Tuesday, 5 May 2020

திருநீலநக்க நாயனார்

தினம் ஒரு அடியார்-26

திருநீலநக்க நாயனார் :

சோழவளநாட்டின் சாத்தமங்கை எனும் ஊரில் அந்தனர் மரபில் பிறந்தவர். நன்னிலம் - திருப்புகலூர், திருமருகல் - நாகூர் சாலை வழியில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இவ்வூர் இன்று "கோயில் சீயாத்தமங்கை" என அழைக்கப்படுகிறது.
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்

மலர்ந்த தாமரைமீது கயல்கள் குதித்து விளையாடும் பொய்கைகள் நிறைந்த சோழவளநாட்டின் சிறப்புவாய்ந்த பதி திருச்சாத்தமங்கை. அவ்வூரில் சிறார்களுடன் இணைந்து பெண்களும் சாமவேதம் ஓதுவர். அவ்வூர் அந்தணரில் நஞ்சினைமிடற்றில் வைத்த ஈசனுக்கு அன்புடையவராய் ஒருவர் இருந்தார், ஆதலின் "நீலநக்கர்" என்று அழைக்கப்பட்டார் அவர். வேதம் ஓதுவதையும், ஈசனை போற்றுவதையும் இருபெருங்கடமையாய் செய்து வந்தார். ஒருநாள் திருவாதிரை நாளன்று அயவந்தி (சீயாத்தமங்கைக்கு அருகே 1 கி.மீ தொலைவிலுள்ள கோவில்) ஈசரை வணங்க எண்ணினார். பூசை பொருட்களை எடுத்துக்கொண்டு தன் மனைவியுடன் சென்றார். நீண்டநேரம் எடுத்துக்கொண்டு சிறப்பாய் இறைவனை அலங்கரித்தார். கண்மூடி மனமுருக வேண்டிக்கொண்டு கண்திறக்கையில் ஒருசிலந்தி லிங்கபானத்தின் மேல் விழுந்தது. உடனே விரைந்து சென்று தாயன்புகொண்டவராய் நீருடன் சேர்ந்து வாய்க்காற்றினால் ஊதி விரட்டினார். பக்தி கண்ணை மறைத்த நீலநக்கர், பதறிப்போய் இல்லாளிடம், ஏன் இக்காரியம் செய்தாய் என வினவினார். அவரும் நடந்ததைக் கூறினார். "பூசை நெறியில் இச்செயல் தகாது" என எண்ணி தன் மனைவியை விலக எண்ணினார். ஒளிவீசும் இறைவனின் திருமுடியில் விழுந்த சிலந்தியை வேறுவகையில் நீக்கமுயலாமல் எச்சில் படுமாறு நீக்கிய உன்னை நான் துறந்துவிட்டேன் என்றார்.

(இவ்விடத்தில் சிவவாக்கியர் பாடல் ஒன்று நினைவில் வருகிறது.
ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந் திரங்கள்எச்சில்
மோதகங்க ளானதுஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்
மாதிருந்த விந்தும்எச்சில் மதியும்எச்சில் ஒளியும்எச்சில்
ஏதில்எச்சில் இல்லதில்லை யில்லையில்லை யில்லையே.)

கணவனின் வாக்கினை கண்ணீருடன் ஏற்று விலகி நின்றார். பின்பூசை முடித்து தனியே இல்லம் சென்றார் நீலநக்கர். அவர் மனைவியோ கவன்பால் உள்ள பயத்தின் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் அயவந்தி கோவிலிலேயே தங்கிவிட்டார். தனியே வீட்டிற்கு சென்ற திருநீலநக்கர்,தான் கொண்ட பக்தியின் தாக்கம் காரணமாய் மனைவியை மறந்து ஈசனையே நினைவில் துதித்தார். அப்படியே உறங்கியும் போனார்.இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி, "உன் மனைவி ஊதித் துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் பரவியது"என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்த பின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.
சம்பந்தர் பெருமானின் பெருமைகளை கேட்டு அவருடன் இணைந்து வாழும் வேட்கை அதிகரித்தது நீலநக்கருக்கு. அதற்கேற்றார்போல் திருச்சாத்தமங்கை தலத்தினை வந்தடைந்தார். மனமகிழ்வுடன் ஆடிப்பாடி சம்பந்தரை வலியுறுத்தி தன் இல்லம் அழைத்துச் சென்றார். சம்பந்தருக்கும் அவர்தம் அடியாருக்கும் அறுசுவை விருந்தளித்தார். பின் அனைரும் உறங்க இடத்தினை தயார்செய்து கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், நீலநக்க நாயனாரை அழைத்து, தன்னுடைய அடியாரான திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவி மதங்கசூளாமணிக்கும் தங்குவதற்கு இடமளிக்க வேண்டினார்.(திருநீலகண்ட யாழ்ப்பாணர் தாழ்த்தப்பட்ட குலத்தில் தோன்றியவர்)சம்பந்தரின் ஆணைக்கேற்ப அவரும் வேதிகை அருகே இடமளித்தார். மறுநாள் நீலநக்கரின் பெருமையை கேள்விப்பட்ட சம்பந்தர்அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

[பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு  
 தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
 உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்]

சாத்தமங்கையிலிருந்து சம்பந்தர் புறப்படும் நிலையில் தானும் வருவதாய் நீலநக்கர் எவ்வளோ வேண்டியும் சம்பந்தர்கேட்கவில்லை. சாத்தமங்கையிலிருந்தே சிவப்பணிகள் ஆற்றுமாறு திருவருளாணை பிறப்பித்தார். அவரின் ஆணையை மீற அஞ்சி அங்கேய தங்குவதாய் முடிவெடுத்து சிவத்திருவடிகளை போற்றி வணங்கி வந்தார். இருந்தாலும் அவ்வபோது சாத்தமங்கைக்கு அருகேயுள்ள சிவத்தலங்களில் சம்பந்தர் வருவதாய் கேள்விப்பட்டால் உடனே போய்விடுவார். இவ்வாறு ஒப்பற்ற சிவத்தொண்டாற்றிய திருநீலநக்கர் சம்பந்தரின் திருமண வைபம் கேள்விப்பட்டு அங்குசென்று வைகாசி மூலநாளில் சம்பந்தருடன் இறைவனடி சென்று சேர்ந்தார்.

"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்” 

சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#திருநீலநக்கர்
#இருபத்தாறாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog