இடங்கழிநாயனார்:
இன்றைய புதுக்கோட்டை பகுதிகள் சங்கஇலக்கியத்தில் "பன்றிநாடு" என அழைக்கப்பட்டது. இது கோனாடு கானாடு என இருபெரும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டது. இவற்றில் கோனாடு நான்கு பெரும் கூற்றங்களை கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தென்பகுதி தென்கோனாடெனவும் அழைக்கப்பட்டது. அக்கோனாட்டின் புகழ்பெற்ற கொடும்பாளூரில் இருக்குவேள் எனும் வேளிர் மரபில் பிறந்தவர் இவர்.
இவரது பூசைநாள்: ஐப்பசி கார்த்திகை கொடும்பாளூர் அன்று சிலப்பதிகாரத்தில் "கொடும்பை" என அழைக்கப்பட்டது. இவ்வூர் அன்று ஒரு பெருவழியாக இருந்துள்ளது. இவ்வழியாய்தான் கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு சென்றுள்ளனர்.
இடங்கழிநாயனாரை தில்லை அம்பலத்தில் பொன்வேய்ந்த ஆதித்த சோழரின் முன்னோராக சேக்கிழார் கூறுகிறார். நம்பியாண்டார் நம்பியும், தமது திருத்தொண்டதிருவந்தாதியில்
"சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே"
என ஆதித்தனின் குலமுதல்வனாய் சுட்டுகிறார். சோழர்களின் முன்னோராய் புகழ்ச்சோழர், கோச்செங்கனான் போன்றோர் இருக்க அவர்களை சுட்டாமல் ஒரு வேளிர்குல நாயன்மாரின் முன்னோராக ஆதித்தனை கூற காரணம் எதுவென கேள்வி வருகிறது! பொதுவாய் நம்பியாண்டார்நம்பியின் காலம் ராஜராஜனின் காலமே என கூறுவர். அதனை ஏற்றுக்கொண்டால், கொடும்பாளூர் வேளிரான பூதிவிக்ரமகேசரிக்கு ஆதித்தவர்மன், பராந்தகவர்மன் என இருமகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் காலம் நம்பியாண்டர்நம்பி, ராஜராஜனுடன் ஒற்றுவருகிறது. மேலும் பூதிவிக்ரமகேசரி கரூர்வஞ்சியை வென்றதாய் தன் கல்வெட்டுகளில் கூறுகிறார்,அப்போரினை இளவரசனாய் அவரது மகன் ஆதித்தவர்மன் நடத்தியிருக்க வாய்ப்புண்டு.ஆகவே நம்பியாண்டார்நம்பி கூறும் ஆதித்தன் சோழப்பேரரசன் ஆதித்தன் என்று கொள்ளாமல் வேளிரான ஆதித்தவர்மனையே குறிப்பதாய் கொள்ளலாம்.
மன்னனாக இருந்தாலும் ஈசனின் திருவடியை போற்றுவதையே குறிக்கோளாய் கொண்டிருந்தார் இடங்கழியார். சிவனடியாரை நாள்தோறும் போற்றி வந்தார். சைவநெறியை வைதீகநெறியுடன் தழைத்து விளங்குமாறு வழிபாடுகளை சிவாகம முறைப்படி ஆக்கினார். சிவனடியாருக்கு தினமும் உணவளிப்பதனையே தம் நெறியாய் கொண்டு வாழ்ந்து வந்தார். அப்பணியானது ஓர்நாள் தடைபட்டது. உணவுப்பொருட்கள் பண்டாரத்திலிருந்து கிடைக்கவில்லை. மிகவும் மணம்வருந்திய இடங்கழியார் நெற்களஞ்சியம் சென்றார். அங்கு விசாரணை மேற்கொண்டு திருடனை கண்டறிந்தனர். மன்னர் முன்பு அத்திருடனை கொண்டு சென்றனர்.
நெற்றியில் திருநீறு பூசிய அடியார் ஒருவர் தன்முன் திருடனாய் இருக்கக்கண்டு பதறினார் இடங்கழியார். காரணம் எதுவென விசாரிக்கையில், சிவனடியாருக்கு உணவளிக்கவே அவ்வாறு செய்தேன் எனக்கூற,
''எனக்கு இவரன்றோ பண்டாரம்' என்று சொல்லிப் பாராட்டி ''சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க'' என பறையறிவித்து கூறினார்.
இவ்வாறு மதிப்பற்றதான பொருட்செல்வங்களை சிவனடியார்களுக்கு வாரிவழங்கி திருநீற்று நெறியினை உலகெங்கும் நிலைத்திருக்கச் செய்து சிவனின் அருளால் சிவஉலகம் அடைந்து இன்புற்றார்.
"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்"
சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#இடங்கழிநாயனார்
#ஐம்பத்துஇரண்டாம்நாள்
No comments:
Post a Comment