தினம் ஒரு அடியார்-49
வாயிலார் நாயனார்:
இலக்கியங்கள் சிறப்பித்து கூறும், வளமை பொருந்திய, வழிவழியாய் செல்வம் நிறைந்த பதியான திருமயிலைபுரி எனும் தொண்டைநாட்டு மயிலாப்பூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: மார்கழி ரேவதி
ஓளிநிறைந்த அழகிய கடற்கரை முழுவதும் மரக்கலங்களில் இறக்குமதி செய்யப்படும் யானைகளும், முத்துக்களும் அவ்வூரின் துறைமுகபட்டினத்தில் வந்து இறங்கும். தெருக்களின் இருமருங்கிலும் மாடமாளிகைகள் நிறைந்திருக்கும். மயிலையின் தெருக்கள் என்றும் திருவிழாக்களை போல கூட்டம் நிறைந்திருக்கும். நிலையான சிறப்பினைக் கொண்ட திருமயிலாபுரி மாநகரில் மூத்தகுடிகளான வேளாள குடியில் நன்மையடையும் வண்ணம் தோன்றியவர் வாயிலார். இவர் சம்பந்தருக்கும், சுந்தரருக்கும் இடைபட்ட காலத்தில் வாழ்ந்த நாயன்மார் ஆவார்.
சிவபெருமானின் திருத்தொண்டில் விருப்பமுடன் ஈடுபட்டு, அன்பின் மிகுதியால் வாழ்ந்து வந்தார், இறைவன் கருணையை மறக்க இயலாது, தன் மனதிற்குள்ளாகவே கோவிலைக்கட்டி சிவனை எழுந்தருளச் செய்தார். தன் பக்திசிந்தனையையே சுடர்விளக்காய் ஏற்றி வைத்தார்.அன்பின் ஆனந்தத்தினையே திருமஞ்சனநீராய் கொண்டு தினமும் நீராட்டினார்.
உள்ளத்தாலேயே சிவபெருமானை வழிபட்டு வந்த வாயிலார், அத்தூய வழிபாட்டினை இடையறாது தினமும் செய்து வந்தார். அவரின் பகட்டில்லாத உண்மையான பக்தியினை உணர்ந்த சிவபெருமான், தன்திருவடி நிழலிலே தங்கியிருந்து தன்னை எப்போதும் வணங்கி நிற்கும் பெரும்பேற்றினை அருளினார்.
"துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்
#தினம்ஒருஅடியார்
#வாயிலார்நாயனார்
#நாற்பத்துஒன்பதாம்நாள்
No comments:
Post a Comment