதொட்டு வரும் சோழர்குலத்தானை தவிரவேறு யாருக்கும் இதைச்சூட மாட்டோம்" என்று துணிச்சலுடன் கூறி,ஒற்றுமையில் சிறந்த அவ்வந்தணர்கள் தம்மிலே ஒருவகையினரிடம் மணிமுடியை பத்திரமாய் ஒப்படைத்துவிட்டு சேரநாட்டை அடைந்தனர்.அங்கேயும் கூற்றுவன் விடாமல் அவர்களுக்கு தொல்லையளித்தான். அங்கிருந்தவாறே தன் தில்லைக்கூத்தனை மனதில் வேண்டினர் அந்தனர்.

[அற்றை நாளில் இரவின்கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும் எனப்பரவும் 
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாதமலரளிக்க 
உற்ற அருளால் அவைதாங்கி உலகமெல்லாம் தனிபுரந்தார்]

அன்றிரவு  கனவில் எழுந்தருளிய ஈசர், கூற்றுவன் தலையில் தன் திருவடிமலராய் சூட்டியருளினார். அதனையே மணிமுடியாய் ஏற்று மகிழ்ந்த கூற்றுவன், உலகை தான் ஒருவனாக இருந்து ஆட்சிபுரிந்து வந்தார். தில்லையம்பலத்தில்  நட்டம் பயின்றாடும் நாதனின் கோவில் எங்கெல்லாம் உள்ளதோ! அங்கெல்லாம் தனித்தனியாய் பூசனைமுறைகளை பெரியபொருட்செலவில் செய்து மகிழ்ந்து, சிவப்பணிகள் பலசெய்து இறுதியில் ஈசன் திருவடியடைந்தார் கூற்றுவநாயனார்.

"ஆர்கொண்ட வேல் கூற்றன் களந்தைக்கோன் அடியேன் "

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
கல்வெட்டு : பூலாங்குறிச்சி

#தினம்ஒருஅடியார்
#கூற்றுவநாயனார்
#முப்பத்துஎட்டாம்நாள்





கழறிற்றறிவார் நாயனார்

தினம் ஒரு அடியார்-36

கழறிற்றறிவார் நாயனார்:

சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறும் முடியுடைய மன்னர்கள் அறுவர். அதில் முடியுடைய வேந்தர் சேரரில் வரும் ஒரே மன்னர் இவரே. இவரது இயற்பெயர் "பெருமாக் கோதை"

[மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
 யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத் 
 தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
 காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார்]

கழறிற்றறிவார் எனும் இப்பெயர் எல்லா உயிர்களும் பேசுவதை அறியக்கூடிய ஆற்றலை இறைவன் இவருக்கு கொடுத்ததன் காரணமாய் ஏற்ப்பட்டது என்பதனை மேற்கண்ட  பெரியபுராணபாடல் உணர்த்துகிறது.

சுந்தரருடன் இவரது வரலாறு இணைத்துக் கூறப்படுவதால் இவரது காலம்(667-713) என உறுதியாய் கூறலாம்.  மலைநாடான சேரநாட்டில் கொடுங்களூரில் தோன்றியவர் இவர். முற்பிறவியில் செய்த தவம் காரணமாய் தனக்கு உரிமையான இளவரசர் பதவியிலிருந்தும் அதற்குரிய கடமையை செய்யாமல் திருவஞ்சைக்களம் கோவில் அருகேயே மாளிகை அமைத்து அங்கேயே சிவத்தொண்டுபுரிந்து வந்தார். தினமும் அதிகாலை எழுந்து திருநீறு பூசி, இறைவனுக்கு பூமாலை சூடி ,தானே பதிகம் இயற்றி திருவஞ்சைக்கள மகாதேவரை பாடுவதையே வழக்கமாய் கொண்டு வழிபட்டு வந்தார்.

 அச்சமயம் சேரநாட்டில்  "செங்கோற் பொறையன்" என்பவன் ஆண்டு வந்தான் இவன் கூண்பாண்டியன் எனும் அரிகேசி பாண்டியனிடம் பாழி-நெல்வேலி ஆகிய இடங்களில் பலமுறை தோழ்வியுற்றான். கடைசியாய் செந்நிலபோரிலும் தோழ்வியுற்றான். ஆகவே, விரக்தியுற்று,அரசவாழ்வை துறந்து தவம் மேற்கொள்ள சென்றான்.அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றிய மற்றொரு கிளையான(பொறையன், உதியன் என இருகுலம் உண்டு) கோதை மரபினனான திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர். திருவஞ்சைக்கள இறைவனிடம் அருள்வாக்கு கேட்டு அதன்பின் அரசனாக பதவியேற்க இசைந்தார். அமைச்சர் விதித்த நன்னாளில் உயரிய மங்கலச்சடங்கு செய்து பெருமாக்கோதையை அரசனாய் அறிவித்தனர். அதன்பின் பட்டத்துயானையில் வெண்கொற்றக்குடையுடன் பவனிவந்தார். அப்போது வண்ணார் ஒருவன் வியர்வைமழையில் கரைந்த உவர்மண் மேனியுடன் எதிரே வந்தான். பார்ப்பதற்கு உடலெங்கும் திருநீறு பூசிய அடியாரைப்போல தோற்றமளித்தான். உடனே யானையிலிருந்து இறங்கி அவனை வணங்கினார். அவன் அச்சம் கொண்டு  அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான் என்று கூறக்கேட்டு "அடியேன் அடிச்சேரன்" சிவவேடத்தை எனக்கு நீவிர் நினைவுடுத்தினீர் வருந்தாது இனி நீவிர்செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார். சிங்கமுக அரியாசனையில் அமர்ந்து, சிற்றரசர் திரை செலுத்த, நங்கையர் சாமரம் வீச மலர்களைத்தூவ அரசு ஏற்று அருளினார்.அயல்நாட்டு அரசரிடம் பகைமை கொள்ளாது வேதநெறி தழைக்க ஆட்சிசெலுத்தினார். தில்லைக்கூத்தனின் திருவடியை(குஞ்சிதபாதம்) நாளும் எண்ணி வாழ்ந்தார். தினமும் தில்லைக்கூத்தரை எண்ணி சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது  வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அருளுவார்.

 மதுரையம்பதியை சேர்ந்த பாணபத்திரன் எனும் புலவன் வறுமை காரணமாய் இறைவனிடம் வேண்ட,  கனவில் தோன்றிய ஈசன், "என்பால் அன்புகொண்ட சேரன் உனக்கு பொற்கானம், பட்டாடை, நவமணிகளை உனக்கு குறையில்லாமல் அள்ளி வழங்குவான்" என கூறினார். பாணபத்திரருக்கு ஒப்பற்ற செல்வக்குவியலை கொடுத்தனுப்புக எனும் பொருளில் "மதிமலைபுரிசை" எனும் திருமுகப்பாசுரம் ஏட்டில் எழுதி கொடுத்தனுப்பினார். உடனே மலைநாடுநோக்கி பயணித்தார் பாணபத்திரர். சேரனின் மாளிகையை அடைந்தார். தன் மாளிகை வந்ததன்நோக்கமறிந்து அவர்கையில் இருந்த ஓலையை படித்த சேரன் மகிழ்ச்சியில் நா குழர, கண்ணில்நீர் பெருக ஆனந்தகூத்தாடினான். நிலத்தில் பலமுறை விழுந்து வணங்கினார். உடனே தன் அமைச்சரைநோக்கி கருவூலத்திலிருந்த அனைத்துவகையான செல்வங்களையும் ஒன்றுவிடாமல் மூட்டைக்கட்டி வரச் செய்தார். மேலும் யானை, குதிரை முதலானவற்றையும் தன்னுடைய அரசுரிமையும் எடுத்துக் கொள்ளவும் என்றான் அந்த சேரமான்.  ஆனந்தத்தில் உறைந்த பாணபத்திரர் செல்வத்தைமட்டுமே நான் பெற்றுகொள்கிறேன் வேறு ஏதும் வேண்டா எனகூறி தந்தமுடைய பெரிய சேரநாட்டு களிற்றுமேலேறி, செல்வம் நிறைந்தபொதிகள் சூழ சென்றார். அவர்செல்லும் வரை மார்பில் கைச்சேர்த்து வணங்கி வழிய்னுப்பி வைத்தார்.

சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்ய விரும்பினார், நாள் தோறும் பூசை முடிவில் ஒலிக்கும் சிலம்பொலியைக் காலந் தாழ்த்தி ஒலிக்குமாறு அருளினார். சேரமானார் இவ்வாறு நிகழ தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற்றார்.அப்போது தில்லையம்பதியில்  சுந்தரர் நம்மைப் பாடிக் கொண்டிருக்க அப்பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்க சிறிது காலம் தாழ்க்க நேர்ந்தது என இறைவன் திருக்குறள் அசரீரியாய் கேட்டது.ஈசரையே மகிழ்வித்த அந்த சுந்தரர் பெருமானைத் தரிசித்து மகிழ வேண்டி, நன்னீர்சூழ்ந்த சோழநாடு நோக்கி செல்ல தீர்மானித்து சிலரை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு கொடுங்களூரை நீங்கி சோழநாடு நோக்கி பயணித்தார். ஆசைதீர பொன்னிநதியில் நீராடி திருப்பெரும்பற்றப்புரியூரை அடைந்து அவ்வூர் ஈசனை வணங்கினார். இத்தனைநாள் தன் மனதில் காண எண்ணிய தில்லையை  அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாக அங்கு திருச்சிலம்பொலி காட்டியருளினார் ஈசர்.

அச்சமயம் திருநாகைக்காரோணம் சென்று திருவாரூர் வந்தடைந்தார் சுந்தரர். சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார் சேரமான். காணததை கண்டதாய் இருவர் மனமும் பூரிப்படைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக் கிணங்கி  அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார். பறவையார் தினமும் அறுசுவை உணவைபடைத்து உபசரித்தார். பின் இருவரும் மதுரையம்பதியை தரிசிக்க எண்ணி கிளம்பினர். பாண்டியநாடடைந்து பிறைசூடிய இறைவனின் திருப்புத்தூரை அடைந்தனர். மணிமாடங்கள் நிறைந்த தொன்நகரான மதுரையை வந்தடைந்தனர். இருபெரும் அடியார் வருவதனை அறிந்த மதுரைமன்னன் தானே நேரில் சென்று வரவேற்று நகரில் அழைத்து சென்றான். அம்மன்னன் கோச்சடையான் ரணதீரனே, அதன்பின் இருவரும் திருப்புவனம், திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவேடகம் முதலிய தலங்களை தரிசித்தனர். பின் பாண்டியனிடம் விடைபெற்று தென்பாண்டி தலங்களான திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருராமேச்சுவரம் அடைந்து வணங்கினர், அங்கிருந்து இலங்கை சென்று மாதோட்டம், திருக்கேதீசுவரம் சென்று வணங்கி மீண்டும் பாண்டியநாடடைந்து திருச்சுழியல், திருக்காணப்பேர், திருப்பாம்புணி சென்று வணங்கி மீண்டும் சோழநாடடைய எண்ணி திருக்கண்டியூர், திருவையாறு சென்று வணங்கி அதற்கடுத்து கொங்குநாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர். அதன்பின் மலைநாடான வஞ்சி நகரையடைந்தனர், தன்மன்னர் சுந்தரருடன் வருகிறார் என்பதனையறிந்த அமைச்சர், மக்கள் சேரநாட்டையே அலங்கரித்தனர். இருவரும் கொடுங்கோளூர் சென்றடைந்தனர். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ் வித்தார். அதன்பின் ஆரூரார் நினைவு வர சுந்தரர் சேரமானிடம் பிரியாவிடை பெற்று கிளம்பினார். அதன்பின் மீண்டும் சேரமானின் நினைவுவர மீண்டும் கொடுங்களூர் வந்தடைந்தார் சுந்தரர். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம்  இறைவரை வணங்கி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். சுந்தரருக்கு அருள்புரிய விரும்பிய ஈசர், சுந்தரரை திருக்கயிலாயத்திற்கு  அழைத்து வர இந்திரனையும், தேவகணங்களையும் பணித்தார்.தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது விருப்பத்தை தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி "தானெனை முன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரையின் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர். சுந்தரர் தான் முன்சென்று ஈசனிடம், தம் நண்பான சேரனின் வருகையும் தெரிவித்து விண்ணப்பித்தார். ஈசன் சேரனை உள்ளே அழைத்து"இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?"என சேரனிடம் கேட்க, அதற்கு அவர் ஈசன் முன்னரே திருக்கயிலாய ஞானஉலாவை இறைவன் முன்னே கயிலாயத்திலேயே இயற்றி பாடும் பெறும்பேறு பெற்றார்(சுந்தரர் புராணத்தில் இவற்றை விரிவாய் காண்போம்) அதன்பின் சுந்தரரோடு சேரமானும் சிவகணங்களாய் திகழ்ந்து திருக்கயிலாயத் தொண்டு புரிந்தனர்.

"கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
சுவரோவியம் : தஞ்சை பெரியகோவில்

#தினம்ஒருஅடியார்
#கழறிற்றறிவார்
#முப்பத்துஆறாம்நாள்




சிறப்புலி நாயனார்

தினம் ஒரு அடியார்-35

சிறப்புலி நாயனார்:

சோழநாட்டின் ஆக்கூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: கார்த்திகை பூராடம் இவர் பிறந்த ஆக்கூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. திருஞானசம்பந்தரால் இவ்வூர் இரந்து வரும் யாவருக்கும் இல்லையென சொல்லாத நன்மை பொருந்திய வேதியர் வாழும் நல்ல பதி எனும் பெயர் பெற்றது. இந்நகரில் நாள் முழுவதும் வேதமுழக்கம் ஓங்கி ஒலிக்கும், அகில்புகையும், தூபமும் மக்கள் வாழுமிடங்களில் மறையும்படியாக வேள்விச்சாலையில் எழுந்த ஆகுதிப்புகை ஓங்கிப்பரவும். அவ்வூரினில் உதித்த சிறப்புலியால் அடியார் திருத்தொண்டு புரியும் சிறப்பானவராய் விளங்கினார். சிவனடியார் எவரேனும் எதிரினில் தென்பட்டால் எதிர்சேவைபுரிந்து இன்சொற்கள் கூறி அவர்களை ஆறுதல்படுத்துவார். மேலும் அவர்களுக்கு இனிய உணவினை தினமும் அளித்து அவர்கள் விரும்பும் பொருட்களை பரிசளித்து அதனால் பெரும் இன்பத்தினை பெற்று உவந்தார். இத்திருத்தொண்டினால் "நிதிமழை பொழியும் மேகம்" எனும் சிறப்பினை அடைந்தார்.அதனாலேயே சுந்தரர் இவரை ‘சீர்கொண்ட புகழ் வள்ளல்’ எனப் போற்றியுள்ளார்.

மேலும் இவ்வுலகில் நன்மைதரும் வேள்விகளை சிவன் திருவடிகளை பொருந்தச்செய்யுமாறு நடத்தினார். சிவனடியார் யாவருருக்கும் இல்லையென கூறாமல் இடையறாது வழங்கும் வள்ளல்தன்மை படைத்தவர் சிறப்புலியார், இறைவன் திருவடிப்பேறு ஒன்றையே சிந்தை செய்தவராய் வாழ்ந்து வரலானார். அறங்கள் பலபுரியும் அந்தணர் நிறைந்த திருவாக்கூரில் வாழ்வாங்கு வாழ்ந்து இறைவன் திருவடிநிழல் அடையும் பேற்றை பெற்றார் சிறப்புலியார்.

"சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#முப்பத்துஐந்தாம்நாள்
#சிறப்புலிநாயனார்





சாக்கிய நாயனார்

தினம் ஒரு அடியார்:34

சாக்கிய நாயனார்:

திருச்சங்கமங்கையில் வேளாண்மரபில் தோன்றியவர் இவர். சாக்கியம் எனப்பட்ட பௌத்த மதத்தினை பின்பற்றியவர், இவரது இயற்பெயர் தெறியவில்லை.
இவரது பூசைநாள்: மார்கழி பூராடம்
இவர் பிறந்த திருச்சங்கமங்கை காஞ்சிபுரம் அருகேயுள்ளது என பொதுவாய் அனுமானிக்கப்படுகிறது. வழக்கமாய் சேக்கிழார் அனைத்து அடியார்களைப்பற்றி கூறும்போது முதலில் அவரது நாட்டைப்பற்றி குறிப்பிட்டு அவ்வூரின் வளமைகளை கூறுவார். ஆனால் சாக்கியரின் ஊரைப்பற்றி குறிப்பிடுகையில் அவரது நாடு பற்றி எந்த தகவலும் கூறாமல் விட்டுவிட்டார். ஆகவே அவரது முக்திதலமாய் கூறப்பட்ட காஞ்சி கோனேரிகுப்பம் அருகேயுள்ள வீரட்டானேஸ்வரரை கணக்கில் கொண்டு பொதுவாக காஞ்சியில்தான் தோன்றினார் என்று கருதுகின்றனர். சங்க+மங்கை, சங்கம் என்பது, புத்தம், தம்மம், சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. பௌத்த பிக்குகளுக்குச் சங்கம் என்று பெயர். எனவே சங்கம் மங்கை என்கிற பெயர் அவ்வூருக்கு வந்திருக்கலாம்.அக்காலத்தில் காஞ்சியில் பௌத்தகாஞ்சி என்ற பெரிய ஊர்இருந்தது. சாக்கியர் எனும் பௌத்தரும் நிரம்ப காஞ்சியில் இருந்தனர்.  ஆகவே அன்றைய பௌத்தகாஞ்சி பகுதியிலே சாக்கியர் தோன்றியிருக்கலாம்.
மெய்ஞானம் பெறவேண்டி சாக்கியர்களின் அரிய (திரிபிடகம்)கலைநூல்களை கற்றபின், தான்இருந்த சமயநெறியை விட உயர்ந்தது சைவநெறியே என உணர்ந்தார். ஆனால் பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் அன்று இருந்தமையால் வெளிப்படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமல்போயிற்று, இவரின் காலத்தில் சைவத்தை விட பௌத்தம் செல்வாக்காய் இருந்தது தெரியவருகிறது,  எனவே இவர் நிச்சயம் பக்திமார்க்கம் வலுப்பெற்றிருந்த 7 ம் நூற்றாண்டிற்கு முன் தோன்றியவர் என கருதலாம்.
இவர்  சாக்கியவேடம் கலையாமலே ஈசன்மேல் அன்பு கொண்டார். உயர்வான இறைவனின் அருட்குறியை கண்டு வணங்கிய பின்னரே உணவு உண்ணவேண்டும் என்பதனை வழக்கமாய் கொள்ள வேண்டும் என நினைத்தார். இதனை மற்ற சாக்கியர் பார்த்தால் தம்மை உண்டுஇல்லை என பண்ணிவிடுவர், என்ன செய்வதென யோசித்து, பக்தி மிகுதியால், கீழே கிடந்த சிறுகல்லை பூவாக எண்ணி வீசியெறிந்தார். இதனைகண்ட பிற சாக்கியர் சிவலிங்கத்தை ஓர் சாக்கியர் கல்லால் எறிகிறார், என எண்ணி அகமகிழ்ந்தனர்.

தன்குழந்தையை தூக்கிமகிழும் பெற்றோரை, குழந்தை அறியாது தாக்கி அதனால் காயம் உண்டாகினால், பெற்றோர் எவ்வாறு இன்முகத்துடன் காயத்தை மறைத்து மகிழ்வாரோ, அதேபோல் சாக்கியரின் கல்லெறிபூஜையை மகிழ்வுடன் ஏற்றார் ஈசர். தொடர்ந்து கல்லெறிந்ததால் ஈசன்மேனியில் வடு உண்டாயிற்று. அதனைகண்ட சாக்கியர், ஈசன் தன்பூஜையை மகிழ்வுடன் ஏற்றதாய் கருதினார். அதேசமயம் சாக்கியர் எவரும் தன்சிவபக்தியை அறியா வண்ணமும் பார்த்துக்கொண்டார். அன்பினால் விளைந்த இச்செயலை, இதற்கு முன்னர் நாம் கண்ணப்பநாயனாரில் வாயிலாய் கண்டோம். ஈசனை வணங்குவதற்கு ஆகமங்கள் ஏதும் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபனம் செய்தவர்கள் இவ்விருஅடியார்கள்.பௌத்தராகிய சாக்கிய நாயனார் சைவம் ஏற்று, நாளும் ஒரு கல் எடுத்து எறிந்து சிவனை வழிபட்டார் என்பது காஞ்சி சமய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு நிகழ்வாகும். சாக்கியரின் இத்தொண்டினை உலகறியச்செய்ய ஈசன் எண்ணினார். ஒருநாள் சாக்கியர் கல்எறிதல் நிகழ்ச்சியை மறந்து உணவருந்தினார், அதன் பின்னரே அவருக்கு உணர்வு வந்து விரைவாய் ஈசனைநோக்கி ஓடினார்.அங்கே தன் பிறவிப்பிணியை நீக்கும் கல் ஒன்றை எடுத்து எறிந்தார். அப்போது தன்இணையுடன் காளை வாகனத்தில் வானில் தோன்ளினார் ஈசர். மகிழ்ச்சி பொங்கும் வண்ணம் மண்ணில் விழுந்து வணங்கினார் சாக்கியர்.தன்திருவடிப்பேற்றை சாக்கியருக்கு வழங்கி மறைந்தார் ஈசர்.

"வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சாக்கியநாயனார்
#முப்பத்துநான்காம்நாள்



சோமாசிமாற நாயனார்

தினம் ஒரு அடியார்-33

சோமாசிமாற நாயனார்:

சோழநாட்டு திருவம்பரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: வைகாசி ஆயில்யம்
சுந்தரருக்கு நண்பராய் இவர் வருவதால் இவரது காலம் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலமாய் கருதப்படுகிறது, அதாவது 9ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என உறுதியாய் கூறலாம். இவர் பிறந்த அம்பர் காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஓர் ஊர், திருவாரூர் மாவட்டத்தில் இவ்வூர் உள்ளது. மாமரங்கள் நிறைந்துள்ள சோலைகள் நிரம்ப உள்ள ஊரில்,வேதங்களை பயிலும் அந்தணர் குலத்தில் பிறந்தவர், சிவனடியாரை எதிரில் கண்டால் கையெடுத்து வணங்கி, அவருக்கு அமுதூட்டி வழியனுப்புவதை வாழ்நாள் கடனாய் கொண்டவர். சிவமந்திரத்தை நாள்தோறும் ஓதி,ஏழ் உலகங்களும் மகிழும்படி செய்து சிவனின் திருவடியை போற்றுவதே எனும் சிந்தையுடையவர், சிவனுக்கு அன்பர் எனில் அவர் எத்தகைய தன்மை உடையவராயினும், எந்த குலத்தைச் சேர்ந்தவராயினும் அவரே நம்மை ஆளாகவுடையவர் என்று கருதுவார். சைவநெறி தலைத்தோங்கசெய்த திருவாரூரைச் சேர்ந்து ஆரங்கள் விளங்கும் மார்பையுடைய வன்தொண்டரான சுந்தரரின் பெருநட்பினை பெற்றவர். அவருடைய திருவடிகளிலே சரணடைந்து, அவருடனே பயணித்து, அதனாலே சிவபதத்தைப் பெற்றார். முடிவில் குருவருளும், திருவருளும் பெற்று இறைவர் திருவடி நிழலை அடைந்தார்.

“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” 

#தினம்ஒருஅடியார்
#சோமாசிமாறநாயனார்
#முப்பத்துமூன்றாம்நாள்

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்



மூர்க்க நாயனார்

தினம் ஒரு அடியார்-32

மூர்க்க நாயனார்:

தொண்டைநாட்டில் பாலியாற்றின் கரையிலுள்ள திருவேற்காட்டில் வேளாண் குடியில் பிறந்தவர் இவர்.
 இவரது பூசைநாள்: கார்த்திகை மூலம்.
சேக்கிழார் குறிப்பிடும் பாலி ஆறு என்பது எது? இன்றைய திருவேற்காடு தலத்திற்கு அருகே கூவம் ஆறுதான் ஓடுகிறது. கலிங்கத்துப்பரணியில் கருணாகரத்தொண்டைமான், கலிங்கம் நோக்கி செல்லுகையில்,
"பாலாறு குசைத்தலை பொன் முகரிப் பழவாறு
 படர்ந்தெழு கொல்லிஎனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
 நதியாறு கடந்து நடந்துடனே ..." என்ற வரி வருகிறது! முதன்முதலாய் இங்குதான் பாலாறு பற்றிய குறிப்பு வருகிறது! இன்றைக்குப் பாலாறு காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாய்ந்து கொண்டிருப்பதால் பரணியில் பாடப்படுவது இந்தப் பாலாறு அல்ல எனக் கூறலாம். மாறாக, காஞ்சிபுரத்திற்கும் குசைத்தலை ஆற்றிற்கும் இடையே பாலாறு காட்டப்படுவதால், இது பாலி ஆற்றையே (பழைய பாலாற்றை) குறிக்கிறது என்பது தெளிவு.
 இதுகாறும் பேசப்பட்ட இலக்கியக் குறிப்புகளால், பாலி ஆறு என்பது பழைய பாலாற்றினையே குறிக்கிறது என்றும், தக்கோலத்திற்குக் கிழக்கேயுள்ள பழைய பாலாற்றின் பகுதி இன்று கூவம் ஆறு என்று வழங்கப்படுகிறது என்றும் அறியலாம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த திருவேற்காட்டில் பிறந்தவர் இந்த அடியார்.சிவபெருமானின் அடியார்களுக்கு உணவளித்து, அவர்கள் உண்டபின்னே தான்உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார். உயர்ந்த தூய்மையான சோறும், நெய், வெல்லம், சுவையுடைய இனிய காய்கறிகள் ஆகியவற்றை தேடித்தேடி பணமளித்து வாங்கி அடியார்களுக்கு ஆகாரம் படைப்பார். இவரது கொடையினை கேள்விப்பட்ட அடியார்படை தினமும் உணவருந்த படையெடுத்ததால், செல்வந்தெரான இவர் தனது, உடைமை, அடிமைகள்(?) ஆகியோரை விற்று உணவளிக்கும் நிலைக்கு ஆளானார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். ஆயினும் அடியாருக்கு உணவளிக்கும் செயலை நிறுத்தவில்லை. பொருள்களெல்லாம் விற்றாயிற்று அடுத்து விற்பதற்கு ஏதுமில்லை! அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இளம்வயதில் அவர் சூதாட கற்றிருந்தார். ஆகவே பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார். சூதில் பலபொருள் சேர்த்து அதன்வாயிலாக அடியார்களுக்கு உணவளித்து வந்தார். நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். இதனாலேயே இவர் "மூர்க்கர்" என அழைக்கப்பட்டார்.
இவரது செய்கை காரணமாய் உள்ளூரில் விளையாட பயந்து ஒருவரும் வரவில்லை, ஆகவே வெளியூர் சென்று விளையாடி வென்று, அவ்வூரிலுள்ள அடியார்களுக்கு உணவளித்து, அதனைகண்டு மகிழ்ந்து கடைசியில் தாமும் உண்பார். இச்செய்கையை தினமும் செய்து இறுதிகாலம் வரை அடியார்களுக்கு உணவளித்துக்கொண்டே இறுதியில் ஈசன் திருவடியை அடைந்தார்.

"மூர்க்கருக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#மூர்க்கநாயனார்
#முப்பத்தியிரண்டாம்நாள்




தண்டியடிகள் நாயனார்

தினம் ஒரு அடிகள்-31

தண்டியடிகள் நாயனார்:

"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார்தாமே" என்று அப்பர் திருவாரூர் கமலாலய குளத்தை கூறுவார் அப்பர். அப்புனித குளத்தினை தூய்மை செய்யும்பேறு பெற்றவர் தண்டியடிகள். பிறந்தாலே முக்தி என்று கருதக்கூடிய சோழநாட்டின் திருவாரூரிலே பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: பங்குனி சதயம்
இவர் செங்குந்தர் மரபில் தோன்றியவர். பிறவியிலேயே கண்பார்வை இழந்த இவர், தன் அகக்கண்களால் ஈசனுக்கு ஓர் உரு கொடுத்து, அவ்வுருவத்தை மனதில் எண்ணி போற்றி வந்தார். நமசிவாய எனும் மந்திரத்தையே நாளும் போற்றிவந்தார். திருவாரூரின் புண்ணியகுளமான கமலாலய குளம், அருகேயுள்ள சமணரின் பாழிகளாய் ஆக்கித் தூர்க்கப்பட்ட இடத்தில் குறைபாடு உண்டாயிற்று. அன்பினால் நான் இந்த குளத்தை அகலாமாய் பெருகும்படி தோண்டிட வேண்டும் எனும் உள்ளத்துணிவுடன் அதனை மேற்கொண்டார். திருக்குளத்தினுள்ளே  ஒருதறி நட்டு, அதிலே கயிறு கட்டி, கரையிலும் தறி நட்டு, அக்கயிற்றினுனியை அதனில் இசையக் கட்டி, மண்வெட்டியையும் கூடையையும் எடுத்து, அக்கயிற்றைத் தடவிக் கொண்டு சென்று, மண்ணைக் கல்லிக் கூடையில் எடுத்துக் கொண்டு, மீண்டும் அக்கயிற்றைத் தடவிப் போய்க் கரையிலே போடுவார் இப்படித் தினந்தோறும் மிகுந்த விருப்பத்துடன் மண்ணை மேலே கொட்டினார். இதனைகண்டு மனம்பொறுக்காத சமணர், மண்ணை தோண்டாதீர், அவ்வாறு தோண்டினால் அதிலுள்ள உயிர்கள் இறக்கும் என வாதிட்டனர். அழுக்குபடிந்த முடைநாற்றமுடைய சமணர்(சேக்கிழார் அவ்வாறே கூறுகிறார்)சொன்ன மாற்றத்தை கேட்டு அதற்கு எதிர்மொழியாய், சிவனுக்குரிய திருப்பணிகள் எவையாயினும் அவை எல்லாமே குற்றம் அல்ல, நல்அறமே என்றார். அதற்கு மறுமொழியளித்த சமணர், அவரது ஊனத்தை கிண்டல் செய்து, "நாங்கள் கூறியதை ஏற்காவிடின் உனக்கு கண்ணுடன் சேர்ந்து காதும் கேளாமல் போய்விடும்" என்றனர். அதற்கு தண்டியடிகள்,  "என்அகக்கண்ணால் மேருமலையான வில்லினால் முப்புரங்களை எரித்த ஈசனை காண்பேன், அதுதவிர மற்றது எதுவும் எனக்குபிழையே! என் ஈசன் அருளால் உம்மைப்போல் புறவிஷயங்களை காணும் பொருட்டு கண்பார்வை அடைந்தால் என்ன செய்வீர்?" என எதிர்கேள்வி கேட்டார்.

 சமணர்கள் "நீ உன் கடவுளின் அருளினால் கண்பெற்றுவிட்டால், நாங்கள் இவ்வூரில் இருக்கமாட்டோம்" என்று சொல்லி, அவருடைய மண்வெட்டியைப் பறித்துக் குறித்தறிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். சமணரின் இக்கொடுஞ்செயலால், ஆற்றாமையும் கொடுஞ்சினமும் ஏற்ப்பட்டது தண்டியடிகளுக்கு, கண்ணீர்மல்க ஈசனை வேண்டினார், "எம்பெருமானே சமேணர் வலியவந்து என்னை கொடுஞ்சொல்லால் அவமானபடுத்தினர், நீவிர் இவ்வெளியோனுக்கு அருளவேண்டும்" என வேண்டினார். அன்று இறைவனுக்கு செய்யும்பணி தடைபட்டு வருத்தத்துடன் உறங்க மடம்புகுந்தார். மனவருத்தத்துடன் உறங்கினார். உடனே ஈசன் அகக்கண்ணில் தோன்றி,

[நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித் தந்த 
 வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
 அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே 
 துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்]

மனதில் நீ கொண்ட கவலையை ஒழி! உன் கண்களை விழித்துப்பார்! அந்தச்சமணர் தம் கண்கள் மறையும்படி நீ காண்பாய்!அஞ்சவேண்டா என கூறி மறைந்தார். அன்றே சோழமன்னன்
கனவிலும் தோன்றி நடந்ததைக்கூறி தண்டியடிகளின் கருத்தை முடிப்பாயாக என அருளினார்! விழித்தெழுந்த மன்னனும்,தண்டியடிகள் மடத்திற்கு சென்று தான் கண்ட கனவினை கூற, தண்டியடிகளும் முதல்நாள் நடந்த நிகழ்வினையும் தான் கண்ட கனவினையும் கூறி, தகுந்த நீதி வழங்க வேண்டினார். மன்னனும் இறைவன் கூறியபடி நடந்து காட்டுவீராக என ஆணையிட, தண்டியடிகள் கமலாலய குளத்தில் ஈசனை நினைத்து மூழ்கினார், அனைவரும் வியக்கும்வண்ணம் கண்பார்வை பெற்றார். சமணர்களோ பார்வையிழந்து தடுமாறினார்கள். சோழமன்னன் உடனே, சமணர் அனைவரையும் திருவாரூர் நகரைவிட்டு விலக ஆணையிட்டார். சமணர்களின் பள்ளியையும், பாழிகளையும் இடித்து நொருக்கினார். பாழடைந்த கமலாலய குளத்தினை தூர்வாரி, ஆழப்படுத்தினார்.கரையை ஆக்கிரமித்த இடங்களை அப்புறப்படுத்தி கரையை உறுதியாக்கினார். அகக்கண்ணுடன் வாழ்ந்து ஈசன்அருளால் புறக்கண்ணையும் பெற்ற தண்டியடிகள் மண்ணில் நிலைபெற வாழ்ந்து இறைவன் திருவடிஅடைந்தார்.

“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#தண்டியடிகள்நாயனார்
#முப்பத்தொன்றாம்நாள்



Tuesday, 5 May 2020

திருமூலர்

தினம் ஒரு அடியார்-30

திருமூலர்
:
பத்தாவது திருமுறையான திருமந்திரமாலையினை திருவாவடுதுறையிலிருந்து அருளியவர் இவர். இவரது இயற்பெயர் மூலன்.
அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில்  இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். கும்பகோணம்-திருவாவடுதுறை சாலையிலுள்ள சாத்தனூரில் தோன்றியவர் இவர்.
 இவரது பூசைநாள்: ஐப்பசி அஸ்வினி.
இவரது காலம் குறித்து நிறைய முரண்பாடுகள் உண்டு. சிவபெருமானை உருவழிபாடற்று வணங்கும் நிலையிலிருந்தபோதே இவர் வாழ்ந்ததாய் கூறுவர். இவரது பாடல்கள் எழுத்துநடை பிற்காலத்தியதாய் தோன்றினாலும், அவை பின்னால் கிடைத்ததை தொகுத்து கூறியதே எனும் கருத்தும் உண்டு. இவரது வரலாறு அகத்தியரோடு இணைத்து கூறப்படுகிறது. அகத்தியரே துவரைப்பகுதியிலிருந்து பதினெட்டு வேளிர்களை அழைத்து வருவதாக சங்ககாலபுலவர் கபிலர் கூறுவார். இதிலிருந்து அகத்தியரின் தொன்மையையும், அவரை சந்தித்த திருமூலரின் தொன்மையையும் அறியலாம். அப்படியில்லையாயின் அகத்தியர் பலர் இருந்திருக்கலாம்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270

இந்த ஒருபாடலே திருமூலரின் உயரிய சிந்தனையை உலகிற்கு உணர்த்தும்.

திருக்கயிலாயத்திலேயே நந்தியம்பெருமானின் ஆசிபெற்ற யோகியர் ஒருவர் இருந்தார். அவர் அகத்தியரிடம் நட்புகொண்டு, அவர்தங்கியிருந்த பொதிகைமலையை அடையும்பொருட்டு, திருக்காளகத்தி, சிதம்பரம்,திருவாவடுதுறை தலங்களுக்கு  சென்றார். அவ்வாறு செல்லுகையில் பசுக்கூட்டங்கள் ஓரிடத்தில் அழும் ஓசை கேட்டார்.

இடையர்குடியில் பிறந்து தன் மரபுப்படி பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார் மூலர். அப்போது அவரதுகாலம் முடிந்துவிட்டதால் கூற்றுவன் அவரது உயிரைப் பறித்தார். உயிரில்லா உடலைகண்டு பசுக்கள் வருந்துதலை கண்டு இப்பசுக்கள் அடைந்த துன்பத்தை ஒழிப்பேன் என உறுதி கொண்டார். தன் உடலை பத்திரமாய் ஓரிடத்தில் காவலில் வைத்து, மூலரின் உடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்தார் அந்த யோகியர்.

[பாய்த்தியபின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம்
 நாத்தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப் பொடு நயந்து
 வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின்
 நீத்த துயரினவாகி நிரைந்து போய் மேந்தனவால்]

உயிரைசெலுத்திய யோகி திருமூலராய் எழுந்தார்.பசுக்கூட்டம் மகிழ்ச்சியுற்று தம் நாவினால் தடவின, வால்கள் மகிழ்ச்சியினால் மேல்நோக்கி எழும்பியது. துன்பம் நீக்கி வரிசையாய் நின்று மேய்ந்தன. பொழுதுமங்கியதும் பசுக்கூட்டத்தினோடே பின்சென்று வீடடைந்தார். தயக்கம் காரணமாய் வெளியேநின்றார். மூலரின் மனைவி இன்று ஏன் இவ்வளவு தாமதம்?  என கடிந்துகொண்டே உடற்தீண்ட, பதறிப்போன திருமூலர், உமக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றார். பின் அங்கிருந்து பொதுமடம் போய் தங்கினார். அன்று முழுவதும் எவருடனும் பேசவால்லை. மூலரது செய்கையை கண்ட அவரது மனையாள், மறுநாளே உறவினர்களை அழைத்து வந்து நடந்ததை கூறினாள். அவர்கள் பண்டுவம் பார்ப்பவரை அழைத்து மூலரின் நாடியை பிடித்து
பார்க்க, நாடி சரியாய் இயங்கியது, பின் அனைவரிடமும் சென்று இது பித்தம் உண்டானதால் வந்த மயக்கம் அன்று, வேறு ஏதோ ஓர் சார்பு இவருக்குள்ளது. உள்ளத்தின் வேறுபாடு நீங்கி, சியோகத்தில் அழுத்திய கருத்தை இவர் அடைந்துள்ளார். இத்தன்மை யாராலும் அளவிடற்கு அரியதாம் என்றனர். அதனைகேட்டு மயங்கினாள் மூலரின் மனையாள். இனிமேல் இவருடன் இல்வாழ்க்கை நடத்த இயலாது என உணர்ந்து உறவினர் அழைத்து சென்றனர்.

சிவயோகியார் ஏற்கனவே தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

அதைத் தேடி அவர் அங்குச் செல்லவும், அவ்வுடல் அந்த இடத்தில் காணப்படவில்லை. எல்லாம் இறைவன் செயலேயாகுமென முற்றிலும் உணர்ந்த மூலனுடலில் தங்கியிருந்த சிவயோகியார் திருவாவடுதுறையின் திருக்கோயிலின் மேற்றிசையில் இருந்த ஒர் அரச மரத்தின் கீழ் பல ஆண்டுகள் யோக நிட்டையில் அமர்ந்தார். இறைவன் தந்த ஆகமப் பொருளை, இறைவன் திருவருளால், திருமந்திரம் என்கின்ற ஒப்பற்ற தமிழ் வேதமாம் மூவாயிரம் பாடல்களில் பாடினார். பின் ஈசன் திருவருளால் திருக்கயிலாமடைந்தார்.

”குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளஃன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டெனுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல நாகின்ற அங்கணனே"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#திருமூலநாயனார்
#முப்பதாம்நாள்



ஏயர்கோன் கலிக்காமர்

தினம் ஒரு அடியார்-29

ஏயர்கோன் கலிக்காமர்:

சோழநாட்டின் திருப்பெருமங்கலத்தில் ஏயர்குடியில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஆனி ரேவதி
வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து திருபுன்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருபெருமங்கலம்.  காவிரியின் வடகரையிலுள்ள இவ்வூரில் நிறைய அழகிய மாளிகைகள் கொண்ட ஊராகும்.செழுமையான உழவுத்தொழிளால் நீங்காத வளமைகளை பெற்றிருந்தது இவ்வூர். கலிக்காமர் பிறந்த ஏயர் குடியானது சோழஅரசர்களின் படைத்தலைவராக தொன்றுதொட்டு வரும் ஒரு குடியாகும். திருநீற்றை விரும்பும் ஈசனின் அடியைப் பற்றுவதே நிலையான செல்வம் எனும் கருத்தினை உடையவர்.
சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்த இவர், சுந்தரர் சிவபெருமானை பரவைநாச்சியாரிம் தூது விட்டதை கேள்விப்பட்டிருந்தார்( இக்கதையினை சேக்கிழார் 75 பாடல்களில் கூறுகிறார்)
இவரெல்லாம் ஒரு மனிதரா? இது என்ன பாவம்!ஈசனையே தூது விடுகிறாரே! என அவர்மேல் வெறுப்பு கொண்டிருந்தார். ஒரு பெண்ணிற் பொருட்டு ஈசனையே தூது விட்டவனை நேரில் கண்டால் என்னவோ செய்துவிடுவேன்! என சினத்தால் பொருமினார். கலிக்காமரின் இந்த கோபத்தினை கேள்விப்பட்டார் சுந்தரர். தன் செயலுக்காக வருந்தினார். ஈசனிடம் கலிக்காமரின் கோபத்தினை போக்குமாறு வேண்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க இறைவன் எண்ணினார்.

கலிக்காமருக்கு கொடிய சூலைநோயை வருவித்தார் ஈசர். தீயில் காய்ச்சிய வேல் உள்ளே குடைவதை போன்று பெரும் துயரம் அளித்தது, மிகவும் மனமுடைந்து ஈசன்திருவடியை விழுந்து வணங்கினார். அவர் ஈசர் காட்சியளித்து, உனது சூலைநோய் வன்தொண்டரான சுந்தரராலன்றி அந்நோய் தீராது! எனகூறி மறைந்தார்.

எம்பெருமானே! எம் தந்தையும், தாத்தனும், அவர்தந்தையும் என வழிவழியாய் தங்கள் திருவடியே சரணம் என தங்கள் பாதம்பற்றி வணங்கி வந்தோம்! இன்று புதிதாக எவனோ வந்துதான் அந்த நோயை தீர்ப்பான் என்று கூறுகிறீர்! 

[மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால் 
 பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே 
 உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக் 
 கற்றைவார் சடையார்தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே]

அந்த வன்தொண்டன் வந்துதான் எனக்கு  நோய் தீருமானால், அதைவிட அந்த சூலைநோயே எனை வருத்தட்டும் என மனமுடைந்து கூறினார். முன்பைவிட சூலைநோய் வாட்டியது கலிக்காமருக்கு, சூலைநோயின் வெப்பபத்தினால் புழுவாய் துடித்தார். சுந்தரரின் கனவில் தோன்றிய ஈசர், வன்தொண்டரே நீவிர் உடனே சென்று எம்கலிக்காமரின் சூலைநோயை போக்குவாயாக! என ஆணையிட்டார். தான் வருவதை ஏவலாளிடம் சொல்லியனுப்பினார் சுந்தரர். இதனை கேட்டு கடுஞ்சினம் அடைந்தார் கலிக்காமர். அவன் வந்துதான் என் நோய் தீருமெனில், அதற்கு இந்த சூலைநோய் வயிற்றைகுத்தி கிழித்து இறந்துவிடுவேன் என கூறி உடைவாளால் தன் வயிற்றை ஓங்கி குத்தி கிழித்தார். அப்போதே கலிக்காமரின் உயிரோடு சேர்ந்து சூலையும் அகன்றது. ஒப்பிலா அவரது மனையாளும் இறக்க முற்படுகையில் சுந்தரர் அங்கு வரும் செய்தியை அறிந்தார்.சுற்றி அழும் உறவினரைபார்த்து "ஒருவரும் அழ வேண்டா" என கூறி, சுந்தரரை வரவேற்கும் வண்ணம் வாயிலை அலங்கரித்தார்.அவரை உயர்ந்த ஆசனத்தில் இருக்க வைத்து வணங்கினார். கலிக்காமரின் மனைவி.
வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் கலிக்காமருடைய சூலையை நீக்கி அவருடன் இருப்பதற்கு விரும்பி வந்திருக்கின்றேன் அவர் எங்கே? என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியாரின்  ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வந்து வணங்கி சுவாமி அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளி கொள்கின்றார் என்றனர். அதுகேட்ட ஆரூரர் தீங்கேதுமில்லை என்றீர்கள் ஆயினும் என் மனம் தெளிவு பெறவில்லை.ஆதலால் அவரை நான் உடனே காணுதல் வேண்டும் என்றார். அது கேட்டு அவர்கள் கலிக்காமர் உடலைக் காட்டினர். கலிக்காமர் குடல்  சரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் நிகழ்ந்தது நன்று யானும் இவர் போல் இறந்து அழிவேன் என்று குற்றுடைவாளைப் பற்றினார்.அவ்வாறு பற்றி வாளைவீசுகையில் ஈசன் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றார். விரைந்து எழுந்து சுந்தரரின் கையிலிருந்த வாளைபிடித்து, வன்தொண்டரான சுந்தரின் பாதம் பணிந்தார் கலிக்காமர். உடனே சுந்தரரும் கலிக்காமர் பாதம் பணிய விரைந்தார். இந்த வியப்பான விடயம் பார்த்த கந்தர்வர், வித்யாதரர் வானிலிருந்து பூமாரி பொழிந்தனர்.
நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் அவரின் இசைவு பெற்றுத் தம்முடைய ஊரான பெருமங்கலக்குடிக்கு திரும்பினார். அங்கு பற்பல  திருத்தொண்டுகள் புரிந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#ஏயர்கோன்கலிக்காமர்
#இருபத்தொன்பதாம்நாள்



திருஞானசம்பந்தர்

தினம் ஒரு அடியார்-28

திருஞானசம்பந்தர்:

காரைக்கால் அம்மையால் தோற்றுவிக்கப்பட்டதாய் கருதப்படும் சைவமதத்தின் பக்திமார்க்க நெறியை சீரியமுறையில் பரவச்செய்த தேவார மூவரில் ஒருவர் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தர். மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று திருநெறியத் தமிழ் பாடினார். "தோடுடைய செவியன்" எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணில் பாடத் தொடங்கி கல்லூர்ப் பெருமணம் எனத்தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சி பண் பதிகம் வரை பாடியுள்ளர். இவர் பாடியவற்றுள் இன்று வரை 386 பதிகங்கள் கிடைத்துள்ளன.இவை மூன்று திருமுறைகளாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இவை பண்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. சேக்கிழார் பெரியபுராணத்தில் இவரை குறித்துதான் அதிகம் பாடல் இயற்றியுள்ளார். "வம்பறா வரிவண்டு சருக்கம்" எனும் இரண்டாம் காண்டத்தில் மொத்தம் 1256 பாடல்கள் சம்பந்தர் குறித்து இயற்றியுள்ளார். சோழவளநாட்டில் பிரமபுரம் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம், கழுமலம் என்னும் பன்னிரு திருப்பெயர்களை உடைய அன்று சீகாழி என அழைக்கப்பட்ட சீர்காழியில் சிவஞானபாதஇருதயர்-பகவதி தம்பதிகளுக்கு மகனாய் அந்தணர் குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் பிறந்தவர் இவர். தந்தை, தாய் இருவரும் புகழ்பெற்ற சைவம் பேணும் தலைமுறைகளில் தோன்றியதால், இயல்பிலேயே தெய்வீககுழந்தையாய் விளங்கினார் சம்பந்தர். ஒருமுறை சிவஞானபாதர் தோணியப்பர் ஆலய தீர்த்தக்குளத்தின் கரையில் சம்பந்தரை அமரச்செய்துவிட்டு தான் குளிக்க, குளக்கரையின் உள்ளே மூழ்கினார். உள்ளேயே மந்திரம் மனதால் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது சம்பந்தருக்கு மூன்று வயது, அச்சம் காரணமாய் குழந்தை பயத்தில் அழுதது.
அப்பொழுது திருத்தோணி நாதர் உமாதேவியுடன் காளை வாகனத்தில் எழுந்தருளினார். உமாதேவியார் தன் மார்புகச்சை விளக்கி திருமுலைப்பாலை தங்கக்கிண்ணியில் அமுதப்பாலை ஞானசம்பந்தருக்குக் கொடுத்தார். அழுகையை நிறுத்தியது குழந்தை.
குளித்துவிட்டு வந்த சிவபாதர் தன் குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைப் பார்த்த போது, யார் கொடுத்தது என்று வினவினார். ஞானசம்பந்தர் தோணியப்பரைக் காட்டினார். அம்மையும், அப்பனும் தாமே வெளிப்பட்டு அருளளித்தமையால் அன்றிலிருந்து, 'ஆளுடைய பிள்ளையார்' எனும் திருப்பெயர் பெற்றார். அப்பொழுது ஞானசம்பந்தர் “தோடுடைய செவியென்” என்ற நட்டபாடை பண்ணில் அமைந்த முதற் பதிகத்தைப் பாடியருளினார். இச்செய்தி தீயாய் சீகாழிக்கு பரவ அனைத்து அந்தனரும் மலர்தூவி தெய்வக்குழந்தை பாதம் பணிந்தனர்.

உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். திருக்கோலக்கா எனும் தலத்தினை நோக்கி வந்தார். "மடையில்வாளை பாய" எனும் பதிகம் இத்தலத்தில் பாடினார். இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது. பாடலுக்கேற்றவாறு கையால் தாளமிட்டுக் கொண்டு பாடினார். கைநோக தாளமிடுவதைக் கண்ட திருக்கோலக்கா இறைவன் சம்பந்தருக்குப் பொற்றாளம் கொடுத்தார். அந்த தாளத்திற்கு உமையம்மை ஓசைக் கொடுத்தார். இதனால் திருக்கோலக்கா இறைவன் திருத்தாளமுடையார் என்றும், அம்மை ஓசைக்கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.( இன்று இவ்விறைவர் சப்தபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்)
திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் சம்பந்தரின் பெருமை கேள்விப்பட்டு அவரதுபாதம்பணிய சீர்காழி வந்தனர். அவர்கள் வருவதை கேள்விப்பட்ட சம்பந்ர் நேரில் சென்று எதிர்சேவை புரிந்து வரவேற்றார். சம்பந்தர் சீர்காழி இறைவனை யாழிசையால் மகிழ்விக்க அவர்கள் இருவரையும் பணிக்க அவ்வாறே செய்தனர். அவர்களிருவரும் ஆரோகண அவரோகண வகையில் இசையால் ஒன்றி வாசித்தனர். பின் சம்பந்தரின் நட்பை இருவரும் பெற்றனர். இவர்களோடு தலங்கள் பலவற்றிற்குச் சென்று அந்தந்த தல இறைவனைப் பாடிப் புகழ்ந்தார். திருநெல்வாயில் என்ற தலத்திற்குச் சென்ற பொழுது இறைவன் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி, ஞானசம்பந்தன் இங்கு வந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு முத்துச்சிவிகை, குடைச்சின்னம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வருமாறு பணித்தார். அவர்களும் இவற்றைச் சம்பந்தருக்கு வழங்கினர்.
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கிற்று. இவரது தந்தை சம்பந்தருக்கு உபநயனச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார். உபநயனநாளில் மறையோர்கள் பல வேதங்களை ஓதி, முப்புரி நூலை அணிவித்தனர். அப்பொழுது மறையோர்கள் தமக்கு ஏற்பட்ட சந்தேகத்தைச் சம்பந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். மந்திரம் தோன்றுவதற்குரிய மூலமந்திரம் எது என்று மறையோர்கள் வினவிய பொழுது “மந்திர நான் மறையாகி வானவர்” என்ற திருப்பாட்டின் மூலம் திருவைந்தெழுத்தே மூலமந்திரம் எனச் சிறப்பாக எடுத்துரைத்தார். முயலகன் நோய் தீர்த்தல்: ஞானசம்பந்தர் நாவுக்கரசருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடிப் போற்றினார். மழநாட்டில் காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்த போது அங்குள்ள கொல்லி மழவனின் புதல்வி முயலகன் என்னும் கொடிய நோயால் வருந்தி, கோவில் சந்நிதியிலே உணர்வின்றிக் கிடந்தாள். இதனை அரிந்த சம்பந்தர், “துணிவளர் திங்கள் துளங்கி விளங்க” என்று தொடங்கும் பதிகத்தைப்பாடி அப்பெண்ணின் நோயை அகற்றினார்.

யாழ்மூரி பாடியமை:

ஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடினார். சம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த தலமான தருமபுரத்தையடைந்தார். அப்பொழுது திருநீலகண்டரின் உறவினர்கள் தங்கள் யாழ் வாசிப்பினால் தான் ஞானசம்பந்தரின் பாடல்கள் சிறக்கின்றன என்று கூறினர். இதைக் கேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தரை வணங்கி, தாங்கள் யாழில் வாசிக்க இயலாத ஒரு பதிகத்தைப் பாடி அருள வேண்டும் என்று கூறினார் சம்பந்தர்.
சம்பந்தர் “மாதர்மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பாடலை யாழில் வாசிக்க இயலாமல் போகவே யாழை முறிக்க முற்பட்ட போது, சம்பந்தர் அதனைத்தடுத்து இது இறைவனின் செயல் என்று கூறினார்.

வாசித்தீரக் காசு பெறுதல்:

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலைச் சென்ற போது, அங்கு கடும் பஞ்சம் நிலவியது. அப்பொழுது திருநாவுக்கரசருக்கு உடனுக்குடன் இறைவன் பொற்காசுகளை வழங்கி வந்தார். ஆனால் சம்பந்தருக்குப்படிக்காசு வழங்குவதில் காலம் தாழ்த்தி வந்தார். அதனை நினைத்து சம்பந்தர் குறிஞ்சிப்பண்ணில் அமைந்த “வாசி தீரவே காசு நல்குவீர்” என்ற திருப்பதிகம் பாடி நற்காசு பெற்று அடியவர்களுக்கு அமுதளித்தார். மேலும், சம்பந்தருக்கு இறைவன் திருவீழிமிழலைக் கோயில் விமானத்திலே திருத்தோணிப் புரத்தைக் காட்டியருளினார். இன்றும் இவ்விமானத்தில் இக்காட்சி காணப்படுகின்றது.

அற்புத நிகழ்வுகள்:

ஞானசம்பந்தர் பாம்பு தீண்டப்பெற்று இறந்த வணிகனை “சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்” என்னும் பதிகம் பாடி எழுப்பிவித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் மூடப்பட்டிருந்த மறைக்கதவத்தைத் திருநாவுக்கரசர் திறக்கவும், சம்பந்தர் மூடவும் பாடினர். இத்தலத்தில் பியந்தைக்காந்தாரப் பண்ணில் அமைந்த கோளறு பதிகம் பாடினார்.
மங்கையற்கரசியாரின் அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்றார். ஆலவாய் இறைவனைப் பணிந்தார். வாதுக்கு வந்த சமணர்களோடு அனல்வாதம் புனல்வாதம் செய்து வெற்றி பெற்றார். கூன்பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருநீற்றுப்பதிகம் பாடினார். திருக்கொள்ளம்புதூரில் “கொட்டமே கமழும் கொள்ளம் புதூர் என்று தொடங்கும் காந்தாரப் பஞ்சமம் பண்ணமைந்த பதிகம் பாடி ஓடம் செலுத்தினார்.
திருப்பூந்துருத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசரைச் சந்தித்தார். பின்பு தொண்டை நாடு சென்றார். திருவோத்தூரை அடைந்தார். அங்கு ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனையாக இருந்தன. இதனை,
“பூந்தோர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி” எனத் தொடங்கும் பழந்தக்கராகம் பண்ணமைந்த பதிகம் பாடி பெண்பனையாக்கினார். மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக விளங்கிய பூம்பாவையை “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை” எனத் தொடங்கும் சீகாமரப் பண் பதிகம் பாடி பெண்ணாக எழுப்பிவித்தார்.

சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத்தில் பெரியநாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயி லின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி `யான் பெற்ற அரு நிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன்` என உரை த்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந் தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப் படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரை க் கைப்பற்றித் தீவலம் வரும்போது `விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே` என்னும் நினைவினராய்` `இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில்சிவன்தாளை அடைவோம்` என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெரு மணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காணவந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளி நின்றார். திருநீல நக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்பாண்டார் நம்பி திரு நீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவ சோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவ ரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனு ள்ளே புகுந்து பெருமா னோடு ஒன்றி உடனானார். அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்

“கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம்” எனத் தொடங்கும் அந்தாளிக்குறிஞ்சிப்பண் படிகம் பாடி திருமணத்திற்கு வந்திருந்த அனைவருடன் சோதியில் கலந்தார்.
மூன்று வயதில் பாடத்தொடங்கி 16 வயது வரை தலங்கள் தோறும் சென்று சைவத்தையும், தமிழையும் ஒருங்கே வளர்த்தவர் தெய்வக்குழந்தையான ஞானனசம்பந்தர்.

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
Reference : tamilvu, பெரியபுராணம்

#தினம்ஒருஅடியார்
#ஆளுடையபிள்ளையார்
#இருபத்தெட்டாம்நாள்




நமிநந்தியடிகள்

தினம் ஒரு அடிகள்-27

நமிநந்தியடிகள்:

சோழநாட்டின் ஏமப்பேரூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: வைகாசி பூசம்
ஏமப்பேரூர் இன்று திருநெய்ப்பேர் என அழைக்கப்படுகிறது!
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சரியாக 8 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.
இம்மையிலும் மறுமையிலும் சிவன் திருவடிகளையே மெய்ப்பொருளாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.

நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது.  இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக இருப்பவனாக குறிப்பிடுகிறார். சிவபெருமானும் சாமகீதப் பிரியன் என்று போற்றப் படுகிறார்.சாம வேதத்தை ஆறு வகையான சந்த வகைகளில் பாராயணம் செய்கிறார்கள். சோமபானம் தயாரிக்கும்போது இவ்வேத மந்திரம் ஒலிக்க வேண்டும் என்பது இதன் நெறி. சோமபானம் அன்று தெய்வங்களுக்கு படைக்கும் புனிதபானமாய் கருதப்பட்டது. ஆகவே ஆனந்தவேளையில் சாமசங்கீதம் வாசிக்கப்பட்டது. இன்றும் கூட சிறுதெய்வ வழிபாட்டில் மது பிரதானமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சாமவேதம் ஓதி, இறைவன் திருவடியை தினமும் போற்றுவார் நமிநந்தி. ஒருநாள் பழம்பதியான திருவாரூர் வந்தடைந்தார். ஈசனின் மேன்மையான அருளைக் கண்டதால் இனி வாழ்நாள் முழுவதும் திருவாரூரிலேயே கழிக்க எண்ணினார். மாலைநேரம் வந்துவிட்டது, ஈசருக்கு காலம்தாழ்த்தாது விளக்கெரீக்க வேண்டுமென விரைந்து நெய் வாங்க சென்றார். அருகே சமணர் வீடு ஒன்று இருந்தது. அவசரம் கருதி உள்ளே சென்று நெய் கேட்டார். அந்த சமணர் அதற்கு, "நெய் இல்லை அப்படி விளக்கு ஏற்றித்தான் வேண்டுமெனில் தண்ணீர் ஊற்றி ஏற்றுங்கள்" என பரிகசித்தார்.
மனமுடைந்த நமிநந்தி வருத்தம் மேலிட ஈசன்  திருவடி பணிந்தார். அச்சமயம் வானில் அசரீரி ஒலித்தது.

[வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற 
 இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என 
 அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
 சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்]

"கமலாலயக் குளத்தின் நீரைக் கொண்டு விளக்கெரிப்பாயாக" என குரல் கேட்க அவ்வாறே செய்தார், விளக்கு சுடர்விட்டு எரிய, ஆனந்தகூத்தாடி, அனைத்து விளக்குககளையும் அவ்வாறே ஏற்றினார். பொழுதுபுலரும் வரை விளக்கு அணையாமல் எரிந்தது.அன்று இரவே ஏமபேரூருக்கு சென்றார். தினமும் காலை முதல் மாலை வரை ஏமப்பேரூர் இறைவனுக்கு திருவமுது படைத்துவிட்டு தினமும் திருவாரூருக்கு மாலைப்பொழுதில் விளக்கேற்றும் பணியை செய்தார்( கிட்டத்தட்ட 16கி.மீ தினமும் நடந்தே சென்று வந்தார்) நமிநந்தியடிகளின் தண்ணீரில் விளக்கேறும் விந்தையான செய்தி ஊரெங்கும் பரவியதால் கலக்கமடைந்த சமணர்கள் அவ்வூரை காலிசெய்து ஓட்டமெடுத்தனர். மெல்ல இச்செய்தி சோழமன்னனுக்கும் பரவ இறைவனின் திருவமுதுக்கான நிவந்தங்கள் இடையூறில்லாது தொடர்ந்து கிடைக்க உத்தரவிட்டான். மேலும் பங்குனி உத்திர நாளன்று இறைவனுக்கு திருவிழா நடத்த அனுமதி வாங்கினார் நமிநந்தி.
திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் திருமணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கக் காட்சி கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப் பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிரவில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அவரது மனைவியார், உள்ளே வருமாறு அழைக்க, திருமணலிக்கு சென்றபோது அனைத்து குல மக்களுடன் கூட்டத்தில் இருந்ததால் எனக்கு தீட்டு ஏற்ப்பட்டுவிட்டது என்றார்(அக்காலத்தில் தீண்டாமை எந்தளவு இருந்தது என்பதை இக்காட்சி விளக்கும்) ஆகவே குளிர்ந்த நீராடி, பூஜைசெய்ய வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை செய்!  என மனைவியை துரிதப்படுத்தினார். அவர் அவ்வாறு செய்யும் முன்பே உறக்கம் தள்ளியது நமிநந்திக்கு. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே! திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார்.

தன்தவறை உணர்ந்த நமிநந்தி உறக்கம் கலைந்து, நடந்ததை தம் மனைவியிடம் கூறி விடியற்பொழுதில் விரைந்து திருவாரூர் சென்றிர்.வழியில் தென்பட்ட திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசொரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார்.
இந்நிலையில் சிவகனமாய் தோன்றிய அனைவரும் முந்தைய வடிவம் பெற்றனர். பின் இறைவன் திருவருளாலே தன் ஊரை விடுத்து, திருவாரூர் வந்தடைந்து முன்போலவே பல திருத்தொண்டுகள் புரிந்து வந்தார். இதனாலேயே திருநாவுக்கரசரால் ‘தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பட்டார் இவ்வாறு பலகாலம் எல்லா உலகங்களும் தொழ திருப்பணிகள் செய்து திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.

“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#நமிநந்தியடிகள்
#இருபத்தேழாம்நாள்



திருநீலநக்க நாயனார்

தினம் ஒரு அடியார்-26

திருநீலநக்க நாயனார் :

சோழவளநாட்டின் சாத்தமங்கை எனும் ஊரில் அந்தனர் மரபில் பிறந்தவர். நன்னிலம் - திருப்புகலூர், திருமருகல் - நாகூர் சாலை வழியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இவ்வூர் இன்று "கோயில் சீயாத்தமங்கை" என அழைக்கப்படுகிறது.
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்

மலர்ந்த தாமரைமீது கயல்கள் குதித்து விளையாடும் பொய்கைகள் நிறைந்த சோழவளநாட்டின் சிறப்புவாய்ந்த பதி திருச்சாத்தமங்கை. அவ்வூரில் சிறார்களுடன் இணைந்து பெண்களும் சாமவேதம் ஓதுவர். அவ்வூர் அந்தணரில் நஞ்சினைமிடற்றில் வைத்த ஈசனுக்கு அன்புடையவராய் ஒருவர் இருந்தார், ஆதலின் "நீலநக்கர்" என்று அழைக்கப்பட்டார் அவர். வேதம் ஓதுவதையும், ஈசனை போற்றுவதையும் இருபெருங்கடமையாய் செய்து வந்தார். ஒருநாள் திருவாதிரை நாளன்று அயவந்தி (சீயாத்தமங்கைக்கு அருகே 1 கி.மீ தொலைவிலுள்ள கோவில்) ஈசரை வணங்க எண்ணினார். பூசை பொருட்களை எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் சென்றார். நீண்டநேரம் எடுத்துக்கொண்டு சிறப்பாய் இறைவனை அலங்கரித்தார். கண்மூடி மனமுருக வேண்டிக்கொண்டு கண்திறக்கையில் ஒருசிலந்தி லிங்கபானத்தின் மேல் விழுந்தது. உடனே விரைந்து சென்று தாயன்புகொண்டவராய் நீருடன் சேர்ந்து வாய்க்காற்றினால் ஊதி விரட்டினார். பக்தி கண்ணை மறைத்த நீலநக்கர், பதறிப்போய் இல்லாளிடம், ஏன் இக்காரியம் செய்தாய் என வினவினார். அவரும் நடந்ததைக் கூறினார். "பூசை நெறியில் இச்செயல் தகாது" என எண்ணி தன் மனைவியை விலக எண்ணினார். ஒளிவீசும் இறைவனின் திருமுடியில் விழுந்த சிலந்தியை வேறுவகையில் நீக்கமுயலாமல் எச்சில் படுமாறு நீக்கிய உன்னை நான் துறந்துவிட்டேன் என்றார்.

(இவ்விடத்தில் சிவவாக்கியர் பாடல் ஒன்று நினைவில் வருகிறது.
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.)

கணவனின் வாக்கினை கண்ணீருடன் ஏற்று விலகி நின்றார். பின்பூசை முடித்து தனியே இல்லம் சென்றார் நீலநக்கர். அவர் மனைவியோ கவன்பால் உள்ள பயத்தின் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் அயவந்தி கோவிலிலேயே தங்கிவிட்டார். தனியே வீட்டிற்கு சென்ற திருநீலநக்கர்,தான் கொண்ட பக்தியின் தாக்கம் காரணமாய் மனைவியை மறந்து ஈசனையே நினைவில் துதித்தார். அப்படியே உறங்கியும் போனார்.இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி, "உன் மனைவி ஊதித் துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் பரவியது"என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்த பின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.
சம்பந்தர் பெருமானின் பெருமைகளை கேட்டு அவருடன் இணைந்து வாழும் வேட்கை அதிகரித்தது நீலநக்கருக்கு. அதற்கேற்றார்போல் திருச்சாத்தமங்கை தலத்தினை வந்தடைந்தார். மனமகிழ்வுடன் ஆடிப்பாடி சம்பந்தரை வலியுறுத்தி தன் இல்லம் அழைத்துச் சென்றார். சம்பந்தருக்கும் அவர்தம் அடியாருக்கும் அறுசுவை விருந்தளித்தார். பின் அனைரும் உறங்க இடத்தினை தயார்செய்து கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், நீலநக்க நாயனாரை அழைத்து, தன்னுடைய அடியாரான திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவி மதங்கசூளாமணிக்கும் தங்குவதற்கு இடமளிக்க வேண்டினார்.(திருநீலகண்ட யாழ்ப்பாணர் தாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றியவர்)சம்பந்தரின் ஆணைக்கேற்ப அவரும் வேதிகை அருகே இடமளித்தார். மறுநாள் நீலநக்கரின் பெருமையை கேள்விப்பட்ட சம்பந்தர்அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

[பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு  
 தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
 உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்]

சாத்தமங்கையிலிருந்து சம்பந்தர் புறப்படும் நிலையில் தானும் வருவதாய் நீலநக்கர் எவ்வளோ வேண்டியும் சம்பந்தர்கேட்கவில்லை. சாத்தமங்கையிலிருந்தே சிவப்பணிகள் ஆற்றுமாறு திருவருளாணை பிறப்பித்தார். அவரின் ஆணையை மீற அஞ்சி அங்கேய தங்குவதாய் முடிவெடுத்து சிவத்திருவடிகளை போற்றி வணங்கி வந்தார். இருந்தாலும் அவ்வபோது சாத்தமங்கைக்கு அருகேயுள்ள சிவத்தலங்களில் சம்பந்தர் வருவதாய் கேள்விப்பட்டால் உடனே போய்விடுவார். இவ்வாறு ஒப்பற்ற சிவத்தொண்டாற்றிய திருநீலநக்கர் சம்பந்தரின் திருமண வைபம் கேள்விப்பட்டு அங்குசென்று வைகாசி மூலநாளில் சம்பந்தருடன் இறைவனடி சென்று சேர்ந்தார்.

"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்” 

சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#திருநீலநக்கர்
#இருபத்தாறாம்நாள்



Popular Posts In This Blog