தினம் ஒரு அடியார்-59
கோச்செங்கட்சோழ நாயனார்:
புறாவின் உயிரைக்காக்க வேண்டி தூலாத்தட்டில் தன் சதையை அரிந்து அளித்தவர் சிபிச்சக்கரவர்த்தி, சிபியின் கதை பௌத்த ஜாதகக் கதைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பினது. அத்தகைய உரிமையான உருத்தான சோழ மரபில் தோன்றியவர் கோச்செங்கட்சோழன்!
இவரது பூசைநாள் : மாசி சதயம்
கோச்செங்கன் காலம்:
இவர் சங்ககால சோழர்களில் காலத்தால் பிந்தியவராய் கருதப்படுகிறார். புறநானூற்று பாடல் ஒன்றும், பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது எனும் நாற்பது பாக்களும் இம்மன்னனை குறித்து வரும் தொன்மையான பாடல்களாகும். இவை இரண்டிலும் நிறைய முரண்கள் உள்ளது. புறநானூற்று 74 ஆம் செய்யுள் அடிக்குறிப்பு, கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்" என்று குறிக்கப்பெற்றுள்ளது. களவழி நாற்பது 4-5 நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது!சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். திருமங்கையாழ்வார், சம்பந்தர் செங்கனானின் பலபோர்களை சிறப்பித்து கூறுகின்றனர். ஆனால் இவற்றினைபற்றி சங்ககால புலவர்கள் எதுவும் பாடவில்லை. இதிலிருந்து சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் கோச்செங்கனான் என்று துணியப் போதுமானதாகும். மேலும் செங்கனான் சங்ககாலத்தில் 70 மாடக்கோவில்களை கட்டினான் என்றால் சைவமதம் மிகவும் மகோன்னதமாய் இருந்திருக்கும்! ஆனால் இதனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மேலும் இவனது பெற்றோராக சுபதேவன் -கலாவதி என பெரியபுராணம் கூறுகிறது! இப்பெயர்கள் வடமொழிப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் இப்பெயர்களை நாம் எங்கும் காணவே இயலாது. எனவே சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையது.
சோழநாட்டினை வளம்கொழிக்கச் செய்யும் பொன்னிநதி பாயும் வெள்ளைநாவல் மரத்தின் கீழ் ஓர் சிவசொரூபமான லிங்கம் இருந்தது. இதனை வெள்ளைநிறம் பொருந்திய யானை ஒன்று பூவும் நீரும் கொண்டு அர்ச்சித்து வந்தது. இவ்வாறான செயலால் அத்தலத்திற்கு "திருவானைக்கா" எனும் பெயர் வழங்கலாயிற்று. அந்நிலையில் ஈசனின் மேனி வெயிலில் படாவண்ணம் சிலந்தி ஒன்று தன்இழைகளால் மேற்கூரையொன்றை அமைத்து வந்தது.
இது அடாதசெயல் என கருதிய யானை அக்கூட்டினை கலைத்தது. சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடர்ந்தது.தினந்தோறும் இந்நிகழ்வு தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. கடிவேகம் தாங்காது தும்பிக்கையை வேகமாய் தரையில் அடித்தது. நிலைகுலைந்த யானை இறக்க, உள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது. இருவரின் பக்தியை மெச்சிய ஈசன் யானையை கணத்தில் ஒருவனாகவும், சிலந்தியை சுபதேவன்-கமலவதிக்கு மகனாய் படைத்தார். கோச்செங்கனான் பிறக்கும் தருவாயில் கிரகபலன்களை ஆராய்ந்த சோதிடர்கள் கமலவதியிடம் சென்று ஒருநாழிகை கழித்து குழந்தை பிறந்தாள் இக்குழந்தை உலகை ஆள்வான் எனகூற, அம்மாதரசி தன்காலில் கயிற்றைக்கட்டி தலைகீழாய் தொங்கி, சோதிடர் கூறிய நாழிகை கழிந்ததும், குழந்தையை ஈன்று இறவாப்புகழையடைந்தார். செங்கனான் பருவம் வந்ததும் அரசனாய் முடி சூட்டிக் கொண்டார், சிவபெருமானின் மேல் பேரன்பு கொண்டு திருப்பணியில் ஈடுபட்டார். சிவன் கோவில் மட்டுமின்றி வைணவக்கோவில்களையும் கட்டி சமயப்பொறையுடன் திகழ்ந்தார்.
திருவானைக்கா பதியில் தான் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்ததை ஈசன் அருளால் உணர்ந்த செங்கனான். நாவல் மரத்தின்கீழே அமர்ந்த ஈசனை அவ்வாறே இருக்கச்செய்து அழகிய கோவிலொன்றை எழுப்பினான்.
[ஆனைக் காவிற் றாமுன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்]
இக்கோவில் 1600 ஆண்டுகள் கடந்தாலும் இறைவர் இன்றும் அவ்வாறே மரத்தின் கீழே உள்ளது சிறப்பானது. அது மட்டுமின்றி சோழநாட்டில் அழகு நிறைந்த மாடக்கோவில்கள் பல தோற்றுவித்தார்.
அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்கனான் என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர் கின்றன.
கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை புராணம் தவிர்த்து ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். காவிரிக்கரை நெடுக இவன் சிவ-வைணவ ஆலயங்களை மாடக்கோவில்களாய் எழுப்பியதன் காரணம், ஆன்மிக நோக்கு மட்டுமல்ல. காவிரியில் வெள்ளம் வந்து அடிக்கடி சோழநாட்டு மக்கள் இன்னலுற்றனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். மக்களும் பலியாக நேரும். அதுபோல் கோவிலும் வெள்ளத்தில் அழிந்துபோய்விடும். அக்காலத்தில் கோவில்கள் செங்களாலும், மரத்தாலுமே கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உண்டு, இதனாலேயே இச்சோழ மாமன்னன் தான் எழுப்பிய ஆலயங்களை அழியாவண்ணம் தளம் உயர்த்தி மாடக்கோயில்களாக அமைத்துள்ளான். மேலும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகைகள் பலவற்றை இவன் கட்டி கொடுத்துள்ளான்.
சிவபெருமானின் திருத்தொண்டு பலஆற்றிய செம்பியர்கோனான கோச்செங்க நாயனார், பூவுலகை ஆண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து அதன்பின் தில்லை கூத்தனின் திருவடிநிழலை அடைந்தான்.
"தென்னவனாய் உலகாண்ட செங்கனார்க்கு அடியேன்"
சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்
#தினம்ஒருஅடியார்
#கோச்செங்கட்சோழநாயனார்
#ஐம்பத்துஒன்பதாம்நாள்
No comments:
Post a Comment