தினம் ஒரு அடியார்-56
பூசலார் நாயனார்:
நல்லொழுக்கம் பேணும் சான்றோர் பலர் நிறைந்த தொண்டை நாட்டினில், நாள்தோறும் நலமான நான்கு வேதங்களும் நிலைபெற்று வழங்கிவரும் பழமையானபதி திருநின்றவூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் தோன்றிய மாமணி பூசலார் நாயனார்.
இவரது பூசைநாள் : ஐப்பசி அனுஷம் சுந்தரரின் சமகாலத்து நாயன்மார் இவர், இவரின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
தம் சிந்தையில் தோன்றும் உணர்வுகள் யாவற்றையும் ஈசனின் திருவடியில் சென்று சேர்த்து நின்றார். ஈசனின் அன்பிற்கு உகந்த அடியார்களுக்கு செய்யும் தொண்டே ஈசனுக்கு செய்யும் தொண்டு என்று நினைத்து வாழ்ந்து வந்தார். ஈசனுக்கு தாம் கோவில் கட்டியே தீருவேன் என்று மனதில் ஓர் எண்ணம் கொண்டு அந்த நினைப்பாகவே வாழ்ந்து வந்தார். அவ்வாறு கோவில்கட்ட அவருக்கு பெருநிதி அவருக்கு இல்லையெனினும், எப்படியும் கட்டியே ஆவது என உறுதிபூண்டார். ஒரு கோவில் கட்ட தேவையான பொருட்களை தன் உள்ளத்திலேயே சேர்த்துக்கொண்டு வந்தார்.
[சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி
நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே
ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்
காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்]
மனதளவிலேயே எல்லா பொருட்களையும் சேர்த்தபின், ஆகமப்படி கோவில்எழுப்ப தச்சரை அழைத்துக்கொண்டு வந்து நல்லநாளில் அஸ்திவாரம் தோண்டினார். அல்லும் பகலும் அயராது அடிமுதல் உபானம் வரையில் கோவில் கட்டினார், விமானத்துடன் சிகரமும் கட்டி முடித்தார்
(நிஜம் எது? கற்பனை எது? என உணரா நிலையை மாயபுலன் உணர்வுகள், என்றும் பிறழ்நம்பிக்கை(hallucination, delusion) என்றும் அழைக்கப்படுகிறது)
ஒருவாறு கோவிலுக்கு மதில்கள், சுண்ணம் முதலான சாந்துகள் பூசி, திருக்குளம் எழுப்பி அனைத்து விதமான பணிகளையும் முடித்து இறைவனையும் பிரதிஷ்டை செய்ய எண்ணும் வேளையில், காடவர்கோன் காஞ்சியில் பெரும் பொபெருட்செலவில் கோவில் ஒன்றை எடுப்பித்திருந்தான்.
இக்காடவர்கோனே நாம் முன்னர் பார்த்திருந்த கழற்சிங்க நாயனார் எனும் ராஜசிம்மபல்லவன். பூசலார் புராணத்தில் வரும் காடவர்கோன் கட்டிய கோவில் என்பது தற்போது காஞ்சிநகரில் உள்ள உலகப்புகழ்பெற் கைலாசநாதர் கோவிலே.
சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது. மூன்றுதளங்களைக் கொண்டு கட்டப்பட்டது இக்கோவில். கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார அறை எனும் புதிய நுட்பத்தை புகுத்தப்பட்ட கோவில். திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தென்முகக் கடவுளான தெட்சினாமூர்த்தியும், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். இறைவனின் மலரை முகர்ந்ததாய் குற்றம் சாட்டி இவளது மூக்கினை.தான் செருத்துணையார் அரிந்து விடுவார். பல்லவருக்கும் சாளுக்கியருக்கு பகை உச்சத்திலிருந்த சமயம் அது. இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை வெல்வதற்காக படையெடுத்து வரும்பொழுது புதுப்பொலிவுடன் காணப்படும் கைலாசநாதர் கோயிலைக்கண்டு வியந்து, அதன் வழிபாட்டிற்காக தானம் அளித்தான். அழிக்க வேண்டும் என்று வந்த மன்னன் மனம்மாறியதை இங்கு காணும் அம்மன்னனின் கன்னடக் கல்வெட்டு கூறுகிறது.
விக்கிரமாதித்தனுடன் வந்த தேவி லோக மகாதேவி இக்கோயிலைக் கண்டு போற்றி இதே போன்ற கோயிலை கர்நாடக மாநிலத்தில் பட்டடக்கல் என்ற இடத்தில் எழுப்பினாள். "லோக மகாதேவீசபுரம்' என்று அக்கோவில் அன்று அழைக்கப்பட்டது. இச்செய்திக்கு ஆதாரம் இல்லையெனினும் பட்டடக்கல் விருபாக்ஷா கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை போன்றே இருக்கும்
அன்று இரவு மன்னர் கனவில் தோன்றிய ஈசன், பூசல் எனும் பெயருடையஎம் அன்பன் ஒருவன் இடைவிடாத சிந்தனையால் எமக்கொரு கோவில் கட்டியுள்ளான். ஆகவே யாம் நாளை அங்கு எழுந்தருளவுள்ளோம்! நீ இங்கு குறித்துள்ள செயலை நாளை மறுநாள் வைத்துக்கொள்வாயாக! என கூறி மறைந்தார்.
திடுக்கிட்டு விழித்த மன்னன், உடனே பூசலாரின் இல்லம் தேடி விசாரித்து சென்றான். பூசலாரை அடைந்து அவரிடம் தாம்கண்ட கனாவை கூறினான். அதைக்கேட்டு ஆனந்தமடைந்த பூசலார் இந்த எளியோரின் மேல் இருந்த ஈசனின் கருணையை எண்ணி வியந்து போற்றினார். ஈசனே விரும்பி உறையும் அக்கோவிலை தான் பார்க்க எண்ணி பூசலாரிடம் மன்னன் கேட்க, தான் கோவில் கட்ட எண்ணியதையும், அதற்குரிய பொருள் இல்லாமையால்
மனதில் தான் கட்டிய கோவிலினையும் கோவில் கட்டிய விதத்தினையும் விரிவாக எடுத்துகூறினார்.
பூசலாரின் பக்தியை மெச்சிய காடவர்கோன் அவரின் திருவடியை பணிந்து வணங்கினார். அதன்பின் தன்மூதூரை அடைந்தார்.
ஈசன் கூறிய அந்நாளில் பூசலாரின் மனக்கோவிலில் சிவபெருமானை எழுந்தருளச்செய்தார். மேலும் அடுத்தடுத்து ஆற்றவேண்டிய பூசைநெறிகளை தவறாது செய்து முடிவில் தில்லைக்கூத்தனின் திருவடிநிழலை அடைந்தார்.
"மன்னிய சீர் மறைநாவல் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்
காஞ்சிகோவில் புகைப்படங்கள்:
Murugaraj balu
Yaazh photography
#தினம்ஒருஅடியார்
#பூசலார்நாயனார்
#ஐம்பத்துஆறாம்நாள்