தினம் ஒரு அடியார்-04
மெய்ப்பொருள் நாயனார்:
சங்ககாலத்தின் புகழ்பெற்றவேளிரான மலையமான் திருமுடிக்காரியின் வழியில், திருக்கோவலூரில் பிறந்தவர் இவர். பூசை நாள்:கார்த்திகை உத்திரம்
அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனாய் இவர் கருதப்படுகிறார். அடியார்கள் திருநீறு பூசி, உருத்திராட்ச மாலை அணிந்து காட்சி தரும் திருவேடத்தையே மெய்ப்பொருள் (உண்மைப் பொருள்)எனக் கொண்டவர். இதனால் "மெய்ப்பொருள் நாயனார்" என்று அழைக்கப்பட்டார்.இவரது இயற்பெயரை அறியமுடியவில்லை.
[அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடுந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்_பெ.பு-468]
அரசியல் நெறியான அறவழியை தவறாதவர்.மலைபோல் உயர்ந்த தம் தோள்வலிமையால் பகைவரை வென்றவர். முன்னோர் கூறிய நீதிஒழுக்கங்களை கடைபிடித்தவர்.சிவனடியாரின் திருக்கோலத்தை என்றும் மனதில் நீனைப்பவர். தில்லைக்கூத்தனின் அடியாருக்கே தாம் அரசுரிமையினால் ஈன்றபொருளும், செல்வமும் உடையவை எனகருதுபவர், ஆகவே சிவனடியார்களை வரவேற்று அச்செல்வங்களை அகமகிழ்ந்து வழங்குவார். நன்றாக செல்லும் ஓடம் சுழலில் சிக்குவது போல் இவரின் வாழ்விலும் ஒரு சோதனை வந்தது.
இவருடன் பகைகொண்ட மற்றுமோர் மன்னன், முத்தநாதன் என்பது அவர் பெயர்,இவரை சிலர் நாத்திகன் என்பர்,ஆனால் சேக்கிழார் இவரை அவ்வாறு விளிக்கவில்லை.போரில் மெய்ப்பொருள் நாயனாரிடம் தனது காலாட்படை, முகபடாம் அணிந்த யானை, குதிரைப்படை ஆகியவற்றை இழந்து பெருத்த அவமானப்பட்டான். ஆகவே வெஞ்சினம் கொண்டு அவரை கொல்ல துடித்தான். போரினால் வெல்ல இயலாது என துணிந்து, திருநீறு பூசி அடியார் வேடம்பூண்டு கொல்ல சேதிநாடு நோக்கி மலையமானை கொல்ல விரைந்தான்.
[மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்-பெ.பு-473]
உடலெங்கும் நீறுபூசி ஓலைச்சுவட்டில் கத்தியினை மறைத்து, கருமையை உள்ளே ஒழித்து ஒளிரும் விளக்குபோல் வெஞ்சினத்துடன் திருக்கோவிலூரை அடைந்தான் முத்தநாதன்.
[கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான்
பெ.பு-475]
மெய்ப்பொருளாரின் உற்ற காவலன் தத்தன் என்பவன், சிறந்தவீரன், முத்தநநாதன் சிவனடியார் வேடத்தில் உள்ளே நுழையவும் வாயிற்காவலர் உள்ளே விட்டனர். பலவாயிலை கடந்து இறுதி வாயிலை அடைந்தான். இறுதி வாயிலில் நுழைந்ததும் தத்தன் அவரை தடுத்து, உள்ளே மன்னர் உறங்குகிறார் தற்போது அனுமதியில்லை என கூறி தடுத்தார். அறியசெய்தி உடைய சுவடியை மன்னருக்கு தர நுழைகிறேன், தடுக்காமல் வழிவிடு என அவசரகதியில் உள்நுழைந்தார்.
அங்கேபொற்கட்டிலில் மன்னர் உறங்க, மனையாள் அங்கே அமர்ந்திருந்தார். அடியாரை கண்டதும் அவள் மன்னனை எழுப்பி கைக்கூப்பி வணங்கினார். மெய்ப்பொருளாரும் புகழ்ச்சொற்களால் வணங்கினான் அடியார் வேடத்திலிருந்த கபடதாரி முத்தநாதனை. அப்போது முத்தநாதனோ"சிவபெருமான் எனக்களித்த ஆகமநூல் குறித்த ஓலைச்சுவட்டை உனக்களிக்க விழைந்தேன்" என மறுமொழி கூறினான். அகமகிழ்ந்தார் மெய்ப்பொருளார். அப்பொழுது ஒரு நிபந்தனை விதித்தான் முத்தநாதன்,"உன் மனைவியை வெளியே போகச்சொல், நான் ஆகமத்தை வாசிக்கையில் நாமிருவர் மட்டும் இருக்கவேண்டும்" என்றான். அவ்வாறே மனைவியை வெளியே அனுப்பி உயர்இருக்கையில் முத்தநாதனை இருக்கச்செய்து தான் கீழே அமர்ந்தான் மன்னவன்.
[கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார்-பெ.பு-481]
முத்தநாதன் தான்கொண்டுவந்த சுவடியை பிரிப்பது போல் அவிழ்த்து பாசாங்கு செய்தான். நாயனார் குணிந்து வணங்கிய அவ்வேளையில் அவ்விபரீதம் நடந்தது. முதுகில் கத்தியால் குத்தினான். அப்போது மெய்ப்பொருளார்,"உண்மைத் தவவேடமே மெய்ப்பொருள்" என்று அவ்வேளையிலும் அவ்வேடத்திலிருந்தது ஈசனே என கண்டான்.
விபரீதத்தை உணர்ந்த தத்தன் வேகமாய் வாளினால் வெட்ட ஓடிவர, "தத்தா நமர்" என தடுத்தார் மெய்ப்பொருளார். வெட்டப்பட்டு வீழ்ந்த நாயனாரின் ஆசையால் தத்தனும், யான் என்ன செய்ய மன்னவ, என கேட்க, நாயன்மாரோ,'எம் அடியவர் திரும்பிச்செல்லும் வழியில் எவரும் தடுக்காவண்ணம் பாதுகாப்பாய் கொண்டு சென்று விடுவாயாக" என உரைத்தார். அவ்வாறே செய்தான் தத்தன். தன்மன்னனின் இறுதிஉரையை கேட்க ஓடோடி விரைந்தான் தத்தன். தன்மன்னவனின் திருவடியை வணங்கினான்.
[அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்-பெ.பு-488]
தமக்குபின் அரசியல் நடத்த இருக்கும் இளங்கோ, அமைச்சர், மனைவி என அனைவரும் கலங்கிநிற்க, 'விதியின் காரணமாய் திருநீற்றின்மீது கொண்ட அன்பை பாதுகாத்து உலகில் இன்புறுவீர்களாக" என்று கூறினார் நாயன்மார்.பின் இறைவன் திருவடியை சிந்தித்தார்.
[தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்-பெ.பு-489]
எந்நாளும் தன்னையே சிந்தனைசெய்த நாயனாருக்கு உமைசகிதாய், உடனே காட்சியளித்தார்.தேவருக்கும்கிட்டாத தம் அருளாகிய திருவடிநிழலை அடையும்படி அருள்செய்து எப்போதும் வணங்கியிருப்பதற்கான பேற்றையும் தந்தார்.
பொய்த்தவ வேடமணிந்தவன், தன்னை கொல்லக்கண்டும், அவன் வேடத்தின் காரணமாய் கொண்ட அளப்பரிய பக்தியின் காரணமாய் வணங்கும்நிலைக்கு உயர்த்தப்பட்டு, தன் இயற்பெயர் மறக்கும் அளவிற்கு இன்றும் 'மெய்ப்பொருள் நாயனார்' எனப் போற்றப்படுகிறார்.
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்"
சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: திரு.ராஜன்
#தினம்ஒருஅடியார்
#மெய்ப்பொருள்நாயனார்
#நான்காம்அடியார்
மிகவும் சிறப்பான தொடர் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி
Delete