Wednesday, 6 May 2020

மூர்க்க நாயனார்

தினம் ஒரு அடியார்-32

மூர்க்க நாயனார்:

தொண்டைநாட்டில் பாலியாற்றின் கரையிலுள்ள திருவேற்காட்டில் வேளாண் குடியில் பிறந்தவர் இவர்.
 இவரது பூசைநாள்: கார்த்திகை மூலம்.
சேக்கிழார் குறிப்பிடும் பாலி ஆறு என்பது எது? இன்றைய திருவேற்காடு தலத்திற்கு அருகே கூவம் ஆறுதான் ஓடுகிறது. கலிங்கத்துப்பரணியில் கருணாகரத்தொண்டைமான், கலிங்கம் நோக்கி செல்லுகையில்,
"பாலாறு குசைத்தலை பொன் முகரிப் பழவாறு
 படர்ந்தெழு கொல்லிஎனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
 நதியாறு கடந்து நடந்துடனே ..." என்ற வரி வருகிறது! முதன்முதலாய் இங்குதான் பாலாறு பற்றிய குறிப்பு வருகிறது! இன்றைக்குப் பாலாறு காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாய்ந்து கொண்டிருப்பதால் பரணியில் பாடப்படுவது இந்தப் பாலாறு அல்ல எனக் கூறலாம். மாறாக, காஞ்சிபுரத்திற்கும் குசைத்தலை ஆற்றிற்கும் இடையே பாலாறு காட்டப்படுவதால், இது பாலி ஆற்றையே (பழைய பாலாற்றை) குறிக்கிறது என்பது தெளிவு.
 இதுகாறும் பேசப்பட்ட இலக்கியக் குறிப்புகளால், பாலி ஆறு என்பது பழைய பாலாற்றினையே குறிக்கிறது என்றும், தக்கோலத்திற்குக் கிழக்கேயுள்ள பழைய பாலாற்றின் பகுதி இன்று கூவம் ஆறு என்று வழங்கப்படுகிறது என்றும் அறியலாம்.

இத்தகைய சிறப்புவாய்ந்த திருவேற்காட்டில் பிறந்தவர் இந்த அடியார்.சிவபெருமானின் அடியார்களுக்கு உணவளித்து, அவர்கள் உண்டபின்னே தான்உண்ணும் வழக்கம் கொண்டிருந்தார். உயர்ந்த தூய்மையான சோறும், நெய், வெல்லம், சுவையுடைய இனிய காய்கறிகள் ஆகியவற்றை தேடித்தேடி பணமளித்து வாங்கி அடியார்களுக்கு ஆகாரம் படைப்பார். இவரது கொடையினை கேள்விப்பட்ட அடியார்படை தினமும் உணவருந்த படையெடுத்ததால், செல்வந்தெரான இவர் தனது, உடைமை, அடிமைகள்(?) ஆகியோரை விற்று உணவளிக்கும் நிலைக்கு ஆளானார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். ஆயினும் அடியாருக்கு உணவளிக்கும் செயலை நிறுத்தவில்லை. பொருள்களெல்லாம் விற்றாயிற்று அடுத்து விற்பதற்கு ஏதுமில்லை! அப்போது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இளம்வயதில் அவர் சூதாட கற்றிருந்தார். ஆகவே பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார். சூதில் பலபொருள் சேர்த்து அதன்வாயிலாக அடியார்களுக்கு உணவளித்து வந்தார். நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். இதனாலேயே இவர் "மூர்க்கர்" என அழைக்கப்பட்டார்.
இவரது செய்கை காரணமாய் உள்ளூரில் விளையாட பயந்து ஒருவரும் வரவில்லை, ஆகவே வெளியூர் சென்று விளையாடி வென்று, அவ்வூரிலுள்ள அடியார்களுக்கு உணவளித்து, அதனைகண்டு மகிழ்ந்து கடைசியில் தாமும் உண்பார். இச்செய்கையை தினமும் செய்து இறுதிகாலம் வரை அடியார்களுக்கு உணவளித்துக்கொண்டே இறுதியில் ஈசன் திருவடியை அடைந்தார்.

"மூர்க்கருக்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#மூர்க்கநாயனார்
#முப்பத்தியிரண்டாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog