Monday, 4 May 2020

கண்ணப்ப நாயனார்

தினம் ஒரு அடியார்-09

கண்ணப்ப நாயனார்:


பொத்தப்பி நாட்டிலுள்ள, உடுப்பூர் எனும் ஊரில் பிறந்தவர் கண்ணப்பர். இவரது இயற்பெயர் திண்ணர். சிவபெருமானுக்கு தன் கண்ணை அறிந்து அளித்ததால் கண்ணப்பர் எனும் நாமம் நிலைபெற்றுவிட்டது. சுந்தரமூர்த்தி நாயன்மாரால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்றும், பட்டினத்தாரால் "நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்" என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

பொத்தப்பி நாடு என்பது இன்றைய ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராக உள்ளது.கண்ணப்பர் பிறந்த உடுப்பூர் எனும் ஊர் குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

கண்ணப்பர் குன்றுவர் எனும் வேடர்குலத்தில் தோன்றியவர், இவரது பூசைநாள் :தை மிருகசீரிசம்.அவர் பிறந்த உடுப்பூர் மிகுந்த வளம் பொருந்திய குறிஞ்சிநிலம்.காட்டுப்பன்றிகளும், யானைகளும், புலி,கரடி,மான்,காட்டுப்பசு போன்ற ஏகப்பட்ட விலங்கினங்கள் வாழ்ந்தன.  அம்மலை முழுவதும் 'கொல்','எறி','குத்து' என்ற வேடர்களின் ஒலி ஒலித்துக் கொண்டேயிருக்கும். ஆநிரை கள்வர்கள் கவர்ந்துவந்த பசுக்களும் மலைமுழுவதும் நிறைந்திருக்கும். இக்குன்றுவர் கூட்டத்தின் தலைவன் நாகன் என்பவர், இவருடைய மனைவி தத்தை என்பவள்.
பிள்ளைப்பேறு இல்லாமல் தம்பதியினர் தவித்து வந்தனர். பிள்ளைவரம் வேண்டி முருகவேளின் கோவிலுக்கு தினமும் சென்று, சேவலையும், மயிலையும் காணிக்கையாய் தந்து, புகழ் அமைந்த குரவைக்கூத்து ஆடி, பெரிய அணங்காடல் செய்வித்து பெருவிழா எடுத்தனர். இறைவன் கருணையால் கண்ணப்பர் பிறந்தார். வேடர்கூட்டமே திருவிழாபோல் கொண்டாடாடியது. குல வழக்கப்படி மணங்கமழும் இளந்தளிர்களை சூட்டினர், மணிக்கோவை எனும் அணியை இடுப்பில் கட்டினர். இளம்பருவமும் வந்தது, வீரம் மட்டுமல்ல கருணையிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார். புலிக்குட்டி காட்டுப்பன்றி, முயல் ஆகியவற்றை பின்தொடர்ந்து பிடித்து அதனை வீட்டின் முன்புகட்டி வளர்த்து வருவார். வேடர்தலைவன் நாகன் தன் மகனுக்கு போர்க்கலையான விற்பயிற்சி கற்றுகொடுத்தார். அத்துடன் அதனோடு தொடர்புடைய ஏனைய கலைகளையும் கற்றுத்தேர்ந்தார் கண்ணப்பர். வேடர்குழுவாய் வில்வேட்டையாட பருவ இடைவெளியில் செல்வர், அவ்வாறே செல்ல முற்படையில் நாகன் தலைமையேற்று செல்வார், வயதுமூப்பின்காரணமாய் இம்முறை கண்ணப்பரை தலைமையேற்று போகச்சொன்னார். அவ்வூரில் தேவராட்டி எனும் குறத்தி வாழ்ந்து வந்தாள். அவளிடம் குறிகேட்டுத்தான் செல்வர் வேட்டைக்கு. அன்று புதிதாக கண்ணப்பர் தலைமையில் செல்வதனால் அனைவரும் குறிகேட்டனர். தேவராட்டி கண்ணப்பரை கண்டு உன்தந்தையின் தந்தையை விட வலிமைமிக்கவன் நீ! நீயே இனி இக்கூட்டத்தை வழிநடத்துவாய் எனகூறி திலகமிட்டு அக்குழுவை அனுப்பினாள்.

