Tuesday, 12 May 2020

கலிய நாயனார்

தினம் ஒரு அடியார்-43

கலிய நாயனார்:

தொண்டைநாட்டு திருவொற்றியூரில் எண்ணெய் விளைத்தொழில் புரியும் செக்கார் வகுப்பில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஆடி கேட்டை
சிவபெருமான் எழுந்தருளியுள்ள பழம்பெரும்பதி திருவொற்றியூர். மலர் நிறைந்த சோலைகளையும், தேர்கள் உலாவும் வீதிகளையும் கொண்டது. இவ்வூரில் அனைத்து சமயத்தினரும் வாழ்ந்தனர்.  திருவொற்றியூரில் வெயில் போன்று ஒளிவீசும் பல்வகை மணிகள் உண்மையான தரத்துடன் கிடைத்தது. இங்கு தயில வினை(செக்கு) தொழில் இயற்றும் மனிதர்கள் வாழ்ந்துவரும் பகுதி 'சக்கரபாடித் தெரு' எனப்படும். செக்குத்தொழில் புரிவோர் அவர்கள் ஆற்றிய அறத்தின் காரணமாய் மண்ணில் அவர்கள் குடியில் தோன்றினார் கலியனார். அளவுகூற முடியாவண்ணம் செல்வவளம் படைத்தவர் இவர். திருவொற்றியூர் கோவில் முழுவதும் தினமும் விளக்கெரிக்கும் பணியை செய்து வந்தார். எண்ணில்லாத திருவிளக்கை எரித்து வந்ததன் பயனாய் அவரது செல்வங்கள் யாவும் திரியிட்ட தீபமாய் கரையத் தொடங்கியது. திரியின் அளவு குறைந்து கொண்டே வந்தாலும், அதன் ஒளி மங்காததை போல செல்வம் கரைந்து வந்தாலும் இடையறாது விளக்கேற்றும் திருப்பணியை செய்து வந்தார். பிறர் செக்குகளில் பணிக்கு சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தினமும் விளக்கேற்றினார். நாளடைவில் அவ்வேலைக்கும் பலர் வந்ததால், அப்பணியும் கிடைக்காமல் போனது. வீட்டிலுள்ள பொருட்களை விற்று, நாளடைவில் அதுவும் கரைய, தனது வீட்டினையும் விற்று விளக்கேற்றும் பணியினை செய்தார். அதில் கிடைத்த பொருளும் காணாது போக, தன் மனைவியை விற்பதற்கும் துணிந்தார். வீதியெங்கும் மனைவி அழைத்து சென்று விலைகூவி விற்க முனைந்தார். ஆனால் ஒருவரும் வாங்க முன்வரவில்லை. கையறு நிலைக்கு சென்றார். திருக்கோவிலுக்கு வருத்தத்துடன் சென்றார். நேரம் கரைய ஆரம்பித்தது. விளக்கேற்றும் நேரமும் வந்தது.மனம் பதைத்த கலியனார், 'மணிவண்ணச் சுடர்விளக்குமாளில் யான் மாள்வேன்' எனக்கூறி அச்செயலையும் ஆற்த் துவங்கினார். விளக்கு எங்கெல்லாம் ஏற்வேண்டுமோ, அங்கு சென்று தன் உடலைக்கீரி தன் குருதியையே அங்கு எரிபொருளாய் நிரப்பினார்.அடுத்து தன் கழுத்தை அரிந்து நிறைய குருதியை பெற கத்தியை கழுத்தருகே கொண்டு சென்றார். ஈசனின் கை உடனே கலியனாரின் கரம் பற்றியது. கலியானார் காணும் வண்ணம் காளைவாகனத்தில் உமையுடன் தோன்றினார் ஈசர். ஒளிதிகழும் முகத்துடன் உச்சியின் மீது குவிந்த கையுடன் அஞ்சலி செய்து நின்றார் கலியனார். தன் சிவபுரியில் வீற்றிருக்கும்படி அருளிச்செய்தார் எம்பெருமான்.

"கை தடிந்த வரிசிலையான் கலியன் அடியார்க்கும் அடியேன் "

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கலியநாயனார்
#நாற்பத்துமூன்றாம்நாள்


1 comment:

  1. சிறப்பான பணி.... அதுவும் பல உண்மை தகவல்களுடன்

    ReplyDelete

Popular Posts In This Blog