Sunday, 10 May 2020

அதிபத்த நாயனார்

தினம் ஒரு அடிகளார் 41
அதிபத்த நாயனார் :

சோழநாட்டின் நாகப்பட்டினத்தில் செம்படவர் குலத்தில் தோன்றியவர் இவர். இவரது பூசைநாள் : ஆவணி ஆயில்யம். காம்காலமாய் தொன்றுதொட்டு அரசாண்டுவரும் சோழர்குலத்தின் பொன்னிநாட்டில் சிறப்புற விளங்கிய ஓர் கடிகை நகர் நாகப்பட்டினம். பொன்போல் ஒளிவிடும் மாடமாளிகைகள் நிறைந்த ஊர். இயல்பாகவே பேரொலியினை உடைய ஊர், திருமகள் வாழ்விடமாய் கடலினை உடையது. யானைகள், குதிரைகள் என அனைத்து விதமான செல்வங்களை கொண்டது இந்த துறைமுகப்பட்டினம், செல்வச்செழிப்பான இந்நகரில் நுரையுடன் தவழ்ந்து விளையாடும் நீண்ட அலைகள் நிரம்பிய கடலுக்கு சற்று தள்ளி நிலைபெற்ற குடிகளாய் இருந்து மீன்பிடிதொழிலை மட்டும் செய்துவரும் பரதவர்கள் நிரம்பிய "நுளைப்பாடி" எனும் சிற்றூர் இருந்தது. உலர வைக்கப்பட்டிருக்கும் மீன்களை கவர்ந்து உண்ணவரும் குருகுகளுடன் வரும் அன்னப்பறவை நிரம்ப இருக்கும். நெடிதான மீன்வலையை உயர்த்தி சுருட்டி வைப்பபதற்கான முயற்சியில் ஈடுபடும் மீனவர் எழுப்பும் ஒலியும், மீன்வியாபரத்தில் விலைகூறி விற்பவர், வாங்குபவர் எழுப்பும் ஒலியும் அலைகள் வழியாக ஒலியெழுப்பும் கடல் ஒலிக்கு நிகரானது. இவ்வாறான சிறப்புகள் நிறைந்த நுளைப்பாடியில் ஈசனுக்கு சிவத்தொண்டு புரிந்து வந்தார் அதிபத்தர் எனும் அடியார். நுளையர் இனத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார். அலைகள் வீசும் கடலில் புதுப்புது யுக்தியை கையாண்டு விதவிதமான உயர்வகை மீன்களை பிடித்து உயர்வாய் வாழ்ந்து வந்தனர் அவ்வூர் மக்கள். தடையற்ற மீன் வரவினால் செழிப்புடன் வாழ்ந்த அதிபத்தர், தன்மீன்பிடி தொழிலில் முதலில் கிடைக்கப்பெறும் மீனினை மீண்டும் கடலிலேவிட்டு, "இம்மீன்  நட்டம் பயின்றாடிய நம் இறைவனுக்கு ஆகுக" என வேண்டி வந்தார். இச்செயலை நாள்தோறும் தவறாது செய்துவந்தார். இடையறாது இத்தொண்டாற்றி வரும்வேளையில், சிலநாட்களாக அதிகம் மீன் மாட்டாது, ஒருமீன் மட்டுமே மாட்டும். இது இறைவனின் அன்புசோதனையே என உணர்ந்து, "கிடைப்பது ஒரு மீனாயினும் அது இறைவனுக்கே" எனும் கொள்கையுடைய அதிபத்தர் அதைமீண்டும் கடலிலேயே விட்டார். தினசரி மீன் கிடைக்காது அதிபத்தரின் குடும்பமே வறுமையில் வாடியது. வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் விற்று குடும்பம் நடத்தும் நிலைமை ஏற்ப்பட்டது! உணவு கிடைக்காமல் குடும்பத்தினரும் உறவினரும் சாககிடைக்கையில், அன்று கிடைத்த ஒருமீனையும் கடலில்விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினார்.

தினமும் இது தொடர்கதையாகியது. உணவு கிடைக்காததால் வறுமையில் உடல் பொழிவிலந்தது, அப்போதும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார். அவ்வகையில் ஒருநாள் வலைவீசுகையில் மீன் ஏதும் கிடைக்கவில்லை. மாறாய் ஈசன் அருளால் பொன்னால் ஆன பிரம்மாண்டமான ஒருமீன் கிடைத்தது. அம்மீனை விற்றால் இவ்வுலகையே விலையாய் கொள்ளும் தகுதிஇருந்தது அம்மீனுக்கு. ஆனாலும் தான் கொண்ட நெறிப்படி வறுமையாய் இருப்பினும் அம்மீனை கடலில் விட்டார்.

 பொருளை மையமாய் கொண்டு இயங்கும் இவ்வுலகில், பொருட்பற்றினை ஒழித்து நின்ற அதிபத்தரின் திருத்தொண்டின் திறத்தை வியந்த இறைவன் தனது காளைவாகனத்தில் வானில் எழுந்தருளினார். அந்நிலையில் தேவர்கள் கற்பகப்பூ மழையைத் தூவினர். அதைக்கண்டு நிலத்தில் விழுந்து பணிந்தார். சிவபெருமான் தன் கைலாயத்தில் சிறப்புற வீற்றிருக்கும் அடியார்களில் ஒருவராக இருந்துவரும் பெரும்பேற்றினை பெற்றார்.

"விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அதிபத்தநாயனார்
#நாற்பத்துஒன்றாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog