Wednesday, 6 May 2020

சிறப்புலி நாயனார்

தினம் ஒரு அடியார்-35

சிறப்புலி நாயனார்:

சோழநாட்டின் ஆக்கூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: கார்த்திகை பூராடம் இவர் பிறந்த ஆக்கூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. திருஞானசம்பந்தரால் இவ்வூர் இரந்து வரும் யாவருக்கும் இல்லையென சொல்லாத நன்மை பொருந்திய வேதியர் வாழும் நல்ல பதி எனும் பெயர் பெற்றது. இந்நகரில் நாள் முழுவதும் வேதமுழக்கம் ஓங்கி ஒலிக்கும், அகில்புகையும், தூபமும் மக்கள் வாழுமிடங்களில் மறையும்படியாக வேள்விச்சாலையில் எழுந்த ஆகுதிப்புகை ஓங்கிப்பரவும். அவ்வூரினில் உதித்த சிறப்புலியால் அடியார் திருத்தொண்டு புரியும் சிறப்பானவராய் விளங்கினார். சிவனடியார் எவரேனும் எதிரினில் தென்பட்டால் எதிர்சேவைபுரிந்து இன்சொற்கள் கூறி அவர்களை ஆறுதல்படுத்துவார். மேலும் அவர்களுக்கு இனிய உணவினை தினமும் அளித்து அவர்கள் விரும்பும் பொருட்களை பரிசளித்து அதனால் பெரும் இன்பத்தினை பெற்று உவந்தார். இத்திருத்தொண்டினால் "நிதிமழை பொழியும் மேகம்" எனும் சிறப்பினை அடைந்தார்.அதனாலேயே சுந்தரர் இவரை ‘சீர்கொண்ட புகழ் வள்ளல்’ எனப் போற்றியுள்ளார்.

மேலும் இவ்வுலகில் நன்மைதரும் வேள்விகளை சிவன் திருவடிகளை பொருந்தச்செய்யுமாறு நடத்தினார். சிவனடியார் யாவருருக்கும் இல்லையென கூறாமல் இடையறாது வழங்கும் வள்ளல்தன்மை படைத்தவர் சிறப்புலியார், இறைவன் திருவடிப்பேறு ஒன்றையே சிந்தை செய்தவராய் வாழ்ந்து வரலானார். அறங்கள் பலபுரியும் அந்தணர் நிறைந்த திருவாக்கூரில் வாழ்வாங்கு வாழ்ந்து இறைவன் திருவடிநிழல் அடையும் பேற்றை பெற்றார் சிறப்புலியார்.

"சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#முப்பத்துஐந்தாம்நாள்
#சிறப்புலிநாயனார்





No comments:

Post a Comment

Popular Posts In This Blog