Sunday, 10 May 2020

கலிக்கம்ப நாயனார்

தினம் ஒரு அடியார்-42

கலிக்கம்ப நாயனார்:

நடுநாட்டிலுள்ள பெண்ணாகடம் என்ற ஊரில் வணிகர்குடியில் பிறந்தவர் இவர். இவரது பூசைநாள்: தை ரேவதி.

நல்லொழுக்க நெறிகளை உரிமையாக பெற்று பழமையான மரபு வழிபட்ட இல்லறநெறிகளை பின்பற்றி வாழ்ந்துவரும் பெருங்குடி மக்களை உடைய ஊர் பெண்ணாகடம். இத்தகைய ஊரில் தோன்றியவர் கலிக்கம்பர் பெண்ணாகடத்தில் வீற்றிருக்கும் தூங்கானைமாடத்து ஈசனைத்தவிர வேறு எதையும் எண்ணாதவர், என உலகம் போற்றும்வண்ணம் வாழ்ந்து வந்தார்.

[சோழர் காலக் கல்வெட்டுக்கள் நிறைய இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடமுடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களின்  தோற்ற அமைப்பில், சில கோயில்கள்  தூங்கானை விமானம்(கஜப்பிரஷ்டம்) என வழங்கப்படும் யானையின் பின்புறம் போன்ற அமைப்புடைய கோவில்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது!
இக்கோவில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம் ஆகும்.

"மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம்                                                            தொழுமின்களே!"
வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக என சம்பந்தர் கூறுகிறார்.

தமிழகத்தின் பழமையான கற்கோவில் எனக்கருதப்படும் கூரம் சிவன் கோவில்(கி.பி 679) இவ்வகை கோவிலே, இக்கோவில்கள் தொண்டைமண்டலத்திலேயே அதிகம் காணப்படுகிறது! மிக அரிதாக புதுக்கோட்டையில் குலோத்துங்கன் கால கற்றளி ஒன்று இவ்வகையில் உள்ளது.
சம்பந்தரின் காலம் 630-640 என கூறப்படுகிறது. அவர் பாடிய பாடலிலேயே தூங்கானை மாடக்கோவில் என வருவதனால் குறைந்தது அவருக்கு 100-200 ஆண்டுகள் முன்பாகவே அக்கோவில் இருந்திருக்கும். ஆகவே  தமிழகத்தின் முதல் தூங்கானை மாடக்கோவில் இக்கோவில் எனக்கூறலாம். ஆரம்பத்தில் இக்கோவில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் சோழற்காலத்தில் புணரமைக்கப்பட்டு கருங்கற்களால் தற்போதைய கட்டுமானம் கட்டப்பட்டிருக்கும்.]

சிவஅன்பராகிய கலிக்கம்பர், ஈசன்அடியார்கள் எவரேனும் தென்பட்டால் அவர்களுக்கு நல்ல திருவமுதும், கறிவகைகளும், நெய், தயிர், பால், கனி முதலான உணவுவகைகளை தூய்மையான முறையில் தயாரித்து அவர்கள் உண்ண பின்பே தாம் உண்ணும் வழக்கம் உடையவர். அடியார் விரும்பும் நிதிகளையும், பிறவற்றையும் குறைவில்லாமல் வழங்குவார். ஒருநாள் தம்வீட்டிற்கு அடியார்களை திருவமுது உண்ண எழுந்தருளுமாறு வேண்டினார்.முதலாய் அடியார்களின் திருவடியை நீர்விடுத்து விளக்க முற்பட்டார். அச்சமயம் கலிக்காமரின் அழகுமிக்க மனைவி அடியார் உண்ண உயரிய பதார்த்தங்களை தயாரித்து, கரகத்தில் நீரை ஏந்தியபடி,தன் கனவரின் அருகே நின்றார். மனைவியார் நீர்வார்க்க கலிக்கம்பர் அடியார் பாதத்தை தூய்மை செய்தார். முன்பு கலிக்கம்பருக்கு பணியாளாய் இருந்த ஒருவன், அடிமைப்பணியை சினந்து வெளியேறினான். அதன்பின் எலும்பும், அரவும் சூடிய சிவபெருமானின் அடியாராகி திருவேடம் தாங்கி, கலிக்கம்பர் வீட்டிற்கு அழைத்துவந்த அடியார்களில் ஒருவனாக வந்து நின்றார். அவரின் பாதத்தினை தூய்மை செய்ய முனைந்தார் கலிக்காமர். தம்கைகளினால் அவ்வடியாரின் பாதத்தை பற்றியபோது, முன்பு நம் வீட்டில் இருந்த ஏவலாள் தான் என மனதில் எண்ணினார் கலிக்கம்பரின் மனைவி, இந்த சிந்தனையில் அவர் நீர்விட தவறிவிட்டார். தன்மனைவியின் மனத்தினை குறிப்பால் உணர்ந்தார் கலிக்கம்பர். தன் மனைவிக்கு இவ்வடியார் முன்பு தன்வீட்டில் புரிந்த ஏவல் தொழிலே நினைவில் உள்ளது. ஆகவே நீர் வார்க்காமல் விட்டுவிட்டாள், என தவறாய் கருதி, அவர்கையிலிருந்த கரகத்தை வாங்கி, அருகே இருந்த அரிவாளால் கைக்கை ஓங்கி வெட்டினார். பின் கரகத்து நீரை கொண்டு தானே அடியாரின் திருவடிகளை தூய்மை செய்தார். அடியார் உண்ண உணவினை தானே பரிமாறினார். சலியாத உறுதியான திருத்தொண்டினை அளவற்ற பெருமையுடைய இறைவன் மெச்சியவாறு, அவரை தன் திருவடிநிழலில் என்றும் இருக்குமாறு அருள்புரிந்தார்.

"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்."

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கலிக்கம்பநாயனார்
#நாற்பத்துஇரண்டாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog