Thursday, 14 May 2020

கனம்புல்ல நாயனார்


தினம் ஒரு அடியார்-46

கனம்புல்ல நாயனார்:

வடவெள்ளாற்றின் தென்கரையிலுள்ள இருக்குவேளூரில் பிறந்தவர் இவர். 
இவரது பூசைநாள்: கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்,
இருக்குவேளூர் தற்சமயம் பேளூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூர் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ளது. இவ்வூர்தான் கணம்புல்லனார் பிறந்த ஊர் என அறிஞர்களால் பொதுவாய் கருதப்படுகிறது! 
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருக்குவேள் எனும் சங்ககால வேளிர் குழு சோழர்காலம் வரையிலும் தழைத்து இருந்தது. சோழ, பாண்டிய நாட்டின் எல்லைப்பகுதியாய் வெள்ளாறு இருந்தது, இதை கருத்தினில் கொண்டால் இருக்குவேளிர் ஆண்ட புதுக்கோட்டை பகுதிகளாய் கூட இருக்கலாமோ என கருத இடமுள்ளது.  இவர் அப்பர்-சம்பந்தருக்கு காலத்தால் முற்ப்பட்ட நாயனார். இவரது காலம் கி.பி 300-500 என கருதப்படுகிறது! 

செல்வச்செழிப்பான செல்வந்தர் குடியில் பிறந்தவர் இவர். மாடமாளிகைகள் நிறைந்த வடவெள்ளாற்றின் தென்கரையில், சோலைகள் நிறைந்த பலாப்பழத்தினின்று வடிந்த மதுவானது நீர் மடுக்களை நிறைக்கும் வளமுடைய வயல்களை உடைய இருக்குவேளூரில் பிறந்தவர் இவர். அவ்வூரிலுள்ள மக்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கியவர் இவர். பெருஞ்செல்வம் சூழ இருந்தாலும் ஈசனின் திருவடியையே உலகின் மெய்ப்பொருள் எனும் நெறியை பின்பற்றி வந்தார்.  சிவன் கோவிலில் இடையறாது நந்தாவிளக்கு ஏற்றும் திருப்பணியை செய்து வந்தார். அக்காலத்தில் விளக்கேற்றும் பணி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என ஆராய்தல் அவசியம். விளக்குஓளி, தீப்பந்தம் மட்டுமே அன்று ஒளிதருவதாய் இருந்தது உலகிற்கு. அன்று இருள் என்பது இருளாகவே இருந்தது. இன்று போல் இரவை பகலாக்கும் உக்திகள் அன்று இல்லை. மேலும் விளக்கெரிக்க ஆகும் செலவும் அதிகம். பெரும்பாலும் ஆடு,பசு நெய்களையே எரிபொருளாய் கொண்டனர் எனவே இதற்கான செலவும் அதிகம். உண்மையான நெய்யினால் ஒரு அகல்விக்கு எரிக்க ஆகும் செலவை கணக்கிட்டாலே அதன்  செலவு அதிகம், தினமும் கோவிலில் நிறைய விளக்கேற்ற வேண்டி வருவதால் அதன் செலவினங்களாலேயே நிறைய நாயன்மார்கள் தன் செல்வத்தினை இழந்து வறுமையில் வாடியது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தான் கொண்ட நெறியின் உறுதிபாட்டை மாற்றாததாலே அவர்கள் இன்றுவரை போற்றுதலுக்குரியவராய் உள்ளனர்.

தினந்தோறும் இடையறாது விளக்கேற்றும் பணியில் திருத்தொண்டு புரிந்து வந்ததனால் வறுமையின் பிடியில் சிக்கினார் கணம்புல்லர். தில்லைக்கூத்தனை தரிசிக்கும் ஆவல்மிகுதியால் சிதம்பரப்பதியை அடைந்தார். அத்தகையொரு நாளில் திருப்புலீச்சரக் கோவிலில் விளக்கெரிக்க தன் வீட்டிலிருந்த பொருட்களை விற்று அதைக்கொண்டு திருவிளக்கு எரித்து வந்தார். பொருளும் தேய்ந்தது!  பரம்பரை பணக்காரரான கணம்புல்லனார், விளக்கெரிக்க பிறரிடம் பணம்கேட்க அஞ்சினார்.உடல்வருத்தும் நிலையில் கணம்புல்லை அரிந்து வந்து, அதனை விற்று அந்த பணத்தில் நெய் வாங்கிவந்து விளக்கேற்றிவந்தார். ஒருநாள் தான்கொண்டுவந்த புல்லை வாங்க ஆள் இல்லாமல் தவித்தார். எனினும் திருத்தொண்டினை கைவிட அவர் மனம் ஏற்கவில்லை. எனவே தன்கையில் இருந்த கணம்புல்லை எரித்து, இறைவன்முன் அழகுபோல் விளக்காய் காமித்தார்.  குறைந்தநேரமே அப்புல் எரிந்தது. மேலும் கையிருப்பு புல்லும் தீர்ந்தது. விபரீத எண்ணம் உதித்தது அவருக்கு, உடனே தனது அள்ளிமுடிந்த நீண்ட கூந்தலை அவிழ்தார். தன் தலைமுடியை கொளுத்தினார். தன் தலையையே விளக்காய் பாவித்து திரியாய் தன் முடியை ஆக்கினார். அவரது அந்த தூயஉள்ளத்தினையும், பக்தியின் திறத்தினையும் கண்டு வியந்த ஈசனார் தான் உறையும் சிவலோகத்தில் கணம்புல்லரை சேர்த்து அருள்புரிந்தார்.

கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கனம்புல்லநாயனார்
#நாற்பத்துஆறாம்நாள்


1 comment:

Popular Posts In This Blog