Monday, 4 May 2020

சண்டேசநாயனார்

தினம் ஒரு அடியார்-19

சண்டேசநாயனார்:

கும்பகோணம்-திருப்பனந்தாள்  சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ளது சேங்கனூர், அக்காலத்தில் இவ்வூர் சேய்ஞலூர் என்று அழைக்கப்பட்டது. அவ்வூரில் பிறந்தவர் சண்டேசுரர் இவரது இயற்பெயர் விசாரசருமர். பூசைநாள்: தை உத்திரம். இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.
இவ்வூரின் நில, நீர்வளத்தினை சுட்டிக்காட்டிய சேக்கிழார் அதனோடு மற்றுமொரு வரலாற்றுச்செய்தியையும் மறைபொருளாய் தருகிறார்.

[சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை 
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் 
மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும் 
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர்]

சோழமரபில் அபயன் எனவும் அநபாயன் குலோத்துங்கன் எனவும் பெயர்பெற்ற
 இரண்டாம் குலோத்துங்கன்  தில்லையில் பொன்வேய்ந்தார். சோழர்கள் முடிசூடும் மரபுடைய பழமையான ஐந்து ஊர்களில் சேய்ஞலூரும் ஒன்று என்கிறார். இச்செய்தி வாயிலாக சோழர்கள் ஐந்து ஊர்களில் மரபாய் முடிசூடும் வழக்கமுடையதை அறியலாம். இவ்வாறு பழம்பெருமையுடைய இவ்வூரில் காசிப கோத்திரத்தின் தலைமை குடியில் நல்வினை, தீவினை என இரண்டும் ஒருங்கே கொண்ட "எச்சதத்தன்" என்பவன் வாழ்ந்து வந்தான். இவரது மனைவியோ பழுத்த சிவப்பழம்
இவர்களுக்கு மகனாய் பிறந்தவரே வியாசருமர் எனும் சண்டேசர். தன் ஐந்து வயதிற்குள்ளாகவே சிவாகமம் மறைகள் சிறப்பாய் அவருள்ளேயே தங்கின. ஏழுவயதில் உபநயனம் எனும் சடங்கினை முடித்தார். தம் பெற்றோர் விருப்பப்படி மறைஓதும் செயலை செய்துவந்தார். ஆசிரியர் மறைகள் கற்றுத்தரும் முன்னே அவைகளை உள்ளத்தில் பெற்றிருந்தார். ஆடல்வல்லானின் அன்பே தன்னுள் அழியாதிருப்பதை உணர்ந்தார்.

ஒருநாள் விசாரசருமர் வேதம் ஓதும் மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்ட சிறுவனுக்குக் கோபம் வந்து , பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரசருமர் திடுக்கிட்டார். அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்று  அவன் பசுவை மேலும் அடிக்காமல்  தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறினார். எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையன அல்லவா ? அரனார் திரு மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமை யும்  ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் தேவியாருடன் எழுந்தருளும்   இடபம் காமதேனு எனும் ஆவின் திருக்குலத் தைச் சேர்ந்ததல்லவா?  பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், நெய் ,மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், ரிசிகளும் , முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத் தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் காப்பதே  நம் கடமை. ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனி இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான். தினமும் இவ்வாறே தொடர்ந்தது பசுக்கூட்டத்திற்கு புல், கூளம் நீர்க்காட்டி ஓட்டி வந்தார். முன்பிருந்ததை விட பசுக்களும் நன்றாய் கொழுத்தன. பசுக்களின் மேடி பெருகி இனிய பாலை காம்புகள் சொரிந்தன. தம்மையடைந்த பசுக்காமல் பாலைசொரியும் அதிசயம் கண்டான் வியாசருமர். இப்பாலினை இறைவன் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தலாம் என எண்ணி, விளையாட்டாய் மணலிலேயே சிறுகோவில் எழுப்பினார். உள்ளே லிங்கத்தினையும் வைத்தார். வேதம் ஓதி பாலினால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். இச்செயல் தினமும் நடைபெற்றது. இச்செயலை ஒருநாள் கண்டான் மாட்டினை ஒப்படைத்தவன், உடனே கோபம் பொங்கியது, உன்னைநம்பி மாட்டினை ஒப்படைத்தால், பாலை வீணாக்குகிறாயே என சப்தமிட்டான். ஆனால் இறை வழிபாட்டில் இலயித்ததால் வியாசருமர் காதிற்குள் இவை விலவில்லை, சினமுற்ற அவன் உடனே ஊராரிடமும்
அச்சதத்தனிடம் சென்று விஷயத்தை கூறி மகனைக் கண்டிக்க கூறினர் . எச்சதத்தன் மகனைக் கண்டிப்ப தாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்  மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தார் எச்சதத்தன். மறுநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பசுக் களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். மகன் அறி‌யாமல் பின் தொடர்ந்து மண்ணியாற்றின் கரையை அடைந்த எச்சதத்தன் அங்குள்ள குரா மரம் ஒன்றில் ஏறி மறைவாக அமர்ந்து கொண்டு மகனை கண்காணித்தார் . விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நீறாடி ஐந்தெழுத்தை செபித்து மலர் கொய்து கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் பிரதிஷ்டை செய்து குடங்களில் பாலை வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரசருமர் பக்தியில் பூசையில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌ எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் துவங்கினார் மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது.  பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்து சினத்தால் பொங்கி எழுந்தார் . மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டு தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கி , கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தார் எச்சதத்தன் விசாரசருமரோ அடிபட்டும்  உணர்வு பெற வில்லை. பூசையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சதத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடாமல் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினார் . எச்சதத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌ கோபத்தை உண்டாக்கியது. பால் நிரம்பிய  பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ள அதுவரை பூஜையில் மெய் மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப்பாலை கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார்.

[எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக 
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில் 
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும் 
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி]

 வழிபாட்டிற்குக் குந்தகமாக நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தை என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டிக்க அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளிய  தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சதத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சதத்தன் உயிரை இழந்தார்.
பின் மீண்டும் வழக்கம்போல் தன் பணியாற்றினார். அப்போது நீண்ட சடையுடைய சிவபெருமான் உமையோடு காட்சியளித்தார்.
இறைவன் பாதம்பணிந்து வணங்கினார் வியாசருமார். கொன்றைமலரணிந்த ஈசன் தன் பாதம்பணிந்தவனை தூக்கி நிமிர்த்தினார். அவரை அணைத்து உச்சிமோர்ந்து மகிழ்ந்தார். ஈசனின் திருக்கையால் தீண்டப்பெற்ற வியாசருமர். ஓர் பேரோளி எழும்ப அதில் கலந்து மேலுலகம் சென்றார். தம் தொண்டருக்கெல்லாம் தலைவனாய் ஆக்கினார். 'நாம்உண்ட பரிகலமாகிய வாழையிலையையும், உடுக்கும் உடைகளையும், சூடும்மாலை, அணிகள் முதலியவை உமக்கேயளித்தோம்' என கூறி தம் சடையில் அணிந்துள்ள கொன்றைமைமாலையை எடுத்து விசாரசருமரின் தலையில் சூடினார். அக்கனம் சிவகணங்கள் ஆடிப்பாடின. நான்குதிசைகளில் பலவாத்தியங்கள் ஒலித்தது.

சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சதத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையை தன் மகன் கையாலேயே பெற்று, பின் அவனால் பாவம் நீங்கி, சிவலோகபதம் பெற்றார் . விசாரசருமர் பரமேசுவரனின் திருவருள் அணைப்பிலே பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருள் தாளினை அடைந்தார்.

சிற்பங்கள்: தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம், கடம்பூர், குன்றாண்டார்கோவில்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#சண்டேசநாயனார்
#பத்தொன்பதாம்நாள்தினம் ஒரு அடியார்-19







No comments:

Post a Comment

Popular Posts In This Blog