நின்ற சீர் நெடுமாற நாயனார்:
முடிவுடை வேந்தர்களில் காலத்தால் பழமையான, பழம்பெறும் வேந்தரான பாண்டிய மரபில் தோன்றியவர் இந்நாயன்மார்.
இவரது பூசைநாள்: ஐப்பசி பரணி
இவரின் காலம் கி.பி(640-690) முழுமையாக ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தியுள்ளார். சீனப்பயணியான யுவான்சுவாங் தன் பயணக்குறிப்பில் அரிகேசிபாண்டியனையும் அவர்தந்தை செழியன் சேந்தனையும் குறாப்பிடுகிறார். களப்பிரரிடமிருந்து தமிழ்நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியனின் பேரனின் மகன் இவர்.இவரது இயற்பெயர் சேந்தன்மாறன் என்றும் அரிகேசரி நெடுமாறன் என்றும் அறியப்படுகிறது. சம்பந்தர் தம் பதிகங்களின் வாயிலாக, 'பஞ்சவன் தென்னன் பாண்டியர்'
'பங்கமில் தென்னன் பாண்டியர்'
'பார்த்திபன் தென்னன் பாண்டியர்' என்றும் இவரை அழைக்கிறார். தமிழோடு தொடர்புடையது பாண்டிய குலம் என்பதனை உணர்த்த 'தமிழ்ப்பாண்டியர்' என்றும் அழைக்கிறார்.
திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் மட்டுமே இவரை 'கூன்பாண்டியன்' என அழைக்கிறார்.
அகப்பொருள் சிற்றிலக்கியங்களில் காலத்தால் முற்ப்பட்ட 'பாண்டியன்கோவை'யின் பாட்டுடைத்தலைவன் இம்மன்னனே!
இப்பாடல்களின் வாயிலாய் காவிரிக்கு தெற்கே குமரிவரை இவரது நாடு பரவியிருந்ததும் இருபத்தைந்து இடங்களில் இவன் போர்நடத்தி வெற்றி கண்டுள்ளமையும் தெரிய வருகிறது!
பல்லவர், சேரன் முதலியோரை முறையே சங்கைமங்கை,நெல்வேலி ஆகிய இடங்களில் பெருவெற்றி பெருகிறான்.
நெடுமாறன் காலத்தில் வாழ்ந்த சோழமன்னன் பெயர் 'மணிமுடிசோழன்' என அறியமுடிகிறது. சேரனது வஞ்சியோடு சோழனது உறந்தையும் வென்றான் என பாண்டியக்கோவை கூறுகிறது.
"கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன்"
என்ற பாடல் வாயிலாய் அறியலாம். பாண்டியனிடம் தோற்ற சோழன் மன்னனுக்கு பணிந்து நல்லுறவை வேண்டி தம் மகளான 'மங்கையற்கரசி' யை மணமுடித்து வைத்திருக்க வேண்டும்.
மனதை குழப்பத்தில் ஆழ்த்தும் நெறிமுறைகளை தவம் எனக்கொண்டு, தன்னுடலை வறுத்திகொள்ளும் சமணரின் சமயவலைக்குள் அகப்பட்டு, சம்பந்தரின் திருவருளால் சமணவலையிலிருந்து விடுபட்டு பின் சைவமதம் தழுவியவர் நெடுமாறன். என சேக்கிழார் கூறுகிறார்.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி "திருவாலவுடையார் திருவிளையாடற்புராணம்" என்ற நூலை எழுதுகிறார். இவருக்கு அடுத்து 16 ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் மேலும் ஒரு திருவிளையாடற்புராணம் இயற்றப்படுகிறது. ஆனால் இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் பரஞ்சோதி முனிவர் நிறைய புதுத்தகவல்களை புராணமாய் புகுத்துகிறார். இப்புராணமே ஓவியமாய் மதுரையில் உள்ளது. மதுரையை சுற்றி எண்பெருங்குன்றுகள் இருந்ததாய் தேவாரம், நாலடியார் வாயிலாய் அறியலாம். அக்குன்றுகளில் சமணர் தங்கி சமயம் வளர்த்தனர். பாண்டியன் அறியா வண்ணம் அவரது தளபதி குலச்சிறையாரும், பாண்டி மாதேவியும் சிவவழிபாடு நடத்தினர். அச்சமயம் சம்பந்தர் திருமறைக்காட்டில் இருந்தார். மன்னனுக்கு வெப்புநோய் வர, கூன்விழுந்து நிமிர முடியாமல் அவதியுறுகிறார். அந்நோயை தீர்க்க இயலாமல் சமணர் தவித்தனர், பின் சம்பந்தர் திருநீறு பூசி குணப்படுத்துகிறார். அதன்பின்னே அவர் "நின்ற சீர் நெடுமாறன்" என அழைக்கப்படுகிறார். அதன்பின் சமணர்-சம்பந்தர் வாதமிடும் நிகழ்வு நடைபெறுகிறது. வாதில் தோற்ற சமணர் தம் வாக்குபடி சமணர் எட்டாயிரம் பேரும் கழுவிலேறுகின்றர். என சேக்கிழார் கூற அதையே பரஞ்சோதி முனிவரும் கொஞ்சம் மிகைபடுத்தி கூறுகிறார். இந்நிகழ்வு இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. காரணம் அந்நிகழ்வு அக்காலகட்டத்தில் பெரும் கொடுநிகழ்வு, இதனை நிச்சயம் சமண இலக்கியங்கள், கல்வெட்டுகள் பதிவு செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு எங்கும் இல்லை. எண்ணாயிரம் என்பது அங்குள்ள சமணக்குழுவின் பெயராய் நாம் கருத இடமுள்ளது. இதற்கு உதாரணமாய் திசையறி ஐநூற்றுவர், தில்லை மூவாயிரவர் என்ற குழுக்களை கூறலாம். இவை எண்ணிக்கையை குறிப்பதன்று அக்குழுவின் பெயரே ஆகும். அதுபோல எண்ணாயிரம் சமணக்குழுவிலிருந்து ஓரிருவர் வாதில் தோற்று தாமே முன்வந்து இறந்திருக்க வேண்டும். இதனையே சேக்கிழாரும் எண்ணாயிரவர் என கூறியிருக்க வேண்டும். ஆனால் பரஞ்சோதியார் தம் நூலில் இன்னும் மிகைப்படுத்தி குலச்சிறையார் தப்பித்துஓடிய சமணர் ஒருவரையும் விடாது எட்டாயிரம் பேரையும் கொன்றார் என்கிறார். இக்கதையே நிலைத்துவிட்டது இப்போது வரை.
இந்நிகழ்வால் இன்றுவரை தெய்வக்குழந்தையான சம்பந்தருக்கும், பாண்டியமன்னனுக்கும், அவர்தம் மனைவி மங்கையற்கரசிக்கும், குலச்சிறையாருக்கும் எட்டாயிரம் பேரை கொன்றவர்கள் என்ற அவச்சொல் வந்துவிட்டது.
அமணர் கழுவேற்றம் முடிந்ததும திருநீறு பூசிச் சைவரானார் நெடுமாறனார்.
பின் சமந்தருடன் ஆலவாய்ப் பெருமான் முன் நின்று வணங்கி சென்று தென்னக பகுதியில் சிவநெறியை பரவச்செய்தார்.
சிவநெறியிலே நெடுங்காலம் அரசாண்டு, பலவெற்றிகளை ஈசன் அருளால் பெற்று சிவலோகபதவியை அடையும் பெரும்பேற்றினை பெற்றார்.
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#நின்றசீர்நெடுமாறநாயனார்
#நாற்பத்துஎட்டாம்நாள்