Tuesday, 5 May 2020

காரைக்கால் அம்மையார்

தினம் ஒரு அடியார்-23

காரைக்கால் அம்மையார்:

இந்தியநாட்டின் ஆன்மீக வரலாற்றில் பக்தி இலக்கியத்திற்கு தனிஇடம் உண்டு. தமிழகத்தின் நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனை பதிகங்களால் பாடி இசை, தமிழ், சமயம் ஆகியவற்றை ஒருங்கே வளர்த்தனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மகளிர் மூவரே. அதில் இலக்கியநயம் வாய்ந்த பாடல்களை பாடியவர் காரைக்கால் அம்மையார் மட்டுமே! நாயன்மார்களில் காலத்தால் முந்தையவர் இவரே. கி.பி.2-4 என இவரது காலம் கணிக்கப்படுகிறது. இவரது வரலாறு தெலுங்கு, கன்னடத்திலும் உண்டு. கன்னடத்தில் நாயன்மார்களை "திரிசஷ்டி புராதனர்" என வழங்கினர்.  பசவண்ணர் பிறக்கும்முன்னே கர்நாடகத்தின் வீடுகள்தோறும் நம் நாயன்மார்கள் வரலாறு பேசப்பட்டு வந்தது. மேலும் புகழ்பெற்ற கன்னடகவிஞரான ஹரிஹரன் தமிழகம் வந்து பெரியபுராணம் படித்து நாயன்மார்களின் ஊரினை கேட்டறிந்து, நேரே போய் பார்த்து ,"ரகளை" எனும் கன்னட இலக்கியம் படைத்தார். காரைக்காலம்மையை, காரிகாலம்மை என அழைக்கின்றனர். கன்னடத்தில் ஒரு சிறுமாற்றமாய் காரைக்கால்அம்மையின் கணவரை சமணர் என்று அழைக்கின்றனர். இனி அம்மையின் புராணத்தை காண்போம்.

இவரது இயற்பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் பிறந்தார். வணிகர் மரபில் உதித்தவர் இவர். இவ்வணிகர் குலத்தின் தலைவன் தனதத்தன், நீண்ட தவத்தின் பயனாய் திருமகளே, நிலமகளாய் அவதரிக்கும் வண்ணம் புனிதவதி தோன்றினர். பேரழகு உடையவர். பேதை, பெதும்பை பருவங்களை செல்வச்செழிப்புடன் கழித்தார். அப்பருவத்திலேயே ஈசனின்பால் மிகுந்த அன்பு கொண்டார் மணமுடிக்கும் மங்கை பருவமும் வந்தது.

நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகர் இருந்தார். அவர் தன் செல்வ மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பினார்.  முதியோர் சிலரைத் பெண்கேட்டு தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர்களின் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தனின் ஒரே செல்வமகளாய் புனிதவதி திகழ்ந்ததால்,  காரைக்காலிலேயே தன் மருமகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தார். பரமதத்தனும் தன் மாமனார் தன்னைநம்பி அளித்த செல்வத்தை பேணிபாதுகாத்தார், அதனை பலவாறும் பெருக்கினார். மேலும் ஈசன்மேல் கொண்ட அன்புகாரணமாய் சிவனடியார்களுக்கு அமுதுதளித்தல் போன்ற காரியங்களை செய்து வந்தனர்.ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த வணிகர்கள் சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் தன் இல்லத்தில் கொடுக்குமாறு தன் பணியாளரிடம் கொடுத்து அனுப்பினான்.

[கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
 மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின் 
 பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் 
 உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்]

அவ்விரு பழங்களையும் புனிதவதி பெற்றுக்கொண்டார். பாதுகாப்பாய் தம் இல்லத்தில் வைத்தார். அச்சமயம் ஈசனின்அடியார் ஒருவர் இல்லம் வந்தார். புனிதவதி அவரை வரவேற்று நல்லவிருந்தாய் இனிய அடிசிலை உண்ண வைத்தார். தன் கணவன் அளித்த மாங்கனி நினைவில்ர, ஒருகனியை அடியாரின் இலையில் வைத்து உண்ணவைத்தார். அம்மையின் இனிய உபசரிப்பில் மகிழ்ந்து, உண்டு, வாழ்த்தி சென்றார். அடியார் சென்றதும் பரமதத்தன் இல்லம் வந்தான். பசியில் உண்ண அமர்ந்தான் அம்மையும் நல்விருந்து படைத்தார். மீதமிருந்த ஒரு மாங்கனியை இலையில் வைத்தார் அம்மை, மாம்பழத்தின் இனிய மணத்தில்  முதலில் அதனை சாப்பிட்டார். பின் ஆசைமேலிட்டு மற்றொரு பழத்தினையும் கேட்டான் பரமதத்தன்.கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அந்த அதிசயம் நிகழ்ந்தது. இறையருளால் அவர் தம் கையிலே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முதலில்உண்ட கனியின் சுவையைவிட  வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார். ஆனால் இதனை பரமதத்தன் நம்பவில்லை, குற்றமற்ற தன் இல்லாளை சந்தேகித்தான். நீ கூறுவது உண்மையெனில் சிவனருளால் இதேபோன்ற மற்றொரு பழத்தை என்னிடம் தருவிப்பாயாக என்று கூறினார். இதைக்கேட்ட புனிதவதி அங்கிருந்து நகர்ந்தார். இறைவனிடம் இறைஞ்சி வேண்ட, மற்றொரு மாங்கனி மீண்டும் கையில் வந்தது. அதை கணவனிடம் கொடுத்தாள். அதை வாங்கினான் பரமதத்தன். வாங்கிய மறுகனம் மாயமாய் மறைந்த மாங்கனி. நடுங்கினான் பரமதத்தன், தன் இல்லாள் சாதாரண பெண் அல்ல. அவள் தெய்வப்பிறவி எனஉணர ஆரம்பித்தான். மெல்ல மெல்ல தன்மனைவியின் தொடர்பை துண்டித்தான்.
அதன்பின் கடல்வாணிபம் செய்து பொருளீட்ட அயலகம் சென்றான். ஆனால் அவன்இல்லம் திரும்பிவராது. மதுரையிலே குடிபுகுந்தான். அங்கு ஒருபெண்ணை மணமுடித்து வாழ்ந்தான். பெண்குழந்தை ஒன்றை ஈண்றான். அக்குழந்தைக்கு தன் தெய்வீக மனையாளின் நினைவாய் புனிதவதி எனும் பெயரிட்டான். இவ்விடங்களை மாற்று வணிகர் மூலம் அறிந்து கொண்டாள் புனிதவதி. அவள் கணவர் வாழும் இடத்திற்கே கொண்டு சென்று புனிதவதியை விடுவதென முடிவெடுத்தனர் அவளின் பெற்றோர். அழகிய பல்லக்கில் ஏற்றினர் செல்வ மகளை. நீண்டநாட்கள் கழித்து பல்லக்கும்மதுரை வந்தடைந்தது. இதனைகேள்விபட்ட பரமதத்தன் தன் இரண்டாம் மனைவியையும், மகளையும் அழைத்து அவர்கள் முன்பாகவே வந்தான். புனிதவதியின் காலில் மூவரும்  நிலத்தில் விழுந்து பணிந்தனர். அது கண்ட அம்மையார் பதறிப்போய் ஒதுங்கினார்,சுற்றத்தினர் பரமதத்தா இது என்ன? உன் மனைவியை வணங்குகிறாய் உன் செயலின் உட்பொருள் யாது என்று வினவினார்கள்.
 இவர் மானுடமல்லர் இவர் நற்தெய்வமாகும் இதை நான் முன்னமே அறிவேன் அதனால் தான் என் மகளுக்கு இத்தெய்வத்தின் பெயரை சூட்டியுள்ளேன் ஆதலால் அடி பணிந்தேன்
நீவிரும் அடிபணியுங்கள் என்றான். சுற்றத்தினர் அதுகேட்டு அதிசயித்தனர்.
புனிதவதி உடனே, என் கணவர் மனதில் கொண்ட எண்ணம் இதுபோலும், இனிமேல் வனப்புடைய எனது உடலை நான் சுமக்க விரும்பவில்லை, தசைபொதிந்த சுமையாகிய உடலை இங்கேயே கழிக்கிறேன், இனிமேல் உமது திருவடிகளை போற்றுகிற பேய்உருவம் தந்தருள வேண்டும்!என்று இறைவனிடம் வேண்டினார்.அப்போது அவ்வதிசயம் நிகழ்ந்தது! ஆடலரசன் திருவருளால் விண்ணும் மண்ணும் போற்றும் பேயுருக் கொண்டார். மலர்மழை பொழிந்தது வான துந்துபி ஒலி உலகமுழுதும் நிறைந்தது. கணங்கள் குணலையிட்ட( மகிழ்ச்சி மிகுதியில் ஆடுகின்ற நடன நிகழ்வு குணலை) சுற்றத்தினர் இந்த அற்புதம் கண்டு தொழுது அஞ்சி ஓடி விட்டார்கள். அம்மையார் ஒருங்கிணைந்த மெய்ஞான உணர்வுடன் உமாபதியை அற்புத திருவந்தாதி என்ற திருநூல் பாடித் துதித்தார் பொற் பதம் போற்றும் நற்கணங்களில் நானும்
ஒன்றானேன் என்று மகிழ்ந்தார். ஈசன் வீற்றிருக்கும் திருக்கயிலாய மலையை சென்றடைய விரும்பினார்.அம்மையின் உருகண்டு தேவர்கள் அஞ்சி ஓடினர். வடதிசைதேசமெங்கிலும் விரைவாய் கடந்தார். ஒருவாறு திருக்கயிலாய பதம் அடைந்தார். ஈசன் வீற்றிருக்கும் இடத்தில் காலால் நடப்பதா? என எண்ணி,

[தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்  கலை இளம் திங்கள் கண்ணிக் கண்நுதல் ஒரு பாகத்துச்
சிலைநுதல் இமய வல்லி திருக்கண் நோக்குற்றது அன்றே]

தலையாலே நடந்து சென்று திருக்கயிலாய மலைமீதேறினார். உமையம்மையை முதலில் கண்டார். உமையம்மை தம்உள்ளத்தில் அதிசயம் கொண்டார்.தலையால் நடந்து இம்மலைமீதேறி வரும் இந்த எலும்புக்கூடு பெற்ற அன்புதான் என்னே!  என ஈசனிடம் வினவினார். தள்ளாடியபடியே காரைக்காலம்மையும் பெருமானிடம் நெருங்கினார்.
ஈசன் அவரை அம்மையே என்று அழைத்ததும், அம்மையார் அப்பா என்று பங்கய பாதமலரின் மேல் பணிந்தார் அவரை நோக்கி இறைவர் "நம்பால் வேண்டுவது யாது? என்று அருள் புரிந்தார் ஈசர். அம்மையார் அடிபணிந்து  உம்மிடம் ஒருபோதும் நீங்காத இன்ப அன்பு வேண்டும் , பிறவாமை வேண்டும் ஒருக்கால் பிறப்புண்டேல் உம்மை ஒருபோதும் மறவாமை வேண்டும் என்று வேண்டினார் இறைவர் அவ்வரங்களை அளித்து தென் திசையில் தொண்டை வளநாட்டிலே பழையனூர் அருகில் திருவாலங்காட்டில் நமது திருநடனத்தினைக் கண்டு கொண்டிரு என்று கருணை புரிந்தார். வரத்தை பெற்ற அம்மை ஈசனிடம் விடைபெற்று வணங்கிச்சென்றார். திருவாலங்காடு தலத்தை தலையினாலே நடந்து சென்று இறைதிருமுன் அடைந்து, "கொங்கை திரங்கி" எனும் மூத்த திருப்பதிகத்தையும் "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் ஆடலரசரின்  தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

"பேயார்க்கும்அடியேன்"

சிற்பம்: தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருடியார்
#காரைக்காலம்மையார்
#இருபத்திமூன்றாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog