Saturday, 30 May 2020

இசைஞானி அம்மையார்

தினம் ஒரு அடியார்-62

இசைஞானி அம்மையார் புராணம் :

சோழவளநாட்டின் திருவாருர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் கமலாபுரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் ஆதிசைவர் மரபில் பிறந்து சடைய நாயனாரை மணந்தார். 
இவரது பூசைநாள் : சித்திரை-சித்திரை

[ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் 
 அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்  
 இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் 
 மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்]

முடிவில்லாத பெருமைமிக்க சடையனாரை மணந்து, எவ்வகையானும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை சினந்து அழித்த சிவபெருமான் ஆட்கொண்டருளிய நம்பியாரூரன் எனும் சுந்தரரை பெற்றெடுத்த சிறப்பினையுடையவர் இசைஞானியர் ஆவார். இதனாலேயே இவர் அடியாராய் வைத்து போற்றக்கூடிய நிலையில் சேக்கிழார் போற்றுகிறார்.

"இசைஞானி காதலன் திருநாவலூர்கோன் அன்னவனாம் 
ஆரூரன் அடிமை கேட்டுவப்பார் ஆரூரில் அம்மானுக்கன்பராவரே"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம்: Shiva
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#அறுபத்துஇரண்டாம்நாள்
#இசைஞானிஅம்மையார்நாயனார்


Friday, 29 May 2020

சடைய நாயனார்

தினம் ஒரு அடியார்-61

சடைய நாயனார்:

இவ்வுலகில் நிறைய ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.எல்லாமே இறைவனைப் பற்றித்தான் பேசுகின்றன. 

 தாதமார்க்கம்(தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் என்பன சிவபிரானை அடையும் நன்மார்க்கங்கள்
ஆகும். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம்  என்ற
பெயராலும்     வழங்கப்     பெறுதல் உண்டு. 
இம்மார்க்கங்களில் சகமார்க்கத்தினை சுந்தர் பெருமானார் பின்பற்றினார். இந்நெறி யோகமார்க்கம் எனவும் கூறப்பெறும்.யோகம் என்பதற்குப் பொருள் ஒன்றுதல் என்பதாகும்.
அதாவது உயிரானது இறைவனோடு ஒன்றியிருப்பதே யோகநிலை. 
இறைவனோடு ஒன்றிவிடுகின்ற காரணத்தால் இறைவனுக்குத்
தோழமையாகின்ற அருள் கிடைக்கின்றது. எனவேதான்
இந்நெறி தோழமை நெறி எனப்படுகிறது. இந்நெறியை "உயிராவணம்"
என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலும், "தேடுவேன்
தேடுவேன்"என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடலும் குறிப்பிடுகின்றன.

இத்தகைய சிறப்புமிக்க சகமார்த்தை கடைபிடித்து ஒழுகிய பார்புகழும் சுந்தரமூர்த்தி நாயனாரை நமக்கு அளித்தவர் சடையநாயனார் ஆவார்.
இவரது பூசைநாள்: மார்கழி திருவாதிரை
இவர் ஆதிசைவகுலத்தில் தோன்றியவராவார்.

[தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர்
 கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் 
 எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் 
 நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ]

தம்முடைய தலைவராகிய சிவபெருமானையே தமக்கு தோழராய் கொண்டருளி பின் அவரையே தம் பரவையாரிடத்தூ தூதாக செல்லும்படி ஏவல் கொண்டருளியவரும், சேரமான் பெருமாளின் உற்ற நண்பருமாகிய நம்பியாரூரரை உலக உயிர்கள் உய்யும்பொருட்டு அளித்ததால் சடையரை நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் நிலையை அடைந்தார்.


"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்"  

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சடையநாயனார்
#அறுபத்துஒன்றாம்நாள்

Thursday, 28 May 2020

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

தினம் ஒரு அடியார்-60

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். 
இவரது பூசைநாள்: வைகாசி மூலம்

பாணர் மரபு:
சங்க இலக்கியங்கள் பலவகையான பாணர் சமுதாயங்களை காட்டுகின்றன. சங்ககாலத்தில் நாடோடிப்பாடகர்களாகவும், பல்வேறு கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்.
பாணர்கள் ஊர்ஊராய் சென்று பாடிப் பிழைப்பவர்கள் என்பதனை பொருநராற்றுப்படை நேரடியாகவே சுட்டுகிறது. சங்கநூல்களில் ஆற்றுப்படை நூல்களே அலைகுடி(நாடோடி)கள் மற்றும் நிலைகுடிகளைப்பற்றி விரிவாய் கூறுகிறது! வையாற்றின் நீர்த்துறைகள் தோறும் பாணர் அமர இருக்கைகள் இருந்துள்ளது! இதனை பரிபாடலும், மதுரைக்காஞ்சியும் கூறுகிறது! இக்குழுவினர் சேர, சோழ, பாண்டியரை விட குறுநிலமரபான வேளிர்களையும் நிலக்கிழார்களையுமே நாடி வாழ்ந்துள்ளனர். தங்கள் பயணங்களில் கானகர், குறவர், கொடிச்சியர், எயினர் போன்றவர்களிடம் உண்டு, உறவாடி வாழ்ந்துள்ளனர். இன்றைய நாடோடிக் குழுக்கள் போல் தம் பணியை சுருக்காமல் வேளாண்மை, தூதுசெல்லுதல், நெசவு போன்ற பல பணிகளை செய்துள்ளனர். இவர்களின் வாய்மொழியினாலேயே பல எளிய கதாநாயகர்களின் மக்களிடையே பரவின. இன்றும் தென்தமிழகத்தில் அழகர் மாட்டுக்காரர்கள் வள்ளி, தெய்வானை கதைகளையும், வடதமிழகத்தில் தேசிங்குராஜன் கதை, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறுதெய்வங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் கூத்துக்கலைஞர்களே அன்றைய பாணர்கள்.

திருஎருக்கத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்ந்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபெருமானின் பெருமைகளை தன் யாழின் இசையால் பரப்பினார், வளம்மிக்க சோழநாடு எங்கும் சென்று அனைத்து கோவில்களிலும் தம் யாழிசையால் ஈசனின் பெருமைகளை பாடினார். திருநீலகண்டரின் இசையால் மனம் பறிகொடுத்த மதுரையம்பதி இறைவன் சொக்கன் தம் பக்தர் கனவுகளில் தோன்றி திருநீலகண்டரை அழைத்துவருமாறு பணிக்க அவரும் தன் மனைவி மதங்கசூளாமணியாருடன் மதுரை வந்து
இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினில் குளிர்ச்சியினால் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும், எனவே பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.அதன்பின் தேவர்கள் போற்றும்படி பல சிவத்தலங்களை அடைந்து தியாகராஜப் பெருமானை தரிசிக்க எண்ணி ஆரூர் வந்தடைந்தார்.

மெய்மறந்து சிவனின் புகழை தம் யாழின் இசையால் பாடினார்.பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, மூடியிருந்த  வடதிசையில் வேறொரு வாயிலை உண்டுபண்ணினார். பாணர் அவ்வழியே புகுந்து வணங்கினார்.
மூலஸ்தானமாகிய கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து அதன்பின் திருவாரூரை விட்டு நீங்கி பலதிகளை சென்று வணங்கினார்.
அதன்பின் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தரை வணங்க விரும்பி சீகாழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் வீற்றிருக்கும் பல திருத்தலங்களை அடைந்து வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூடிய  அடியார் திருக்கூட்டத்துடன்  பெருஞ்சோதியினுள் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்று,
இறைவன் திருவடிநிழலை அடைந்தார்.

"திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#திருநீலகண்டயாழ்ப்பாணர்
#அறுபதாம்நாள்

Wednesday, 27 May 2020

கோச்செங்கட்சோழ நாயனார்

தினம் ஒரு அடியார்-59

கோச்செங்கட்சோழ நாயனார்:

புறாவின் உயிரைக்காக்க வேண்டி தூலாத்தட்டில் தன் சதையை அரிந்து அளித்தவர்  சிபிச்சக்கரவர்த்தி, சிபியின் கதை பௌத்த ஜாதகக் கதைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பினது. அத்தகைய உரிமையான உருத்தான சோழ மரபில் தோன்றியவர் கோச்செங்கட்சோழன்! 
இவரது பூசைநாள் : மாசி சதயம்

கோச்செங்கன் காலம்:
இவர் சங்ககால சோழர்களில் காலத்தால் பிந்தியவராய் கருதப்படுகிறார். புறநானூற்று பாடல் ஒன்றும், பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது எனும் நாற்பது பாக்களும் இம்மன்னனை குறித்து வரும் தொன்மையான பாடல்களாகும். இவை இரண்டிலும் நிறைய முரண்கள் உள்ளது.  புறநானூற்று 74 ஆம் செய்யுள் அடிக்குறிப்பு, கணைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுளின் அடியில், "இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டரசளித்தான்" என்று குறிக்கப்பெற்றுள்ளது. களவழி நாற்பது 4-5 நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது!சோழன் கோச்செங்கணானின் காலத்தை நிறுவுவதில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும், திருமுறைகளும் பெரிதும் உதவுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மூன்றாம் திருநறையூர்ப் பதிகத்தில் பத்துப்பதிகப் பாடல்களிலும் கோச்செங்கணானைப் பாடிப் பரவியுள்ளார். திருமங்கையாழ்வார், சம்பந்தர் செங்கனானின் பலபோர்களை சிறப்பித்து கூறுகின்றனர். ஆனால் இவற்றினைபற்றி சங்ககால புலவர்கள்  எதுவும் பாடவில்லை. இதிலிருந்து சங்க காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்தவன் கோச்செங்கனான் என்று துணியப் போதுமானதாகும். மேலும் செங்கனான்  சங்ககாலத்தில் 70 மாடக்கோவில்களை கட்டினான் என்றால்  சைவமதம் மிகவும் மகோன்னதமாய் இருந்திருக்கும்! ஆனால் இதனைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மேலும் இவனது பெற்றோராக சுபதேவன் -கலாவதி என பெரியபுராணம் கூறுகிறது!  இப்பெயர்கள் வடமொழிப்பெயர்கள் சங்க இலக்கியத்தில் இப்பெயர்களை நாம் எங்கும் காணவே இயலாது. எனவே சங்க காலத்திற்குப் பிற்பட்டும், சிம்ம விஷ்ணுவின் பல்லவப் பேரரசு அமைவதற்கு முற்பட்டும் அமைந்த ஒரு காலகட்டத்தில் (கி.பி. 300 - கி.பி. 600) இம்மன்னன் வாழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தமுடையது. 

சோழநாட்டினை வளம்கொழிக்கச் செய்யும் பொன்னிநதி பாயும் வெள்ளைநாவல் மரத்தின் கீழ் ஓர் சிவசொரூபமான லிங்கம் இருந்தது.  இதனை வெள்ளைநிறம் பொருந்திய யானை ஒன்று பூவும் நீரும் கொண்டு அர்ச்சித்து வந்தது. இவ்வாறான செயலால் அத்தலத்திற்கு "திருவானைக்கா" எனும் பெயர் வழங்கலாயிற்று. அந்நிலையில் ஈசனின் மேனி வெயிலில் படாவண்ணம் சிலந்தி ஒன்று தன்இழைகளால் மேற்கூரையொன்றை அமைத்து வந்தது.
இது அடாதசெயல் என கருதிய யானை அக்கூட்டினை கலைத்தது.  சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடர்ந்தது.தினந்தோறும் இந்நிகழ்வு தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. கடிவேகம் தாங்காது தும்பிக்கையை வேகமாய் தரையில் அடித்தது. நிலைகுலைந்த யானை இறக்க, உள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது. இருவரின் பக்தியை மெச்சிய ஈசன் யானையை கணத்தில் ஒருவனாகவும், சிலந்தியை சுபதேவன்-கமலவதிக்கு மகனாய் படைத்தார். கோச்செங்கனான் பிறக்கும் தருவாயில் கிரகபலன்களை ஆராய்ந்த சோதிடர்கள் கமலவதியிடம் சென்று ஒருநாழிகை கழித்து குழந்தை பிறந்தாள் இக்குழந்தை உலகை ஆள்வான்  எனகூற, அம்மாதரசி தன்காலில் கயிற்றைக்கட்டி தலைகீழாய் தொங்கி, சோதிடர் கூறிய நாழிகை கழிந்ததும், குழந்தையை ஈன்று இறவாப்புகழையடைந்தார். செங்கனான் பருவம் வந்ததும் அரசனாய் முடி சூட்டிக் கொண்டார், சிவபெருமானின் மேல் பேரன்பு கொண்டு திருப்பணியில் ஈடுபட்டார். சிவன் கோவில் மட்டுமின்றி வைணவக்கோவில்களையும் கட்டி சமயப்பொறையுடன் திகழ்ந்தார்.
திருவானைக்கா பதியில் தான் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்ததை ஈசன் அருளால் உணர்ந்த செங்கனான். நாவல் மரத்தின்கீழே அமர்ந்த ஈசனை அவ்வாறே இருக்கச்செய்து அழகிய கோவிலொன்றை எழுப்பினான்.

[ஆனைக் காவிற் றாமுன்னம் அருள்பெற் றதனை யறிந்தங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்]

 இக்கோவில் 1600 ஆண்டுகள் கடந்தாலும் இறைவர் இன்றும் அவ்வாறே மரத்தின் கீழே உள்ளது சிறப்பானது. அது மட்டுமின்றி சோழநாட்டில் அழகு நிறைந்த மாடக்கோவில்கள் பல தோற்றுவித்தார்.
அம்பர், வைகல், நன்னிலம் முதலான இடங்களில் கோயில் எடுத்தவன் கோச்செங்கனான் என்று, சுந்தரரும், சம்பந்தரும் பாடிய தேவாரப் பாடல்களும் சான்று பகர் கின்றன.

கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.  இவற்றை புராணம் தவிர்த்து ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். காவிரிக்கரை நெடுக இவன் சிவ-வைணவ ஆலயங்களை மாடக்கோவில்களாய் எழுப்பியதன் காரணம், ஆன்மிக நோக்கு மட்டுமல்ல. காவிரியில் வெள்ளம் வந்து அடிக்கடி சோழநாட்டு மக்கள் இன்னலுற்றனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். மக்களும் பலியாக நேரும்.  அதுபோல் கோவிலும் வெள்ளத்தில் அழிந்துபோய்விடும். அக்காலத்தில் கோவில்கள் செங்களாலும், மரத்தாலுமே கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்று உண்டு, இதனாலேயே இச்சோழ மாமன்னன் தான் எழுப்பிய ஆலயங்களை அழியாவண்ணம் தளம் உயர்த்தி மாடக்கோயில்களாக அமைத்துள்ளான். மேலும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு திருமாளிகைகள் பலவற்றை இவன் கட்டி கொடுத்துள்ளான்.

சிவபெருமானின் திருத்தொண்டு பலஆற்றிய செம்பியர்கோனான கோச்செங்க நாயனார், பூவுலகை ஆண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து அதன்பின் தில்லை கூத்தனின் திருவடிநிழலை அடைந்தான்.

"தென்னவனாய் உலகாண்ட செங்கனார்க்கு அடியேன்"

சிற்பம் : தாராசுரம்
புகைப்படம் : Shiva
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கோச்செங்கட்சோழநாயனார்
#ஐம்பத்துஒன்பதாம்நாள்

Popular Posts In This Blog