தன் உற்றநண்பர்கள் நாணன்,காடன் மற்றும் குன்றவர் குழுவினருடன் வேட்டைக்கு சென்றார். வேட்டைக்காக கன்னிவைத்து வலைவிரித்து வைப்பர். பல விலங்குககள் பொறியில் சிக்கியது.
அந்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் கண்ணப்பர் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் கண்ணப்பர்.

[ முன்பு செய் தவத்தின் ஈட்டம்
  முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்துக் காட்ட
  அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர
  வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து
  எழு பெரு வேட்கை யோடும்
]

முன்புசெய்த தவத்தினால் உண்டான அன்பு அளவில்லாமல் பெருகி பெருங்காதலாகி சிவபெருமான் எழுந்தெருளியுள்ள மலையைநோக்கி பேராசையுடன் மலையைநோக்கி சென்றார். கடினமான அந்தமலையில் ஏறி ஏகநாயகரான சிவனை கண்ணில் கண்டார். சிவபெருமானை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து தழுவினார். நீண்டநேரம் உச்சிமுகிர்ந்தார். உடற்மயிர் சிலிர்த்தது. கொடிய வனவிலங்குகள் திரியும் இக்காட்டில் நீவிர் தனியாய் இருப்பதா என மனம் வருந்தினார்.
ஈசனாரின் முன் பச்சிலையும், பூவும் படைக்கப்பட்டு இருந்தது. இந்நற்செயலை யார் செய்திருப்பார்? என கண்ணப்பர் வினவ,

நாணனோ நான் கண்டுள்ளேன் நண்பா! என மறுமொழியளித்தான். வலிய உம்தந்தையுடன் வேட்டையாட இப்பகுதிக்கு வந்தோம் அப்போது ஒரு பார்ப்பனர் குளிர்ந்தநீரால் இவரை நீராட்டி இலையும், பூவும் சூடினார் என கூறினான்.ஆகவே அவரே இதனை செய்திருக்க வேண்டும் என்றான்.
இறைவனுக்கு இவைதான் விருப்பம்போலும் என கண்ணப்பன் நினைத்தார். ஆயினும் அவரை அங்குவிட்டு செல்ல மனம் ஒப்பவில்லை, அவருக்கு உணவுபடைக்க விரும்பினார்.

நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். பின் இறைவனின் முடிமீதிருந்த மலர்களை தம்காலால் துடைத்தெரிந்தார்.குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் இறைவனுக்கு திருவமுது தேடி வரப் புறப்பட்டார். மறுநாள் காலை சிவகோசரியார் இறைவனை காண வந்தார்.

[வந்து திருமலையின் கண்
  வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்
  கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு
  அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார்
  செய்தார் என்று அழிவார்
]
வெந்த இறைச்சியும், எலும்பும் இறைவன் முன் கிடக்க, அதைக்கண்டதும் தொலைவில் ஓடி! ஓ கெட்டேன் இப்பாதகத்தை செய்தவன் யார்? என நினைத்து வருந்தினார்.பின் அவற்றை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தினார். பின் திருமுகலி ஆற்றிற்கு சென்று நீராடினார்.
சிவ கோசரியார் வருத்தத்துடன்  இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றி கண்ணப்பரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார்.
அவ்வாறே சிவகோசாரியாரும் தம் படையலை படைத்துவிட்டு மறைந்துநின்று பார்க்கலானார்.

கண்ணணாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது "ஊனுக்கு ஊன்"என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார்.தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்

[கானவர் பெருமானார் தங்கண்
  இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று
  முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார்
  நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி
  பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப]


கண்ணப்பர் தம் கண்ணைத் தோண்டி இறைவன் கண்ணில் அப்பியபோதும், அவர் ஊட்டிய ஊன் உணவை விரும்பியேற்ற இறைவன் இடக்கண்ணைத்தோண்ட முற்படுகையில் தன்கையை கொண்டுதடுத்த நிகழ்வை கண்டார் சிவகோசாரியார் அப்போது வேதங்கள் ஒலிக்க, நான்முகன் முதலிய தேவர்கள் பூமாலை பொழிந்தனர்.
இணையற்றவனே இனிநீ என் வலப்பக்கத்தில் இருப்பாயாக!என திருவருள் வழங்கினார்.

சிற்பங்கள் : தஞ்சை, தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#கண்ணப்பநாயனார்
#ஒன்பதாம்நாள்




No comments:

Post a Comment

Popular Posts In This Blog