Monday, 4 May 2020

மூர்த்தி நாயனார்

தினம் ஒரு அடிகள்:-14

மூர்த்தி நாயனார்:

பழம்பெருமை மிக்க பாண்டியநாட்டின் மதுரையம்பதியில் பிறந்தவர் மூர்த்தியார்.
இவரது பூசைநாள் : ஆடிகார்த்திகை

[சூழுமிதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள் 
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார் 
யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும் 
வாழும் நகரம் மதுராபுரி என்பதாகும்]

சூழ்ந்த இதழ்களுடைய தாமரை மீது உறையும் திருமகள் தாழ்வின்றி எக்காலத்தும் சிறப்பாய் வாழப்பெறுவதுபோல, திருமகளை போன்ற செல்வமும், அழகும் பொருந்திய பெண்களுடைய உதட்டின் யாழில் வாழும் இசையும், கூந்தலின் வண்டும் வாழ்கின்ற நகரம், 'மதுராபுரி'. செய்யுள் அரங்கேற்றுவதற்கு சங்கங்களால் நிறைந்தநகர், வயலினுள் எருமைகள் மேய, நீர்நிலையெங்கும் சேல்மீன்கள் பாய்கின்றன,என வேறு ஒரு கோணத்தில் மதுரையை காட்சிபடுத்துகிறார் சேக்கிழார்.

இத்தகைய சிறப்புடைய பழம்பதியான மதுரையில் வணிகர்குலத்தில் தோன்றினார் மூர்த்தியார். உலகப்பற்றுகளை போக்கி, ஈசனின் திருவடிகளையேபற்றி வாழ்பவர். தினமும் தவறாது ஈசனுக்கு சந்தனகுழம்பினை சாற்றுவதை தினப்பணியாய் செய்பவர்.

(மூர்த்தி நாயனார் களப்பிரர் காலத்தில் வாழ்ந்தவர் என்பது அவரது வரலாற்றால் அறிய வருகிறது. வடுககருநாடகர் என்று களப்பிரரை குறிப்பிடுகின்றனர் பாடல்களில். களப்பிரர் வைதீக மதம் சாராது சமணமதத்தை தழுவியவர்கள் என பெரியபுராண பாடல்கள் கூறுகிறது, களப்பிரர் குறித்த கல்வெட்டுகள் நமக்கு தமிழகத்தில் ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. ஆகவே அவர்களின் வரலாற்றை அறிய இதுபோன்ற இலக்கியங்கள் ஓரளவு உதவிபுரிகிறது)

மாற்றுகுல மன்னன் மதுரையை கைப்பற்றினான். அம்மன்னன் முடிவில்லா கொடுமையை செய்தாலும் மூர்த்தியார் மனங்கலங்காலாது தினமும் ஈசருக்கு சந்தனகாப்பு சாற்றிவந்தார். மன்னனோ சந்தனம் பெறுவதற்கான வழியினையடைக்க, திருவாலவாய் ஈசனுக்கு சந்தனம்சாற்ற வழியில்லாது மூர்த்தியார் திகைத்தார்.

[நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று 
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று 
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் 
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய]

சந்தனம் தேய்க்கதானே கட்டுப்பாடு? சந்தனம் தேய்க்கும் என் கரத்திற்கு ஏது தட்டுப்பாடு? என விரக்திமேலோங்க சந்தனம் அரைக்கும் கல்லில் தன் முழங்கையை வேகமாய் தேய்க்க ஆரம்பித்தார் வெளித்தோலும், நரம்பும் வெளிவர வர தேய்த்தார். குருதி பீய்ச்சிட, எலும்பும் தேய ஆரம்பித்தது. இக்கொடுமையை பொறுக்கமாட்டாத இறைவனின் அசரீரி ஒலித்தது,

அன்பனே! என்னிடம் கொண்ட அன்புகாரணமாய் நீ இச்செயலை செய்ய வேண்டா! உனக்கு கொடுமையிழைத்தவன் கொண்ட நாடுமுழுமையும் நீ பெற்று உம் துன்பமெல்லாம் போக்கி நாட்டைகாத்து, நிம்மதியாய் திருப்பணிசெய்து முடிவில் தேவலோகம் அடைவாய் என திருவாக்கு எழுந்தது.

அன்றிரவே அக்களப்பிரன் இறந்தான். வாரிசு இல்லா அம்மன்னன் இறக்க, அமைச்சரவை கூடியது, அடுத்து என்னசெய்ய என கலந்தாலோசித்து, யானையை கண்கட்டி விட்டு, அந்த யானையால் யார் கைக்கொள்ளப்படுவாரோ! அவரே இந்நாட்டை ஆளும் மன்னர் என முடிவெடுத்தனர். அவ்வாறே யானையையும் ஏற்பாடு செய்ய, யானையோ திருவாலவாயின் உயர்ந்த கோபுரம் முன்பு நின்றது, மூர்த்தியாரும் தனக்கு வந்த அசரீரி வாக்குப்படி, முன்னே வர, யானையும் மூர்த்தியார் அருகேவந்து தன்பிடரி மீது வைத்துக் கொண்டது.

மகிழ்ந்தது அமைச்சரவை, பேரிகை சங்குகள் முழங்க, ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டார் மூர்த்தியார். யாகங்கள் நடத்தப்பட்டது. 

[வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் 
சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் 
முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் 
இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார்]

"முன்செயலான சமணம் வீழவும், முழுமுதற் சைவம், ஓங்கும்படி இந்த உலகைத்தாங்கி அரசாள்வேன்" என்று கூறினார் மூர்த்தியார். நாடெங்கும் மங்கலஓசை ஒலிக்க, திருவாலவாய் தலத்திற்கு சென்று ஈசனை வணங்கினார். கலகம் செய்த சமணர்களின் செயலானது நீங்கி, திருநீற்றுநெறி நிலைபெற, நெற்றிக்கண்ணுடைய ஈசனின் உண்மைதாறத்தை அனைவரும் உணரும் வண்ணம் திருநீறும், உருத்திரகாண்டிகையும்,சடைமூடியும் அணிந்து நாட்டை ஆண்டு வந்தார் மூர்த்தியார். பெண்களின் தொடர்பினை நீக்கி இல்வாழ்க்கை துறந்து, சிவதொண்டு புரிந்து, செங்கோலாட்சி புரிந்து சிவபதம் அடைந்தார் மூர்த்தியார்.

"மும்மையாலுல் காண்ட மூர்த்திக்கு மடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்

#தினம்ஒருஅடியார்
#மூர்த்திநாயனார்
#பதினான்காம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog