கோட்புலி நாயனார்:
சோழவளநாட்டின் திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் உள்ளது திருநாட்டியத்தான்குடி, உழவுத்தொழில் புரியும் வேளாண் மக்கள் நிறைந்த ஊரில், வேளாண் குடியில் பிறந்தவர் கோட்புலிநாயனார். மன்னனுக்கு நெருக்கமாய் தந்திரியாய் இருந்து பகைவர்நாடு பணியும் வண்ணம் போர்புரிபவர். சேக்கிழார் அம்மன்னன் பெயரை கூறவில்லை எனினும் மணிமுடிசோழன் எனும் சோழனின் மகனாய் இருக்கக்கூடும்.
இந்நாயன்மார் காலத்தில் சைவம் மகோன்னதமாய் இருந்த காலம், சம்பந்தர் பெருமானின் முயற்சியால் மனமாற்றம் அடைந்த கூன்பாண்டியனாகிய அரிகேசி பாண்டியனின் மகன் கோச்சடையான் ரணதீரன் தென்புலத்தையும், கழற்சிங்கன் என அறியப்பட்ட ராஜசிம்மபல்லவன் வடதமிழகத்தையும், சேரமான்பெருமாள் மலைநாட்டையும் ஆண்டு சைவநெறியை பலப்படுத்தினர்.
சுந்தரர் தம் ஏழாம் பதிகத்தில்,
"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர்
பாடநும் பாவம்பற்றறுமே"
என்று கோட்புலிநாயன்மார் குறித்து பாடுகிறார் சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்ததால் இந்நாயன்மார் சுந்தரரின் காலமான 8 ம் நூற்றாண்டின் ஆரம்பபகுதியையே கொள்ளலாம்.
இவரின் பூசைநாள்: ஆடி கேட்டை
இவர் தம்வன்மையான போர்புரியும் திறத்தால் மன்னர் மூலம் பெருஞ்செல்வம் ஈட்டுவார். அப்பணத்தினை கொண்டு இறைவனுக்கு திருவமுது கொடுக்க செந்நெல்லை மலைபோல் குவித்து வந்தார். இத்திருப்பணியை பல கோவில்களில் செய்தார். ஓர்நாள் போருக்குசெல்லவேண்டிய நேரம் வந்தது. அப்போது செந்நெல்லை பெருங்குன்று போல குவித்து அதனை பாதுகாத்து சென்றார். போருக்கு செல்லும்முன் தன் சுற்றத்தார், உறவினர்களை அழைத்து, "இந்நெல் இறைவனுக்கு படைக்க வைத்தது, இதனை எவரேனும் எடுத்தால் அவர்களை நான் அழிப்பது உறுதி! இது திருவிரையாக்கலியின் மீது ஆணை! என்றார், திருவிரையாக்கலி என்பது, சிவபெருமானைக் குறித்துச் சொல்வதோர் ஆணை எனப் பொருள்படும்.
அவர் சென்ற சில காலத்தில் அவ்வூரில் பஞ்சம் ஏற்ப்பட்டது! வானம் பொய்த்தது! வயல்கள் வறண்டது! உணவுப்பொருள் கிடைக்க வழியின்றி மக்கள் தவித்தனர். இப்படியே காடந்து இறப்பதை விட கோட்புலியின் வீட்டு சென்ற நெல்லினை கொண்டு உயிர்வாழ்வோம்! பஞ்சம் நீங்கியதும் மீண்டும் நெல்லினை அளித்துவிடுவோம், என முடிவெடுத்து கோட்புலியார் வைத்து சென்ற நெல்லினை எடுத்து உணவருந்தினர்.
போரிலே கவனம் செலுத்தி, நீண்டநாள் கழித்து தாயகம் திரும்பினார் கோட்புலியார். அங்கே வரும்வழியில் ஊரார் தம்நெல்லினை எடுத்த செய்தியை அறிந்தார். அக்கனமே அவர்களை அழிக்க வெஞ்சினம் கொண்டார். மனமகிழ்வுடன் இனியமொழிகூறி சுற்த்தார் கோட்புலியாரை வரவேற்றனர்.அவர்களிடம் மறுமொழி கூறி, அழகிய உயர்ந்த ஆடைகள் உறவினர்களுக்கு வாங்கி வந்துள்ளேன்! அனைவரும் வருக! என வரவேற்றார். அனைவரும் வந்ததும் வீட்டின் கதவினை அடைத்து, "இறைவனுக்கு படைக்க வைத்த நெற்களஞ்சியத்தை அழித்த! உங்களை சும்மா விடுவேனா?! என சினத்துடன் அவர்கள் முன்புகுந்தார், எதிர்பட்டோர் அனைவரையும் தந்தையார், தாயார், உடன்பிறந்தோர், குழந்தைகள், அடிமைகள் உட்பட சாரமாரியாய் வெட்டி வீழ்த்தினார்.
[பின்னங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் அவ்
வன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது என எடுத்து எறிந்து
மின்னல்ல வடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்]
கோட்புலியாரின் கொலைபாதகச் செயலில் இருந்து ஓர் பச்சிளங்குழந்தை தப்பியது, குற்றுயிராயிருந்த பாட்டன் ஒருவர் குலம் தழைக்க இந்த குழந்தையையாவது விட்டு வாடு என கெஞ்ச, "சோறு சாப்பிடவில்லையென்றால் என்ன?" சோற்றையுண்ட அன்னையின் முலைப்பாலை அக்குழந்தை அருந்தியிருக்குமே என கூறி ஆவேசத்துடன் இருதுண்டாய் வெட்டி வீழ்த்தினார்.
அந்நிலையில் கோட்புலியாரின் வீட்டு வாசலில் ஈசன் தோன்றினார். உன்னுடைய கையினால் மிகுதியான அன்பிற்குயவர்களை கொன்றுவிட்டாய்! வெட்டுண்டு இறந்த அனைவரும் தேவருலகம் சென்றுவிடுவர்! புகழுடைய நீயும் நம்முடன் வந்து சேர்வாயாக! என அருளினார்.
ஈசன்மேல் கொண்டஅளவற்ற அன்பினால் தம்குழந்தை உட்பட அனைவரையும் கொன்ற கோட்புலியார், இறுதியில் அவர் அருளாலே அவர் திருவடியடைந்தார்.
“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#கோட்புலிநாயனார்
#ஐம்பத்துஐந்தாம்நாள்