Monday, 4 May 2020

திருகுறிப்புத்தொண்டர்

தினம் ஒரு அடியார்-18

திருகுறிப்புத்தொண்டர்:

தொண்டைமண்டலத்தின் கற்றவர் நிறைந்த காஞ்சியில் பிறந்தவர் இவர். இவரதுபூசைநாள்: சித்திரை சுவாதி
இவர் துணிதுவைக்கும் ஈரங்கொல்லி(வண்ணார்) வகுப்பைச் சேர்ந்தவர். ஏகாலியர் என்பது இவரது பெயர். இதனை குலம் என்றும் கூறுவர்.
சிவனடியார்தம்  உள்ளத்தினுள் உள்ள திருக்குறிப்பைஉணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தொண்டினால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். சிவனடியார்கள் உடுத்திய உடைகளை மனமுவந்து தானே துவைத்து கொடுப்பார். தன்முன்வினையால் உண்டான குற்றங்களான மும்மலங்கள் சேர்வதால் உண்டாகும் பிறவி எனும் அழுக்கை போக்கி வந்தார். தம் தொண்டரான ஏகாலியாரின் நிலைமையை பார்த்து அவருக்கு அன்புசெலுத்த ஈசனும் வந்தார்.

[சீதமலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால் 
ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் 
மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் 
கோதடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி]

குளிர்மிகுந்த காலத்தில் ஏழையாய் மெலிவடைந்த, மிகவும் அழுக்கான கந்தையணிந்து சிவனடியார் வேடமணிந்து வந்தார் ஈசர்.குறுகிய நடையுடன் குற்றமேற்ற ஏகாலியார் முன்வந்தார்.
வெண்ணீறு அணிந்த கோலத்தையும், திருமேனியில் கரியமேகம் போன்று அழுக்கையுடைய கந்தையை போர்த்திக்கொண்டு வந்த அரியதவத்தவரை கண்ட ஏகாலியர் எதிர்சேவைபுரிந்து அவரை வரவேற்றார். அவரின் உள்ள திருக்குறிப்பையுணர்ந்த ஏகாலியர், தவமுடையீர் தங்கள் மேனி துரும்பென இளைத்த காரணம் என்ன? கந்தையை என்னிடம் தாருங்கள் அன்பரே நான் துவைத்து தருகிறேன் என்றார். அதற்கு இறைவர்,

[இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் 
மெய்க் கொண்ட குளிர்க் குடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால் 
அக் குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் 
கைக் கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது என்றார்]

மிகுதியான அழுக்கின் காரணமாய் இந்த கந்தை நான் உடுத்த இயலாது. எனினும் குளிருக்கு அஞ்சி இதைநான் தரஇயலாது, ஆயினும் நான் தருகிறேன், சூரியன் மறைவதற்கு முன் எனக்கு வெளுத்து தருவீராக என்றார். அதற்கு இசைத்தார் ஏகாலியர். சற்றும் காலம் தாழ்த்தாது கொடுப்பேன் என்று வாங்கினார்.இன்று மாலைக்குள் தராவிடில் என் உடலுக்கு துன்பம் செய்தவர் ஆவிர் என்றார் அடியார்.
மிகுந்த சிரத்தையுடன் அத்துணியை துவைத்து காயவைத்தார். சோதனைக்கு அன்று அச்சமயம் மழைபொழிந்தது. மழையோ விடாதுபெய்ய அடியாரின் துணிமுழுவதும் ஈரமானது. என்னசெய்வதென அறியாது திகைத்தார் ஏகாலியர். மழையோ விடாது பெய்து கொண்டேயிருந்தது. கண்ணே இருட்டியது ஏகாலியருக்கு! இனி என்ன செய்வேன்?என மனம் வருந்தினார். பகைவரை போல இரவும் வந்தது. குளிரால் உடல் வருந்தும் துறவியாரிடம் சென்று, 'ஆ!ஆ! என் பணிவிடை தவறிவிட்டதே!!  எனமனம் வருந்தினார். அவர் பாதம் பணிந்தார்.

[கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச் 
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத் 
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு 
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை]

வெறிகொண்டெழுந்தார், கந்தையை அடித்து துவைக்கும் பாறையின்மேல் என் தலைசிதையுமாறு முட்டிமோதுவேன் என அந்த அடைமழையில் ஓடினார். பாறையின் மீது தலையை முட்டிமோதினார். அப்போது மலர்போன்ற கையானது நீண்டு அவர் தலையை பற்றியது. வானத்திலிருந்து நீர்மழை மாறி பூமாலை பொழிந்தது. கொன்றைமலர்சூடி உமையுடன் காளைவாகனத்தில் வானில் தோன்றினார் இறைவன். ஆனந்தத்தில் இருகைகூப்பி வானைநோக்கி வணங்கினார் ஏகாலியார். தம்முன் நின்ற அடியவரை நோக்கினார். உம்தூயஅன்பின் திரத்தினை இம்மூவுலகம் உணரவே, இக்கோலம் பூண்டோம் என திருவாக்களித்தார் அடியார். பின் இவ்வுலகின் இன்பங்களைபெற்று சிவபதம் அடைந்தார் ஏகாலியார்.

திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்” 

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#திருக்குறிப்புத்தொண்டர்
#பதினெட்டாம்நாள்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog