சுந்தர மூர்த்தி நாயனார்:
திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் அவதரித்தவர் "நயத்திற்கு சுந்தரனார்" என நவிலப்பெறுபவர் நம்பியாரூரார்.
இவரது பூசைநாள்: ஆடி-சுவாதி
சடையநாயனாருக்கும், இசைஞானி அம்மைக்கும் தவப்புதல்வனாய் பிறந்தார். ஆதி சைவகுலத்தில் பிறந்த இவரை, அவ்வூரை ஆண்ட மன்னன் நரசிங்க முனையர் இளம்வயதில் சுந்தரரின் தெய்வாம்சம் கண்டு தானே வளர்க்க விரும்பி நட்புரிமையில் நம்பிஆரூரரின் பெற்றோரிடம் கேட்க அவர்களும் இசைந்தனர். அரண்மேனையில் வசித்தாலும் அந்தணர்க்குழந்தையாகவே வளர்ந்தார். திருமண வயதடைந்ததும், புத்தூரில் வசித்து வரும் சடங்கவி சிவாச்சாரியாரின் புதல்வியை மணமுடிக்க ஏற்பாடு செய்தனர். மணநாளும் வந்தது!
தடுத்தாட்கொண்டார்:
மணமேடையில் அமர்ந்திருந்தனர் மணமக்கள். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். சினம் கொண்ட சுந்தரர் அந்தணூருக்கு அந்தணர் எவ்வாறு அடிமையாக முடியும்? என்றார்.முதியவரின் ஓலைச்சுவடியை கைப்பற்றி கிழித்தார் சுந்தரர். உடனே முதியவர், அறநெறி தவறி என் ஓலையை கிழித்ததனால் இவர் அடிமையென்பதை மெய்பித்துவிட்டார், இது நகல் ஓலையே! அசல் எனது ஊரான திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது என்றார். சுற்றத்தார் முதியவரை எந்த ஊர் என விசாரித்து, அசல் ஓலையை பார்க்க முடிவெடுத்தனர். திருமணம் தடைப்பட்டது, சுந்தரரையும் சுற்றத்தாரையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய்நல்லூர் அடைந்தனர். சபையோர் முன்னிலையில் அசல்சுவடியை காட்டினார் முதியவர். "திருநாவலூரில் இருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித்தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு ஆரூரன்" என்று எழுதியிருந்தது. பின்பு அந்த ஓலையிலே சாட்சிகளாகக் கையெழுத்து இட்டவர்கள் தங்கள் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டார்கள். அதைக் கண்ட பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இது உம்முடைய பாட்டனுடைய எழுத்தோ! பாரும்" என்று சொல்ல; ஐயர் அவர்களைப் பார்த்து, "இந்தச் சிறுவன் அடிமையோலையில் எழுதப்பட்டிருக்கின்ற தன் பாட்டன் கையெழுத்தைக் கண்டறியச் சக்தியுள்ளவனோ? இவன் பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்து உண்டாகில், வருவித்து இதனுடன் சரிபார்க்க என்றார். அவ்வாறு சரிபார்த்ததில் அது சரியாக இருந்தது. ஊராரும் வேறு வழியில்லை நீ அடிமை சேவகம் பண்ண வேண்டியதுதான் என கூறினர். என் விதி இதுவெனில் நான் பணிகிறேன் என்றார்.அப்போது அனைவரும் ஐயா! உமது வீடு எங்கே என முதியவரை வினவ, இதோ இங்குள்ளது என கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவதிகை சென்றார் அங்கு வயோதிக வேடம்பூண்டு விளையாட்டு காட்டினார் ஈசர், பின் சுந்தரரை தம் தோழராய் ஏற்றுக்கொண்டார். ஆகவே தம்பிரான் தோழர் எனும் பெயர் பெற்றார்.அதன்பின்
பரவைநாச்சியாருடன் திருமணம்:
திருக்கோலக்காவுக்கும், திருப்புன்கூருக்கும் போய்த் திருப்பதிகம்பாடி, காவேரி நதியின் கரையை அடைந்து, அதில் ஸ்நானம் பண்ணி மாயூரத்துக்கும், அம்பர்மாகாளத்துக்கும், திருப்புகலூருக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு,திருவாரூர் சென்றார் அங்கு பரவைநாச்சியாரை கண்டு அவர்மேல் காதல் கொண்டார். வெகுவிமரிசையாக திருமணம் நடந்து இல்வாழ்க்கை மேற்கொண்டார்.
திருத்தொண்டர்தொகை:
அருள்நிறைந்த,திருவாரூரின் 'தேவாசிரியன்' மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களை காணாது, இறைவனை வணங்கச் சென்றார் வன்றொண்டர்(சுந்தரர்), அதுகண்ட விறன்மிண்டர், “தேவாசிரியனிடத்து பொலிந்து விளங்கிய திருத்தொண்டர்களை வணங்காது சென்ற வன்தொண்டன் புறகு. அவருக்குப் பிரான் ஆகிய இறைவனும் புறகு” என்றார்.
"நாம் உள்ளது அடியாருடன் மட்டுமே,அவர்தம் பெருமையை பாடுவீராக"
என்றுரைத்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுத்து, திருத்தொண்டர்த்தொகையை பாட வைத்து தன் அருளையும் அளித்தார் சுந்தரருக்கு.
அதன்பின் உலகமும்,நாமும் உய்ய நாயன்மார்களின் புகழை பறைசாற்ற, திருத்தொண்டத்தொகையை பாடி, தேவாசிரிய மண்டபத்திலுள்ள அடியார்களை தொழுது வணங்கினார்.
சங்கிலி நாச்சியாருடன் திருமணம்:
திருவொற்றியூரில் ஞாயிறு கிழார் என்பவரின் மகள் சங்கிலி நாச்சியார். இவ்வம்மை மணந்தால் சிவனடியார் ஒருவரையே மணப்பேன் என வைராக்யம் கொண்டிருந்தார். சுந்தரர் திருவொற்றியூர் வரும்பொழுது இவ்வம்மையை கண்டு காதல் கொண்டார். தம் காதல் எண்ணத்தை சிவனிடம் தெரிவித்தார், சங்கிலி நாச்சியாரின் கனவில் தோன்றிய ஈசன், உம்மை பிரியமாட்டேன் என மகிழமரத்தின் கீழ் சத்தியம் கேள் என கூறினார். அதனை சங்கிலியார் சுந்தரரிடம் கூற அவரும் சம்மதம் தெரிவிக்க, இருவரின் திருமணமும் நடைபெற்றது. சில நாள் கழித்து திருவாரூர் செல்லவேண்டும் என கூறி சங்கிலியாரிடம் விடைபெற்று பிரிந்தார். சத்தியத்தை மீறியதால் தம் இருகண் பார்வையை இழந்தார். திருவெண்பாகம் எனுமிடத்தில் இறைவன் ஊன்றுகோலை அளித்தார். திருமுல்லைவாயில் நாயகரை வணங்கி நின்று, “சங்கிலியின் பொருட்டு என் கண்களை மறைத்தீர்’’ என்ற தன்மை விளங்கும்படி திருப்பதிகம் பாடியருளி, “எனது துயரினைக் களைந்திட வேண்டும்’’ என்று துதித்தார். பின் காஞ்சி நகரை அடைந்து பணிந்து “விண்ணவர்களுக்காக விடத்தினை உண்டு அமுதத்தை அளித்த கண்ணாளா! கச்சி ஏகம்பனே! கடையேனாகிய நான் செய்த குற்றத்தைப் பொறுத்தருளி இங்கு அடியேன் காணும்படி கண் அளித்தருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு கீழேவீழ்ந்து வணங்கினார், கச்சியம்பதியில் ஒருகண் பார்வை பெற்றார். பின் திருப்பூந்துருத்தி சென்று மறுகண் பார்வையை பெற்றார். இறுதியில் திருவாரூர் சென்றடைந்தார். ஆனால் அங்கு பரவையார் சுந்தரர் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். சுந்தரரை வீட்டினுள் அனுமதிக்கவேயில்லை. தியாகேசரிடம் வேண்டி, தன் பொருட்டு பரவையாரை ஆறுதல்படுத்த வேண்டினார். ஈசனும் அடியார் வேடம்பூண்டு பரவைநாச்சியைரை சந்தித்து இருமுறை தூது சென்றும் மனம் மாறவில்லை. எனவே அடுத்தமுறை தேவர்கள் படைசூழ சென்றார். பரவைநிச்சியார் அப்போது வந்தது ஈசன் என்று உணர்ந்தார். மனம் இறங்கிய பரவைநாச்சியார் சமாதானமடைந்தார். பின் சுந்தரர் இனிமையாய் இல்லறம் நடத்தினார்.
கலிக்காமரின் கோபம்:
ஈசனையே தன் இச்சைக்காக தூது விடுகிறாரே? இவரெல்லாம் என்ன மனிதரென சுந்தரர்மேல் வெறுப்பு கொண்டார் ஏயர்கோன் கலிக்காமர். கலிக்காமரின் இந்த கோபத்தினை கேள்விப்பட்டார் சுந்தரர். தன் செயலுக்காக வருந்தினார். ஈசனிடம் கலிக்காமரின் கோபத்தினை போக்குமாறு வேண்டிக் கொண்டார். இவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க இறைவன் எண்ணினார். கலிக்காமருக்கு கொடிய சூலைநோயை வருவித்தார் ஈசர். தீயில் காய்ச்சிய வேல் உள்ளே குடைவதை போன்று பெரும் துயரம் அளித்தது, மிகவும் மனமுடைந்து ஈசன்திருவடியை விழுந்து வணங்கினார். வன்தொண்டரான சுந்தரராலன்றி இந்நோய் தீராதென கனவில் கூறி மறைந்தார் ஈசர். அதன்பின் சிலபூசலுக்கு பின் இருவரும் இணைபிரியா நட்புகொண்டனர்.
சேரமான்பெருமாள்:
இந்ந அடியார் சுந்தரரின் உற்ற நண்பராவார். இவரோடு இணைந்து சுந்தரர் ஆற்றிய பணிகளை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.
https://trichyparthi.blogspot.com/2020/05/36.html
முதலை உண்ட பாலகன்:
சுந்தரர் திருவாரூரிலிருந்து சேரமான் பெருமாள் நாயனாரின் அழைப்பினை ஏற்று, அவரைச் சந்திக்க விருப்பு கொண்டு சோழநாடு கடந்து, கொங்கு நாட்டை அடைந்தார்.
அவிநாசி என்னும் இத்தலத்திற்கு வந்தபோது, ஒருவீதியில் ஒருவீட்டில் மங்கல ஒலியும், மறு வீட்டில் அழுகை ஒலியும் கேட்பதை அறிந்து, நிகழக் என்ன காரணம் என வினவினார்.
நிகழ்ந்ததை அவ்வூரார் உரைத்தனர்.
அவ்வேளையில் சுந்தரர் தம் ஊருக்கு எழுந்தருளி வந்துள்ளார் என்பதைக் கேட்டு, மகனை இழந்து வருந்திய அந்தணர் அழுகை நீங்கி, மலர்ந்த முகத்துடன் அவரை வரவேற்று வணங்கினார்.
சிறந்த சிவபக்தராகிய இவ்வந்தணரின் மகனை முதலையிடமிருந்து மீட்டுத் தந்த பின்னரே, திருக்கோயில் வழிபாடு செய்ய வேண்டுமெனச் சுந்தரர் முடிவு செய்து, முதலை வாழ்ந்த நீர்நிலையை அடைந்து, அவிநாசி இறைவனை வேண்டி "எற்றான் மறக்கேன்" எனும் திருப்பதிகத்தைப் பாடினார்.
அம்முதலை, தான் உண்ட மதலையைக் கரையின் கண் உமிழ்ந்து மீண்டது.
அவனது பெற்றோரும் மற்றவரும் இவ்வற்புதத்தைக் கண்டு அதிசயித்தார்.
சுந்தரர் பின் இத்தலத் திருக்கோயிலை அடைந்து, அருள்மிகு கருணாம்பிகையையும் அவிநாசியப்பரையும் வழிபட்டு, மலைநாடடைந்தார். திருவஞ்சைக்களம் இறைவரை வணங்கி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். சுந்தரருக்கு அருள்புரிய விரும்பிய ஈசர், சுந்தரரை திருக்கயிலாயத்திற்கு அழைத்து வர இந்திரனையும், தேவகணங்களையும் பணித்தார்.தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது விருப்பத்தை தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி "தானெனை முன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரையின் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர். சுந்தரர் தான் முன்சென்று ஈசனிடம், தம் நண்பான சேரனின் வருகையும் தெரிவித்து விண்ணப்பித்தார். ஈசன் சேரனை உள்ளே அழைத்து"இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?"என சேரனிடம் கேட்க, அதற்கு அவர் ஈசன் முன்னரே திருக்கயிலாய ஞானஉலாவை இறைவன் முன்னே கயிலாயத்திலேயே இயற்றி பாடும் பெறும்பேறு பெற்றார்(சுந்தரர் புராணத்தில் இவற்றை விரிவாய் காண்போம்) அதன்பின் சுந்தரரோடு சேரமானும் சிவகணங்களாய் திகழ்ந்து திருக்கயிலாயத் தொண்டு புரிந்தனர்.
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#சுந்தரமூர்த்திநாயனார்
#அறுபத்துமூன்றாம்நாள்
🙏🙏🙏🙏🙏🙏முற்றிற்று 🙏🙏🙏🙏🙏🙏