Monday, 4 May 2020

குங்கிலிய கலய நாயனார்

தினம் ஒரு அடியார்-10

குங்கிலிய கலய நாயனார்:


இவரது இயர்பெயர் கலயர் என்பதே. ஈசனார் வீரம்காட்டி உணர்த்திய அட்டவீரட்டானங்களுள் ஒன்றான, மார்க்கண்டேயனுக்காக காலனைஉதைத்து தள்ளிய தலமான திக்கடவூரில் ஆவணி மூலத்தில், அந்தணர் குலத்தில் அவதரித்தவர், இவர் மிகுந்த சைவசமய ஒழுக்கமிக்கவர். சிவபெருமானின் திருவடிகளை தினமும் போற்றுபவர். தினமும் திருக்கடவூர் மகாதேவருக்கு மிகுந்தமனம் வீசக்கூடிய குங்கிலியதூபம் இடும் பணியை செய்துவந்தார். ஆகவே
"குங்கிலிய கலயர்" எனும் பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.தினமும் தன் சொந்தபணத்தில் குங்கிலியம் செய்து வந்ததனால் இறைவர் திருவருளால்(?) வறுமையும் வந்தது. எனினும் விடாது குங்கிலியமிடும் பணியை செய்து வந்தார்.

[இந்நெறி ஒழுகு நாளில்
  இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும்
  நாடிய அடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கள் மாளப் பயில்
  மனை வாழ்க்கை தன்னில்
மன்னிய சுற்றத்தோடு
  மக்களும் வருந்தினார்கள்]


வறுமை அதிகமாக, தன்நிலபுலன்களையும், தன்னிடமிருந்த அடிமைகளையும்( அந்நாளில் செல்வந்தர்கள் விலைகொடுத்து அடிமைகளை வாங்கும் முறை இருந்தது போலும்) விற்று தாம் மேற்கொண்டுவந்த தொண்டினை தடையில்லாது செய்துவந்தார். அவரின் சுற்த்தாரும், இல்லத்தாரும் இச்செயல்களால் மிகவும் மனம் வருந்தினர்.

[யாதொன்றும் இல்லையாகி இரு
  பகல் உணவு மாறிப்
பேதுறு மைந்தரோடும் பெருகு
  சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார் தம்
  கணவனார் கலயனார் கைக்
கோதில் மங்கல நூல் தாலி
  கொடுத்து நெல் கொள்ளும் என்றார்
]
இரண்டுநாள் உணவில்லாது, அவரின் மைந்தர்களும் சுற்றத்தாரும் மிகவும் வாடினர். உணவிற்கு வழியில்லாததால், தனது மாங்கல்ய பொற்தாலியை கழட்டிகொடுத்து நெல்வாங்க அனுப்பினார், குங்கிலியரின் இல்லாள்.
அவரும் செல்யில் குங்கிலிய மூட்டையுடன் ஓர் வணிகன் வந்துகொண்டிருந்தான். அவனிடம் அதுயாதென வினவ, அது குங்கிலியம் என அறிந்ததும், தன்னிலை மறந்தார், தன்இல்லாள், சுற்றத்தார் பசியை மறந்தார். உடனே தாலியை அவனிடம் கொடுத்து குங்கிலியமூட்டையை வாங்கியேவிட்டார். பின்நேரே திருக்கடவூர் சென்று கோவில் பண்டாரத்தில் குங்கிலியத்தை சமர்ப்பித்தார். பின் ஈசனின் முன்னால் மெய்மறந்து துதிக்கலானார்.
அவரின் மெய்பக்தியை உணர்ந்த ஈசர், குபேரனையனுப்பி பொன்மூட்டையையும், தேவைக்குஅதிகமாய் அரிசியினையும் தரச்செய்தார். குங்கிலியரைகாணாததால் பசிமயக்கத்தில் அனைவரும் கண்ணுரங்கினர். அன்று அனைவரின் கனவிலும் ஈசன் தோன்றி நடந்த விஷயத்தை உணர்த்தினார். விழித்துபார்த்தால் வீடுமுழுக்க பொற்குவியலை கண்டதால் இறைவன் அருளையெண்ணி வியந்து, அருள்நிறைந்த தன் கணவருக்கு மிகுந்தசுவையுடன் உணவுதயாரித்தாள் குங்கிலியரின் இல்லாள். ஈசரின் காலடியில் மெய்மறந்து கிடந்த தன் அடியார் உணரும் வண்ணம், 'நீ மிகவும் பசித்தாய்!நீ உன்வீட்டினையடைந்து பாலுடன்சேர்ந்த இனிய உணவு உண்டு பசித்துன்பம் நீங்குவாயாக!' என அருள் தந்தார்.
வீடுசேர்ந்தவருக்கு பெரும்புதையலை கண்டு ஆனந்த அதிர்ச்சி! காரணம் என்னவென மணைவியிடம் வினவ, அவர் தான்கண்ட கனவினை கூறி நடந்ததை விளக்க, வயிறும் மனதும் நிறைந்தது குங்கிலியருக்கு. ஈசன்அருளால் கிடைத்த செல்வத்தினை ஊர் ஊராய் சென்று சிவனடியார்களுக்கு விருந்து படைத்தார்.

[செங்கண் வெள் ஏற்றின் பாகன்
  திருப் பனந் தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு
  கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கித் தன் வேழம் எல்லாம்
  பூட்டவும் நேர் நில்லாமைக்
கங்குலும் பகலும் தீராக் கவலை
  உற்று அழுங்கிச் செல்ல]


அந்நாளில் திருப்பனந்தாள் சிவபானம் சாய்ந்து இருந்தது.அதனை நேரே நிமிர்த்த வேண்டுமென ஆசை சோழமன்னனுக்கு எழுந்தது. எவ்வவோ முயன்றும் அவனால் முடியவில்லை. இவ்விடயம் கேள்விப்பட்ட குங்கிலியர், தானும் அத்தலத்தை காணவிரும்பினார்.
காணுமிடமெல்லாம் அடியார்சூழ, வேதியர் குழும, மலர்சோலை நிரம்பிய திருப்பனந்தாளை வந்தடைந்தார்.

அங்கே படைகளும், யானைகளும் கூட்டமாய் நின்று பானத்தை அசைத்துபார்த்தனர். ஆனால் முடியாது செய்வதறியாது திகைத்தனர். கூட்டத்தைவிலக்கி தான் முயல்வதாக கூறி உள்ளே சென்றார் குங்கிலியர். அவரின் அருள்அறியாத கூட்டம் ஏளனப்பார்வை பார்த்தது. இறைவனின் திருமேனியில் அணிந்தஆடையில் பெரிய கயிற்றைப் பிணித்து கழுத்தினால் இழுக்கத் தொடங்கினார்.
கலயனாரின் உள்ளத்தில் உதித்த முயற்சியைக் கண்டபோதே பெருமையுடைய இறைவர் நேரே நின்றார். வானவரும் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தனர். கற்பகமலர் பரப்பினர் தேவர்கள். வீரக்கழலையுடைய மன்னன் மலர்ப்போன்ற குங்கிலியரின் பாதத்தை தலைமேல் வைத்து வணங்கினான். சிலநாட்கள் அங்கிருந்து அனைருக்கும் அருளுமாறு மன்னன் வேண்ட, அவ்வாறே தங்கினார் குங்கிலியர். பின் அங்கிருந்து திருக்கடவூர் வந்தடைந்தார். சிவப்பணியை செய்துவரும் சீர்காழியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையாரும், அவரது அடியாரும் திருக்கடவூர் வர, அவ்விருவரையும் அழைத்து தன் இல்லம் சென்றார். தன்இல்லத்தில் அறுசுவை உணவளித்து அவர்களுக்கு சேவை செய்தார்.

பின்நிலைத்த செல்வத்துடன் திருக்கடவூரில் வாழ்ந்து வந்தார். தம்மால் இயன்ற திருப்பணிகள் பலசெய்து ஈசனின் திருவடிகளை அடைந்தார்.

"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்

#பத்தாம்நாள்

#குங்கிலியகலயநாயனார்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog