Wednesday, 6 May 2020

கூற்றுவநாயனார்


தினம் ஒரு அடியார் 38

கூற்றுவநாயனார்:

திருக்களந்தை எனும் ஊரில் களப்பிரர் எனும் அரசர்குடியில் தோன்றியவர் கூற்றுவநாயனார். இவரது பூசைநாள்:ஆடிதிருவாதிரை
திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் களப்பால் எனும் ஊர் உள்ளது. இவ்வூரே அன்று களந்தை என்று அழைக்கப்பட்டது. தன்னையெதிர்க்கும் யாவரையும் தன் தோள்வலிமையால் வெல்லக்கூடிய வல்லமை பொருந்திய களந்தை நகரின் தலைவன் கூற்றுவன். சிவபெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதும் வழக்கத்தினை உடையவர். சிவனடியாரை பரவித்தொழுது வணங்கும் இயல்பினையுடையவர். இறைவன் திருவருளால் பகையரசர்கள்(சேர, சோழ, பாண்டியர்) அஞ்சி ஒதுங்கும் தீரம் கொண்டவர், அவர்களின் அளவில்லா செல்வத்தினையும், வீரஞ்செறிந்த யானை,காலாட்படை,தேர்ப்படை, குதிரை படைகளையும், எல்லையற்ற நிலங்களையும் தன்னகத்தே கொண்டு வீரச்செருக்குடன் வாழ்ந்து வருபவர்.

தமிழகத்தில் சைவசமயம் பக்திமார்க்கத்தால் வளர்ச்சியுற்து. அதன் முதல்விதை களப்பிரர் காலத்தில் விதைக்கப்பட்டதே. அதன்பின் பல்லவ சோழர்காலத்தில் அது தலைத்தோங்கியது. களப்பிரர்கள் கருநாடகத்தின் சந்திரகிரிமலையை அடுத்த "களபப்பு பெட்ட" என்ற பகுதியிலிருந்து தமிழகம் வந்ததாய் நம்பப்படுகிறது. அச்சுதவிக்கந்தன் எனும் மன்னன் நம் மூவேந்தர்களை வென்றவர். "யாப்பெருங்கலக்காரிகை" எனும் நூல் நம் மூவேந்தர்கள், களப்பிரரை புகழ்ந்து பாடியதை விளக்குகிறது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கி.பி 5 ம் நூற்றாண்டு முற்பகுதி எழுத்தமைதியை சார்ந்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களுள் ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற அரசனைப்பற்றி கூறுகிறது! இக்கல்வெட்டின் காலம் மற்றும் கூற்றன் என்ற பெயர் இவற்றினைக் கொண்டு இது கூற்றுவநாயனாராக இருக்கலாமோ என கருத இடமுள்ளது. இக்கல்வெட்டு வேள் மருகண் என்பவரின் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவருமான எங்குமான் என்பவர் இரு தேவகுலங்களும்(கோவில்), ஒரு கோட்டமும் எழுப்பிய செய்தியைக் கூறுகிறது. அந்தத் தேவகுலத்தைப் பாதுகாப்பதற்கும், அதில் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப் பெற்றுள்ளது. என்ற முக்கியதகவலை தருகிறது. இருண்டகாலம் என அழைக்கப்படும் களப்பிரரின் வரலாற்றில் சிறு ஒளிக்கீற்று இக்கல்வெட்டாகும்.

மூவேந்தரையும் ஆட்சிசெய்த களப்பிரன் கூற்றுவனுக்கு சோழமன்ரின் திருமணிமுடியை சூட்டிக்கொள்ள விருப்பம் ஏற்ப்பட்டது. அம்மணிமுடி தில்லைமூவாயிரவர் எனும் தில்லைவாழ்அந்தணர் பாதுகாப்பில் இருந்ததை கேள்விப்பட்டு உடனே தில்லை சென்றார். மூவேந்தரையும் அடக்கியாளும் அரசன் தில்லைஅந்தணரிடம் உரிமையாய் அம்மணிமுடியை கேட்க, அவர்களோ, "தொன்றுதொட்டு வரும் சோழர்குலத்தானை தவிரவேறு யாருக்கும் இதைச்சூட மாட்டோம்" என்று துணிச்சலுடன் கூறி,ஒற்றுமையில் சிறந்த அவ்வந்தணர்கள் தம்மிலே ஒருவகையினரிடம் மணிமுடியை பத்திரமாய் ஒப்படைத்துவிட்டு சேரநாட்டை அடைந்தனர்.அங்கேயும் கூற்றுவன் விடாமல் அவர்களுக்கு தொல்லையளித்தான். அங்கிருந்தவாறே தன் தில்லைக்கூத்தனை மனதில் வேண்டினர் அந்தனர்.

[அற்றை நாளில் இரவின்கண் அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும் எனப்பரவும் 
பற்று விடாது துயில்வோர்க்குக் கனவில் பாதமலரளிக்க 
உற்ற அருளால் அவைதாங்கி உலகமெல்லாம் தனிபுரந்தார்]

அன்றிரவு  கனவில் எழுந்தருளிய ஈசர், கூற்றுவன் தலையில் தன் திருவடிமலராய் சூட்டியருளினார். அதனையே மணிமுடியாய் ஏற்று மகிழ்ந்த கூற்றுவன், உலகை தான் ஒருவனாக இருந்து ஆட்சிபுரிந்து வந்தார். தில்லையம்பலத்தில்  நட்டம் பயின்றாடும் நாதனின் கோவில் எங்கெல்லாம் உள்ளதோ! அங்கெல்லாம் தனித்தனியாய் பூசனைமுறைகளை பெரியபொருட்செலவில் செய்து மகிழ்ந்து, சிவப்பணிகள் பலசெய்து இறுதியில் ஈசன் திருவடியடைந்தார் கூற்றுவநாயனார்.

"ஆர்கொண்ட வேல் கூற்றன் களந்தைக்கோன் அடியேன் "

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
கல்வெட்டு : பூலாங்குறிச்சி

#தினம்ஒருஅடியார்
#கூற்றுவநாயனார்
#முப்பத்துஎட்டாம்நாள்





No comments:

Post a Comment

Popular Posts In This Blog