தினம் ஒரு அடியார்-54
புகழ்த்துணை நாயனார்:
அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவமறையோர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார்.
இவரது பூசைநாள்: ஆனி ஆயில்யம்
மலையை வில்லாய் வளைத்த ஈசனைத் தொட்டு திருப்பணிகள் செய்து வருவதையே நெறியாய் கொண்டு தினமும் சிவத்தொண்டு புரிந்து வந்தார்.
இந்நாயன்மாரை குறித்து சம்பந்தர், தமது பதிகத்தில்,
நிலம்த ணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கண் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்றுஓர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
[நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்]
என்று குறிப்பிடுவதால் புகழ்த்துணையாரின் காலம், சம்பந்தருக்கு முற்ப்பட்ட காலமாய் அதாவது கி.பி300-600 என உறுதியாய் கூறலாம்.
சிவபெருமானை தத்துவ முறைப்படி புகழ்த்துணையார் வழிபட்டு வரும் நாளில், இவ்வுலகில் திடீரென பஞ்சம் ஏற்ப்பட்டது. பசியால் உயிர்கள் வாடியது, உண்ண உணவின்றி தவித்தனர், ஆயினும் புகழ்த்துணையார், இறைவனை ஆதரவின்றி விடமாட்டேன் என்ற சிந்தனையுடையவராய் இரவும் பகலும் என இருநேரங்களிலும் தேன்நிரம்பிய மலர்களைக் கொண்டும், நீர்கொண்டும் பூசைகளை செய்து வந்தார். வறுமை மேலும் பெருகியது, உணவு அருந்தாது தளர்ந்துபோனார் புகழ்த்துணையார். திருமஞ்சணநீரை குடத்தில் நிரப்பி லிங்கபானத்தின் தலையில் வைத்துவிட்டு மயங்கிச்சரிந்தார். மயங்கியவர் கனவில் தோன்றினார் இறைவன், "இனி பஞ்சம் நீங்கும் காலம் வரையிலும் இங்கே தினமும் ஒருகாசு யாம் வகிப்போம்" என கூறியருளினார். துயில் கலைந்த புகழ்த்துணையார் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தார். ஆவுடைப்பகுதியில் ஓர் பொற்காசு இருப்பதனை கண்டார். முகமலர்ச்சியுடன் அதனை எடுத்துக் கொண்டார். பின் ஒவ்வொருநாளும் இந்நிகழ்வு தொடர்ந்தது. தினமும் வழிபாட்டின் முடிவினில் பொற்காசு இருப்பதனை கண்டார். அதனை விற்று அதன்மூலம் தம் வறுமையை போக்கினார்.
[அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின்னார் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்னாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார் ]
உலகமும் வறுமையை நீங்கி செழிப்படைய தொடங்கியது. அதன்பின் தம் வாழ்நாளின் இறுதி காலம் வரையிலும் இடைவிடாது சிவத்தொண்டு புரிந்து, தேவர் உலகத்தவர் தொழுமாறு இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
“புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்”
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#புகழ்த்துணைநாயனார்
#ஐம்பத்துநான்காம்நாள்
No comments:
Post a Comment