Tuesday, 5 May 2020

சிறுத்தொண்டர்

தினம் ஒரு அடியார்-25

சிறுத்தொண்டர்:

சோழவளநாட்டின் நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் பிறந்தவர். இயற்பெயர் பரஞ்சோதியார்,
 இவரது பூசைநாள்: சித்திரை பரணி (இன்றுதான் இவரது பூசைநாள்) அன்று மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி சேவைபுரிந்து வந்தனர். சிவனடியார்களுக்கு உணவளிக்கும் தொண்டினை அவர் சிறுதொண்டாக கருதி சேவைபுரிந்தமையால், சிறுதொண்டர் எனப்பட்டார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். சிவபெருமானின் திருவடியே கதி என வாழ்ந்து வருபவர்.

பல்லவ நாட்டில் கிபி 630 வாக்கில் நரசிம்மவர்மர் ஆட்சிக்கு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியர் புலிகேசி படை எடுக்கிறார்.  பல்லவர்கள் மணிமங்கலத்தில் நடந்த போரில் வெற்றி பெறுகிறார்கள். சாளுக்கியர் படை தோற்று ஓடவும், விடாத நரசிம்மவர்மர் அவர்களை வாதாபி வரை துரத்திச்செல்கிறார். கிபி 642 வாக்கில் நடந்த கோர யுத்தத்தில் வாதாபி வீழ்கிறது. புலிகேசி மன்னர் போரில் இறக்கிறார். பல்லவர்கள் வாதாபியில் நிகழ்த்திய அழிவால் அந்த நகர் அதன்பின் சாளுக்கியர் தலைநகர் ஆகவே இல்லை.பரஞ்சோதியார்தான் இப்போரை தலைமையேற்றுசென்று வாதாபியை சூரையாடியவர். வாதாபி வெற்றியின் நினைவாய் அங்கு ஓர் கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை தன் சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் வந்து பிரதிஷ்டை செய்தார்.

[மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
 தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப் 
 பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
 இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்]

வெற்றிக்கனியை பரிசாய் கொண்டுவந்த பரஞ்சோதியை வெகுவாறு புகழ்ந்தார் நரசிம்மர். பொன்னும், மணியையும் பரிசாய் வாரி இழைத்தார். அமைச்சர்கள் பரஞ்சோதியின் வெற்றிக்கு அவரது வீரம் மட்டுமல்ல, சிறந்த சிவபக்தரும், அடியாருக்கு தொண்டாற்றுவதில் இவருக்கு நிகரில்லை எனவும் மன்னருக்கு எடுத்துக்கூறினர். இதுவரை அவரின் பெருமையை உணரா பல்லவன், மனம் வருந்தினான். ஈசனின் அடியார் ஒருவரையா போருக்கு அனுப்பினேன்? இந்தபுனித கையால் எத்துணை எதிரிகளை கருவறுத்திருப்பார்!!  என்னால் எவ்வளவு தீங்கு அவருக்குநேர்ந்தது? என மனம்வருந்தி அவரை உடனே பணியிலிருந்து விடுவித்தான். பொற்குவியல், இறையிலி மானியங்களை அழித்து, மனமுருக விடைதந்து அனுப்பினான்.

தன்மனைவி திருவெண்காட்டுநங்கை, ஒரே புதல்வன் சீராளனுடன் மகிழ்வுற வாழ்ந்து ஈசனடியார்களுக்கு தினமும் உணவளித்து தொண்டாற்றிவந்தார். அந்நாளில் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டுக்குடிக்கு எழுந்தருளினார். சிறுதொண்டரும் எதிர்சேவைபுரிந்து இல்லம் அழைத்து வந்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க சம்பந்தரும் சிலகாலம் அவருடன் தங்கியிருந்தார். தம் பதிகத்தில் சிறுதொண்டரின் தொண்டினையும் பாடி,நட்பாகவும் ஆயினார்.இவரது பக்தியை உலகறிய செய்ய ஈசன் எண்ணினார்.

பக்திஇலக்கியங்கள் தோன்றிய திருமூலர் காலத்தில் சைவம் ஒற்றை மதமாக இல்லை. வாமம், வயிரவம், பாசுபதம், மாவிரதம் என்ற காபாலிகம், காளாமுகம், ஐக்கியவாத சைவம் என்று ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தது.ஈசன் ஒருவரே அவரை வழிபடும் முறைகள்தான் பல.வடக்கே இருக்கும் பைராகிகள் (அகோரிகள்) என்று சொல்லக்கூடிய உத்திராபதி என்னும் வேடம் தாங்கி
சடைபாரம் தாழ
சூலாயுதம் உயர
நீறுபூசி
கருஞ்சந்தனம் வைத்து, கடும்பசியில் இருப்பதுபோன்று வருவோர், போவோரிடம் சிறுதொண்டர் இல்லம் எங்கே? என கேட்டுக்கொண்டே அலைந்தார். ஒருவழியாய் அடையாளம் கேட்டு வீடுவந்தடைந்தார். ஆனால் அங்கு திருவெண்கிட்டம்மை மட்டுமே இருந்தார்.  பெண்கள் தனித்திருக்கும் வீட்டில் நாம் புகமாட்டோம் என்றார். எங்கே உணவருந்தாமல் சென்றுவிடுவாரோ? என்று நங்கைக்கு வருத்தம் மேலிட்டது. மீண்டும் மீண்டும் அவர் அழைக்க, அவரோ, 'யாம் வடநாட்டை சேர்ந்தெவர் சொல்லற்கரிய சிறுத்தொண்டரின் சிறப்பை நேரில் காணவே வந்தோம்', என பதிலுறைத்து அருகேயுள்ள கணபதேச்சரத்து திருவாத்தி மரநிழலில் இருப்பதாய் கூறிவிட்டு சென்றார்.

வெளியே சென்றுவந்த சிறுதொண்டர் இதனை கேள்வியுற்று, பதறிபோய் விரைவாய் அம்மர.திற்கு ஓடினார். தம் இல்லத்தில் உணவருந்திச்செல்ல வேண்டினார். அதற்கு,மூன்று இருபதுநாள் கழித்து ஒருமுறை மட்டுமே யாம் உண்போம். அதுவும் பசுவினை மட்டுமே உண்ணுவோம். உம்மால் அதுதர இயலுமோ?என்றார்.(மது, மாமிசம் முதலான விலக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு தாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடுவோராகவும, அவர்கள் அத்துவைதிகளாகத் திகழ்ந்ததாகவும், வேற்று நூல்களின் குறிப்புகள் சொல்கின்றன)
இன்று அந்த நாள் அது உம்மால் முடியுமா??! என்று கேட்டார் பைராகியாக வந்த சிவம்.என்னிடம் மூவகை பசுக்களும் உண்டு தேவரீர் உள்ளப்படி செய்வோம் இல்லத்திற்கு வரவேண்டும் என்ற சிறு தொண்டரிடம்
பெருஞ்சிரிப்பு சிரித்துவிட்டு,
    "​நாம் உண்பது நரப்பசு​"

அதிலும் ஐந்து வயதுடைய பாலகனை,உறுப்புகளில் குறைவில்லாத பாலகனை, தாய் மனமுவந்து பிடிக்க தந்தை அறிந்து கறி சமைத்து செய்த உணவையே ஏற்போம் அது உம்மால் முடியுமா?? என்று கேட்டார் இறைவர். அதைக்கேட்டு ஒருகனம் கூட சிந்திக்காது சரி என்றார், சிறுதொண்டர்.
 மனைவியிடம் இதனை சொல்ல இந்த செயலை செய்ய யாவரும் துணியார். நம் பிள்ளைதானே தகுந்த கறி என்று அவ்வம்மை கூறவே
பாடசாலைக்கு சென்ற சீராளன் அழைத்து வரப்பட்டான். மகிழ்ச்சியோடு ஓடிவந்தது பிள்ளை, பிள்ளையை தழுவினால் தாய். வாங்கியதும் தலைமயிரை ஒன்று சேர்த்து கட்டினார். முகத்தினை துடைத்து தூசியை நீக்கினார். பஞ்சினும் மென்மையான கைகால்களை சுத்தப்படுத்தி கணவனிடம் கொடுத்தாள். பைரவ அடியாருக்கு தரும் உணவு ஆதலால், பிள்ளையை உச்சிமோர்க்காது, அடுக்களை செல்லாமல் தனிஇடம்கொண்டு சென்றனர். சிறுதொண்டர் பிள்ளைக்கு விளையாட்டு காட்டிகொண்டே தலையை பிடிக்க, நங்கையோ தன் கால் இடுக்கில் தன்பிள்ளையின் காலினை ஒருசேர இறுக்கிபிடித்தாள். குழந்தையோ தாயார் விளையாட்டு காட்டுகின்றனர் என நினைத்து சிரித்தது. தாமதிக்காமல் உடனே தலையை அரிந்தாள். பின் துண்டுதுண்டாய் சதையை அறிந்து காயங்கள்(மசாலா) தடவி ருசிகூட்டி சமைத்தனர். விதவிதமான வெஞ்சமனம்செய்து, ஆத்தியின் கீழமர்ந்த அடியவரை கூப்பிட்டு வந்து, தலைக்கறியை முதலில் விருந்து வைத்தனர். சிறுதொண்டரையும் சாப்பிட வற்புறுத்துகிறது இறை

எங்காவது கலங்குவார்!! எதிலாவது முனகுவார்!! என்பது இறைவன் எண்ணம் ஆனால் சிறுதொண்டரிடம் இறைவன் ஏமாந்தததே திண்ணம்

இறைவன் உங்கள் பிள்ளையை கூப்பிடுங்கள் சாப்பிட என்கிறார்

அவன் இனி உதவமாட்டான், தேவரீர் உணவருந்த இது ஒரு தடையா?? என்று முதன்முறையாக கலங்குகிறார்கள் அவர்கள்.

பைராகி சொல்லுகிறார்
உங்கள் பிள்ளை வருவான் வாசலில் போய் கூப்பிடுங்கள் என்று.

பரஞ்சோதியும் மனைவியும்
கண்ணே!! மணியே!! சீராளா!! வாராய்!! என்று ஓலமிட்டு அழுகிறார்கள் சீராளன் பேரழகுடன் ஓடி வருகிறான்.
பேரானந்த்துடன் ஆரத்தழுவி உள்ளே சென்றால், அங்கே உணவும் இல்லை, வைராகியும் இல்லை. மனம்பதறி மீண்டும் வெளியே வந்தார்.

சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், ஒருசேர வானில் தோன்றினர்.அதனை கண்டு பரவசத்தில் திகைத்தனர் சிறுதொண்டரும், நங்கையும், சீராளனும் பின் மூவரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்.தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு,  திருக்கயிலையை அடைந்தருளினார்.

“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்”

சுமார் 1350 வருடம் முன் போர்வீரனாய் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு பெரும்வெற்றியை தேடிதந்து, அதன்பின் சிவபக்தியால் அழியா பெரும்புகழைப்பெற்ற  இந்நிகழ்வை மக்கள் இன்றும் மறவாது போற்றிவருகின்றனர். நாட்டார் வழக்காறு, கூத்து, நாடகம் என சிறுத்தொண்டரின் சிறப்பு இன்றுவரை, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.  தாராசுரம் கட்டிய இரண்டாம்ராஜராஜன் சிறுதொண்டரின் தீவிர பக்தன் அவரது வரலாற்றினை தாராசுரம் பிரகார மண்டபத்தில் சிற்பமாய் வடித்துள்ளார்.

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan Gandhi Balasubramanian
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#இருபத்தைந்தாம்நாள்
#சிறுத்தொண்டர்










No comments:

Post a Comment

Popular Posts In This Blog