Tuesday, 5 May 2020

அப்பூதியடிகணாயனார்

தினம் ஒரு அடியார்-24

அப்பூதியடிகணாயனார் :

சோழவளநாட்டின் திங்களூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் இவர்.
இவரது பூசைநாள்: தை சதயம்
நவகிரககோவில்களில் சந்திரனுக்குரிய கோவில் அமைந்துள்ளது இவ்வூரில். திருநாவுக்கரசரை நேரில் காணாவிடினும்,அவரின் மேல் மிகுந்த அன்புகொண்டு, தம் வீட்டிலுள்ள எல்லாபொருட்களுக்கும் அவரின் திருநாமத்தை சூட்டி மகிழ்பவர். அவரின் பெயராலே திருமடங்கள், தண்ணீர் பந்தர் அமைத்து முறையாய் பல அறங்கள் பேணி வந்தார். ஒருமுறை நாவுக்கரசர் திருப்பழனம் சென்று ஈசரை வணங்க எண்ணினார். மேலும் பல தலங்களை காணும்பொருட்டு திங்களூர் வழியே வலம் வந்தார். அவ்வழியே வருகையில் தாகம் எடுக்க, நீர்பந்தரை வந்தடைந்தார். அங்கு எல்லா இடங்களிலும் தன்பெயர் எழுதியிருப்பதையெண்ணி வியந்தார். இப்பந்தலை அமைத்தவர் எவர் என வினவி, விசாரித்து ஆவல்மிகுதியில் அப்பூதியை காண அவர் இல்லம் விரைந்தார்.தன் வீட்டில் அடியார் ஒருவரைகண்ட அப்பூதி உடனே அப்பர் பாதம் பணிந்தார். தங்கள் நீர்பந்தரை கண்டேன், இவ்வறச்செயலை செய்த மாமணியை காண ஆர்வமிகுதியால் தங்கள் இல்லம் வந்தேன் என உறைத்தார் நாவுக்கரசர். இவ்வளவு அறமாற்றும் நீவிர் ஏன், தங்கள் பெயரை நீர்பந்தருக்கு சூட்டாமல் நாவுக்கரசர் பெயரை வைத்தீர் என வினவினார்? வந்தது தான் உயிராய் நினைக்கும் நாவுக்கரசர் பெருமான், தன்னிடம் கேள்வி கேட்பதும் அவர்தான் என அறியாது சினத்துடன் மறுமொழி உரைத்தார் அப்பூதி, "ஈசனுடைய திருவடிக்கு செய்யும் தொண்டினாலே இம்மையிலேயே மறுமையை அடையலாம் என வாழ்ந்து வருபவரும், சமணரால் கல்லால் கட்டி வீசப்பட்டபோதும் அந்த கல்லையே தெப்பமாய் கொண்டு கரையையடைந்த நாவுக்கரசரின் பெயரை வைப்பதில் என்ன தவறு? ", "இப்படி அமங்கலமாய் பேசும் நீவிர் யார்? எவ்வூர்? " என வினவினார்.

[திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்
 பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற 
 அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
 தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார்]

குமின்சிரிகுமின்சிரிப்போடு அப்பூதியை நோக்கி, சூலைநோய்க்கு ஆட்கொள்ளப்பட்டு சிறுமையை உடையவன் அடியேன்தான்" என கூற மறுகனம் அப்பூதியின் கண்கள் ஆனந்தப்பெருக்கில் அருவியென சுரந்தது. சொல்தடுமாற, மயிர்பப்புளகம் எய்தி, நிலத்தில் விழுந்து திருவடிகளை சரணமாய் பணிந்தார்.மன்னிப்பு பலமுறை கோரினார். அத்துடன் தன் இல்லத்திற்கு உணவு உண்ணவரவேண்டி கோரிக்கை வைத்தார், அதனையேற்றார் அப்பரும்.அப்பூதி அடிகளாரின் மனைவியார் அறுசுவையுடன் கூடிய நால்வகை உணவுகளை கவனமான முறையில் தயாரித்தார். தம்முடைய மூத்த குமாரனான மூத்ததிருநாவுக்கரசனை அழைத்து அப்பூதியார் உணவு உண்ண தோட்டத்து வாழை இலையைப் பறித்து வர பணித்தார். மூத்ததிருநாவுக்கரசு வாழை இலை பறித்துக் கொண்டிருக்கையில், அம்மரத்தைப் பற்றியிருந்த கொடிய விஷமுடையஓர் அரவம் அவனைத் தீண்டியது. பாம்புதீண்டிஇறக்கும் முன்னே இலையை கொடுத்தே தீருவது என விரைந்து வந்தான். பாம்புதீண்டிய செய்தியை கூறினால் நாவுக்கரசரின் விருந்து தடைபடும் என, சோர்வுற்ற உடலோடுநடந்து சென்றான். இலையை தாய் கையில் கொடுத்து நடந்தை கூறி உயிரை விட்டான் மூத்ததிருநாவுகரசன், நாவுக்கரசருக்கு இவ்விடயம் தெரியக்கூடாதென கருதி தாயும், தந்தையும் மகனின் உடலை பாயில் சுருட்டி வைத்தனர். அழக்கூட நேரமில்லை.போலி மகிழ்ச்சியினை உதட்டினில் வரவழைத்துக்கொண்டு நாவுக்கரசரை விருந்துண்ண அழைத்தனர்.
               
விருந்துண்ண அமர்ந்த திருநாவுக்கரசர் மூத்த மகன் மூத்ததிருநாவுக்கரசு அங்கு இல்லாததைக் கண்டார். மூத்த மகனையும் உணவு உண்ண அழைக்குமாறு அப்பூதி அடிகளிடம் கூறினார். அப்பூதி அடிகள் எவ்வளவு முயன்றும் அவரால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவரதுகண் காட்டி கொடுத்தது,  அழுதுகொண்டே நடந்தவற்றை விவரித்தார். இதைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் பெரும் வேதனை அடைந்தார். உடனே எழுந்து அப்பூதி அடிகளுடன் இறந்த சிறுவனின் உடலைக் காணச் சென்றார். நிலையறிந்து வருந்தினார் நாவுக்கரசர், சிறுவனது உடலுடன் திங்களூர் இறைவன் சன்னதிக்கு வருமாறு அப்பூதி அடிகளைப் பணித்தார். அப்பூதி அடிகள் தனது மகனின் உயிரற்ற உடலைச்சுமந்து செல்ல, ஊர் மக்கள் கூட்டமும் கூடியது. அனைவரும் சேர்ந்து கொண்டு கோயிலை அடைந்தனர். அப்பர் பெருமான் திங்களூர் பெருமானைப் பார்த்து

[ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே]

என்னும் பதிகத்தை மெய்யுருக பாடி சிறுவன் உயிர் பிழைக்க வேண்டினார். நாவுக்கரசர் பக்தியினாலே ஈசனின் திருவருள் பிறந்தது. சிறுவன் உறக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தான். நாவுக்கரசரின் மகிமையைக் கண்டு வியந்து அனைவரும் அவரை பலவாறு போற்றித் துதித்தனர்.

அப்பர்பெருமானின் திருவருளை ஊரார் அனைவரும் மெச்சினர். ஊரார் அனைவரும் காணாத பெருங்காட்சியை கண்டதால் மகிழ்ச்சியில் கூத்தாடினர். அப்பூதிகடிகளின் இல்லம் தடாபுடலானது பெரும் விருந்து அன்று நடந்தது. அனைவரும் அப்பருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் விருந்துண்டு பிளையை வாழ்த்தியும் அப்பரை வணங்கியும் சென்றனர். மகிழ்வுடன் விடைபெற்ற நாவுக்கரசர், மனமகிழ்வுடன் அருகேயுள்ள  திருப்பழனம் சென்று பலபதிகங்கள் பாடினார். திருப்பழனம் சென்ற அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் திருவடியே மெய்ப்பொருள் என வணங்கி அவர் அளித்த திருநீற்றை அணிந்து மகிழ்ந்தார்.
இவ்வுலகில் பல்லாண்டு திருத்தொண்டும், இறைத்தொண்டும், செய்து முடிவில் தில்லைக்கூத்தனின் திருவடி நிழலைச் சேர்ந்தார் அப்பூதியடிகளார்.

"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#இருபத்துநான்காம்நாள்
#அப்பூதியடிகள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog