Friday, 22 May 2020

செருத்துணை நாயனார்

தினம் ஒரு அடியார்-53

செருத்துணை நாயனார்:

செல்லும் இடமெல்லாம் வளங்கொழிக்க செய்யும் பொன்னிநதியை தடுத்து நிறுத்தி மதகிட்டு அடைத்து, அம்மதகுகளில் கயல்மீன்களையும், செழுமையான மணிகளை கொண்டுவந்து சேர்க்கும் ஊர் தஞ்சாவூர். இவ்வூரில் வாழும் மக்கள் எண்ணமும், செயலும் ஒன்றே என்று வாழ்ந்து வருபவர்கள். 
மகேந்திரவர்மன் எழுப்பிய திருச்சி குடைவரை கோவிலில் முதன்முதலாய் "தஞ்சஹரக" எனும் கிரந்தலிபி எழுத்து காணப்படுகிறது! இது மகேந்திரனின் வெற்றிபெயராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது! அதன்பின் அப்பரின் திருவீழிமலைப் பதிகத்தில் "தஞ்சை தளிக்குளத்தார்" என்று தஞ்சையிலுள்ள ஓர் பழம்பதியை பற்றி குறிப்புள்ளது. அதற்கடுத்து திருமங்கையாழ்வாரும் திவ்யப்ரபந்த பாசுரங்களில், "தஞ்சை யாளியைப் பொன்பெய..." என்று பாடுகிறார்,அதன்பிறகு முத்தரையமன்னனான பெரும்பிடுகு முத்தரையனின் செந்தலை கல்வெட்டு அவரை "தஞ்சைகோன்" என சிறப்பாய் கூறுகிறது. முத்தரையரிடமிருந்து விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி "தஞ்சை கொண்ட கோப்பரகேசரி" என அழைத்துகொள்கிறார், அதன்பின் அந்நகர் சோழர்களின் தலைநகராகி இன்றுவரை வரலாற்றில் ஓர் சிறப்பான இடம்பெற்று வருகிறது.

இவ்வளவு பழம்பெருமை வாய்ந்த தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்தவர் செருத்துணை நாயனார்.
இவரது பூசைநாள் : ஆவணி பூசம். வெந்நீறு மேனியெங்கும் பூசி ஈசனின் திருநாமத்தை போற்றுவதனையே தன் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.
அச்சமயம் பேரரசனாய் சோழதேசத்தினையும் சேர்த்து ஆண்டு வந்த கழற்சிங்கனாரின் மனைவி, திருப்பூமாலை தொடுக்கும் மண்டபத்தில் கீழுள்ள மலரை எடுத்து முகர, இதனை கண்டு பொறுக்காத செறுத்துணையார் ஒளிவீசும் கூர்மையான தன் கத்தியை எடுத்து அரசியாரின் அழகிய கூந்தலை பிடித்து சுற்றி மண்டபத்தின் படியில் கீழே தள்ளி, ஈசனின் தலையில் ஏறும் பூவையா முகர்ந்தாய்! எனக்கூறி மூக்கினை அரிந்து தள்ளினார். 
இறைவன் மீது கொண்ட தூய அன்பினால், எவருக்கும் அஞ்சாமல், இறைவன் திருவருளால், தன் தீரத்தை உலகிற்கு உணர்த்திய செருத்துணையார், வாழ்நாள் முழுவதும் சிவநெறியில் நின்று ஒழுகி, இறைவனின் தூக்கிய திருவடி நிழலின் கீழ் இனிதே இருக்கும் பேற்றினை பெற்றார்.

"மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் ."

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#செருத்துணைநாயனார்
#ஐம்பத்துமூன்றாம்நாள்

No comments:

Post a Comment

Popular Posts In This Blog