Wednesday, 20 May 2020

கழற்சிங்க நாயனார்

தினம் ஒரு நாயன்மார்-51

கழற்சிங்க நாயனார் :

பல்வர் குலத்தில் தோன்றிய அரசர் இவர். காடவர்கோன் கழற்சிங்கன் என திருத்தொண்டர்தொகையிலும், பெரிய புராணத்திலும் அழைக்கப்படுகிறார்.
இவரது பூசைநாள் : வைகாசி பரணி
கழற்சிங்கன் என்ற பல்லவமன்னன் யார் என ஆய்வாளர்களிடையே பல கருத்துகள் உள்ளது. மூன்றாம் நந்திவர்மன் என்றும் இராசசிம்மன் என்றும் இரு கருத்துகள் உண்டு.  சுந்தரரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் இவர். ஆகவே மூன்றாம்நந்திவர்மனை இவருடன் ஒப்பிடுவது முரணாகும். மேலும் இராசசிம்மன் என்ற வடமொழிசொல்லினை கழற்சிங்கன் என தமிழில் பொருள்கொள்ளலாம். இம்மன்னனுக்கு பல விருதுப்பெயர்கள் உள்ளன. வடமொழிப்புலவனாகவும், இசை, நாட்டியம், சிற்பவியல், ஓவியம் போன்ற துறைகளில் பண்டிதம் பெற்றவராய் திகழ்ந்தார். இத்திறமையினாலே தன்னை அவர் "அத்யந்த காமன்" (அளவில்லா ஆசையுடையவன்) என அழைத்துக்கொண்டார். இவர் கட்டிய காஞ்சி கைலாச நாதர் கோவிலில் "வானொலி கேட்ட வரவாறு" என்ற செய்தி பூசலார் நாயனாருடன் பெரிதும் ஒத்து போகிறது. ஆகவே இக்காரணங்களால் கழற்சிங்கன் ராஜசிம்மனே என உறுதியாய் கூறலாம். இவர் சிறந்த சிவபக்தர்.இவர் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் போன்றே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்றைய திருப்பட்டூரில்(திருப்பிடவூர்)  ஓர் கோவில் உண்டு. இக்கோவில் ராசசிம்மன் எழுப்பியிருக்க வாய்ப்பு உண்டு. 

காடவகுலகுரிசிலான கழற்சிங்கர் வடபுல நாடுகளை கவர்ந்து, தன்னை எதிர்த்த யாவரையும் ஈசனின் அருளால் வெற்றி பெற்றார். பல்லவதேசம் முழுக்க அறநெறியில் ஆட்சிபுரிந்து வந்தார். ஈசன் உறையும் கோவிலெங்கும் சென்று திருத்தொண்டு புரிந்து வந்தார். அவ்வாறான ஒருநாளில், 'சிவபுரி' என விளங்கும் தென்திருவாரூரை அடைந்து, தம் பரிவாரங்களுடன் கோவிலினுள் நுழைந்தார், அச்சயம் அவரது பட்டத்தரசி

(ரங்கபதாகை என்பது அவர் பெயர், இவர் காஞ்சி கைலாசநாதர் கோவில் வளாகத்தில் ஒரு கோவிலை எழுப்பியுள்ளார், வரலாற்றில் முதலாய் ஒரு பெண் எழுப்பிய கோவில் இதுவே)

மணம் நிறைந்த பூக்களை தன் கூந்தலில் சூடி, கோவிலின் சுற்றி அங்குள்ள சிற்பம், ஓவியம் முதலியவற்றை கண்டு ரசித்து வந்தார். அப்போது மலர்மாலை தொடுக்கும் மண்டபத்தினுள் வருகையில் ஒருமலர் தனித்து கிடந்தது. கவர்ச்சியும், மணமும் நிறைந்த அப்பூவை எடுத்து மோந்தார். அச்செயலை கண்ட 'செருத்துணை நாய்னார்' என்பவருக்கு அச்செயலை கண்டதும் சினம் தலைக்கேறியது. இறைவனின் தலையில் சூடிய மலர் அதுவென தவறாய் எண்ணி, உடனே சென்று தன் கத்தியை உருவி, அரசியின் மூக்கை ஒரே வீச்சில் அரிந்துவிட்டார்.

ஒருகனம் ஏதும் அறியாத அரசியார் அலறியபடியே குருதிமிகுதியால் மயங்கி விழுந்தார். இறைவனை வணங்கிய கழற்சிங்கர் அங்கு வந்து சேர்ந்தார். கீழே விழுந்து வலியால் அரற்றிய தன்மனைவியை கண்டார். இப்பாதக செயலை செய்தவன் யார்? என கோபத்தில் வினவினார். அப்போது அங்கு வந்த செருத்துணையார் நடந்ததை விளக்கினார். இதைக்கேட்ட கழற்சிங்கர், அடியார் கொடுத்த தண்டனை சரிதான். மூக்கை அரிந்ததற்கு பதிலாய், அப்பூவை எடுத்த அவளது கையை அரிந்திருக்க வேண்டும் என அடியாரை கடிந்து கொண்டு, தன் உடைவாளை உருவி அரசியின் சிவந்த கையை வெட்டினார். தன் ஒரே பட்டத்துஅரசியை வெட்டிய கழற்சிங்கரின் பெருஞ்செயல் கண்டு, சுற்றத்தோர் பெருங்குரல் எழுப்பினர் அச்சத்ததில் சுற்றுபுரமே அதிர்ந்தது. இச்செயலை கண்டு வானவர், தேவர் முதலியோர் பெருங்குரலெழுப்பி, ஆரவாரம் செய்தனர், பூமழை பொழிந்தனர்.
யாவரும் செய்ய இயலா அரிய திருத்தொண்டுபுரிந்து, நீண்ட காலமாய் அரசாண்டு இறைவன் திருவடிபேற்றினை அடைந்தார்.

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கழற்சிங்கநாயனார்
#ஐம்பத்துஒன்றாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog