Wednesday, 6 May 2020

கழறிற்றறிவார் நாயனார்

தினம் ஒரு அடியார்-36

கழறிற்றறிவார் நாயனார்:

சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறும் முடியுடைய மன்னர்கள் அறுவர். அதில் முடியுடைய வேந்தர் சேரரில் வரும் ஒரே மன்னர் இவரே. இவரது இயற்பெயர் "பெருமாக் கோதை"

[மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும்
 யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு இல்லாத் 
 தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகனமும் முதல் ஆம்
 காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்து உறப் பெற்றார்]

கழறிற்றறிவார் எனும் இப்பெயர் எல்லா உயிர்களும் பேசுவதை அறியக்கூடிய ஆற்றலை இறைவன் இவருக்கு கொடுத்ததன் காரணமாய் ஏற்ப்பட்டது என்பதனை மேற்கண்ட  பெரியபுராணபாடல் உணர்த்துகிறது.

சுந்தரருடன் இவரது வரலாறு இணைத்துக் கூறப்படுவதால் இவரது காலம்(667-713) என உறுதியாய் கூறலாம்.  மலைநாடான சேரநாட்டில் கொடுங்களூரில் தோன்றியவர் இவர். முற்பிறவியில் செய்த தவம் காரணமாய் தனக்கு உரிமையான இளவரசர் பதவியிலிருந்தும் அதற்குரிய கடமையை செய்யாமல் திருவஞ்சைக்களம் கோவில் அருகேயே மாளிகை அமைத்து அங்கேயே சிவத்தொண்டுபுரிந்து வந்தார். தினமும் அதிகாலை எழுந்து திருநீறு பூசி, இறைவனுக்கு பூமாலை சூடி ,தானே பதிகம் இயற்றி திருவஞ்சைக்கள மகாதேவரை பாடுவதையே வழக்கமாய் கொண்டு வழிபட்டு வந்தார்.

 அச்சமயம் சேரநாட்டில்  "செங்கோற் பொறையன்" என்பவன் ஆண்டு வந்தான் இவன் கூண்பாண்டியன் எனும் அரிகேசி பாண்டியனிடம் பாழி-நெல்வேலி ஆகிய இடங்களில் பலமுறை தோழ்வியுற்றான். கடைசியாய் செந்நிலபோரிலும் தோழ்வியுற்றான். ஆகவே, விரக்தியுற்று,அரசவாழ்வை துறந்து தவம் மேற்கொள்ள சென்றான்.அமைச்சர் முதலானோர் சேரர் குடியில் தோன்றிய மற்றொரு கிளையான(பொறையன், உதியன் என இருகுலம் உண்டு) கோதை மரபினனான திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரை அரசுரிமை ஏற்க அழைத்தனர். திருவஞ்சைக்கள இறைவனிடம் அருள்வாக்கு கேட்டு அதன்பின் அரசனாக பதவியேற்க இசைந்தார். அமைச்சர் விதித்த நன்னாளில் உயரிய மங்கலச்சடங்கு செய்து பெருமாக்கோதையை அரசனாய் அறிவித்தனர். அதன்பின் பட்டத்துயானையில் வெண்கொற்றக்குடையுடன் பவனிவந்தார். அப்போது வண்ணார் ஒருவன் வியர்வைமழையில் கரைந்த உவர்மண் மேனியுடன் எதிரே வந்தான். பார்ப்பதற்கு உடலெங்கும் திருநீறு பூசிய அடியாரைப்போல தோற்றமளித்தான். உடனே யானையிலிருந்து இறங்கி அவனை வணங்கினார். அவன் அச்சம் கொண்டு  அடியேன் தங்கட்கு அடித்தொழில் புரியும் வண்ணான் என்று கூறக்கேட்டு "அடியேன் அடிச்சேரன்" சிவவேடத்தை எனக்கு நீவிர் நினைவுடுத்தினீர் வருந்தாது இனி நீவிர்செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார். சிங்கமுக அரியாசனையில் அமர்ந்து, சிற்றரசர் திரை செலுத்த, நங்கையர் சாமரம் வீச மலர்களைத்தூவ அரசு ஏற்று அருளினார்.அயல்நாட்டு அரசரிடம் பகைமை கொள்ளாது வேதநெறி தழைக்க ஆட்சிசெலுத்தினார். தில்லைக்கூத்தனின் திருவடியை(குஞ்சிதபாதம்) நாளும் எண்ணி வாழ்ந்தார். தினமும் தில்லைக்கூத்தரை எண்ணி சிவ பூசை செய்து வந்தார். பெருமான் அவரது  வழிபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக நாள்தோறும் சிவ பூசை முடிவில் தன்பாதச் சிலம்பொலியைக் கேட்பித்து அருளுவார்.

 மதுரையம்பதியை சேர்ந்த பாணபத்திரன் எனும் புலவன் வறுமை காரணமாய் இறைவனிடம் வேண்ட,  கனவில் தோன்றிய ஈசன், "என்பால் அன்புகொண்ட சேரன் உனக்கு பொற்கானம், பட்டாடை, நவமணிகளை உனக்கு குறையில்லாமல் அள்ளி வழங்குவான்" என கூறினார். பாணபத்திரருக்கு ஒப்பற்ற செல்வக்குவியலை கொடுத்தனுப்புக எனும் பொருளில் "மதிமலைபுரிசை" எனும் திருமுகப்பாசுரம் ஏட்டில் எழுதி கொடுத்தனுப்பினார். உடனே மலைநாடுநோக்கி பயணித்தார் பாணபத்திரர். சேரனின் மாளிகையை அடைந்தார். தன் மாளிகை வந்ததன்நோக்கமறிந்து அவர்கையில் இருந்த ஓலையை படித்த சேரன் மகிழ்ச்சியில் நா குழர, கண்ணில்நீர் பெருக ஆனந்தகூத்தாடினான். நிலத்தில் பலமுறை விழுந்து வணங்கினார். உடனே தன் அமைச்சரைநோக்கி கருவூலத்திலிருந்த அனைத்துவகையான செல்வங்களையும் ஒன்றுவிடாமல் மூட்டைக்கட்டி வரச் செய்தார். மேலும் யானை, குதிரை முதலானவற்றையும் தன்னுடைய அரசுரிமையும் எடுத்துக் கொள்ளவும் என்றான் அந்த சேரமான்.  ஆனந்தத்தில் உறைந்த பாணபத்திரர் செல்வத்தைமட்டுமே நான் பெற்றுகொள்கிறேன் வேறு ஏதும் வேண்டா எனகூறி தந்தமுடைய பெரிய சேரநாட்டு களிற்றுமேலேறி, செல்வம் நிறைந்தபொதிகள் சூழ சென்றார். அவர்செல்லும் வரை மார்பில் கைச்சேர்த்து வணங்கி வழிய்னுப்பி வைத்தார்.

சிவபிரான் சேரமானைச் சுந்தரருடன் நட்புக் கொள்ளச் செய்ய விரும்பினார், நாள் தோறும் பூசை முடிவில் ஒலிக்கும் சிலம்பொலியைக் காலந் தாழ்த்தி ஒலிக்குமாறு அருளினார். சேரமானார் இவ்வாறு நிகழ தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என ஐயுற்றார்.அப்போது தில்லையம்பதியில்  சுந்தரர் நம்மைப் பாடிக் கொண்டிருக்க அப்பாடலில் ஈடுபட்டதால் உன் பூசையை ஏற்க சிறிது காலம் தாழ்க்க நேர்ந்தது என இறைவன் திருக்குறள் அசரீரியாய் கேட்டது.ஈசரையே மகிழ்வித்த அந்த சுந்தரர் பெருமானைத் தரிசித்து மகிழ வேண்டி, நன்னீர்சூழ்ந்த சோழநாடு நோக்கி செல்ல தீர்மானித்து சிலரை மட்டும் தன்னோடு அழைத்துக்கொண்டு கொடுங்களூரை நீங்கி சோழநாடு நோக்கி பயணித்தார். ஆசைதீர பொன்னிநதியில் நீராடி திருப்பெரும்பற்றப்புரியூரை அடைந்து அவ்வூர் ஈசனை வணங்கினார். இத்தனைநாள் தன் மனதில் காண எண்ணிய தில்லையை  அடைந்து ஆனந்தக் கூத்தனை வழிபட்டு பொன் வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். பெருமான் அதனை ஏற்றருளியதற்கு அடையாளமாக அங்கு திருச்சிலம்பொலி காட்டியருளினார் ஈசர்.

அச்சமயம் திருநாகைக்காரோணம் சென்று திருவாரூர் வந்தடைந்தார் சுந்தரர். சுந்தரர் திருவாரூர் சென்றதை அறிந்து திருவாரூரை அடைந்து சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார் சேரமான். காணததை கண்டதாய் இருவர் மனமும் பூரிப்படைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி வணங்கி உவகை உற்றனர். இருவரும் திருவாரூர்ப் பூங்கோயில் சென்று வழிபட்டு மன மகிழ்வுற்றனர். சேரர்பிரான் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தால் பெருமானைப் போற்றினார். பின் சேரமான் பெருமாள் சுந்தரரின் வேண்டுகோளுக் கிணங்கி  அவர்தம் திருமாளிகையில் பல நாட்கள் அவரோடு உடனுறைந்து மகிழ்ந்தார். பறவையார் தினமும் அறுசுவை உணவைபடைத்து உபசரித்தார். பின் இருவரும் மதுரையம்பதியை தரிசிக்க எண்ணி கிளம்பினர். பாண்டியநாடடைந்து பிறைசூடிய இறைவனின் திருப்புத்தூரை அடைந்தனர். மணிமாடங்கள் நிறைந்த தொன்நகரான மதுரையை வந்தடைந்தனர். இருபெரும் அடியார் வருவதனை அறிந்த மதுரைமன்னன் தானே நேரில் சென்று வரவேற்று நகரில் அழைத்து சென்றான். அம்மன்னன் கோச்சடையான் ரணதீரனே, அதன்பின் இருவரும் திருப்புவனம், திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவேடகம் முதலிய தலங்களை தரிசித்தனர். பின் பாண்டியனிடம் விடைபெற்று தென்பாண்டி தலங்களான திருக்குற்றாலம், திருநெல்வேலி, திருராமேச்சுவரம் அடைந்து வணங்கினர், அங்கிருந்து இலங்கை சென்று மாதோட்டம், திருக்கேதீசுவரம் சென்று வணங்கி மீண்டும் பாண்டியநாடடைந்து திருச்சுழியல், திருக்காணப்பேர், திருப்பாம்புணி சென்று வணங்கி மீண்டும் சோழநாடடைய எண்ணி திருக்கண்டியூர், திருவையாறு சென்று வணங்கி அதற்கடுத்து கொங்குநாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர். அதன்பின் மலைநாடான வஞ்சி நகரையடைந்தனர், தன்மன்னர் சுந்தரருடன் வருகிறார் என்பதனையறிந்த அமைச்சர், மக்கள் சேரநாட்டையே அலங்கரித்தனர். இருவரும் கொடுங்கோளூர் சென்றடைந்தனர். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ் வித்தார். அதன்பின் ஆரூரார் நினைவு வர சுந்தரர் சேரமானிடம் பிரியாவிடை பெற்று கிளம்பினார். அதன்பின் மீண்டும் சேரமானின் நினைவுவர மீண்டும் கொடுங்களூர் வந்தடைந்தார் சுந்தரர். இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர்.ஒருநாள் சேரமான் திருமஞ்சனசாலையில் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்தபோது சுந்தரர் திருவஞ்சைக்களம்  இறைவரை வணங்கி, "தலைக்குத் தலைமாலை" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். சுந்தரருக்கு அருள்புரிய விரும்பிய ஈசர், சுந்தரரை திருக்கயிலாயத்திற்கு  அழைத்து வர இந்திரனையும், தேவகணங்களையும் பணித்தார்.தேவர்கள் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்து இறைவனது விருப்பத்தை தெரிவித்தனர். சுந்தரர் இறையாணையை ஏற்று சேரமானை மனத்தில் சிந்தித்துக் கொண்டு வெள்ளை யானையின் மேல் ஏறி "தானெனை முன் படைத்தான்" என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக் கயிலாயம் சென்றார்.சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்த சேரமான் தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று சுந்தரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டுகளித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் குறிப்போடு குதிரையின் காதில் திருஐந்தெழுத்தினை ஓதி அக்குதிரையின் மீது அமர்ந்து வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்குவாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர். சுந்தரர் தான் முன்சென்று ஈசனிடம், தம் நண்பான சேரனின் வருகையும் தெரிவித்து விண்ணப்பித்தார். ஈசன் சேரனை உள்ளே அழைத்து"இங்கு நாம் அழையாமல் வந்தது ஏன்?"என சேரனிடம் கேட்க, அதற்கு அவர் ஈசன் முன்னரே திருக்கயிலாய ஞானஉலாவை இறைவன் முன்னே கயிலாயத்திலேயே இயற்றி பாடும் பெறும்பேறு பெற்றார்(சுந்தரர் புராணத்தில் இவற்றை விரிவாய் காண்போம்) அதன்பின் சுந்தரரோடு சேரமானும் சிவகணங்களாய் திகழ்ந்து திருக்கயிலாயத் தொண்டு புரிந்தனர்.

"கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
சுவரோவியம் : தஞ்சை பெரியகோவில்

#தினம்ஒருஅடியார்
#கழறிற்றறிவார்
#முப்பத்துஆறாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog