Monday, 4 May 2020

எறிபத்த நாயனார்

தினம் ஒரு அடியார்-07

எறிபத்த நாயனார்:

சங்ககால சேரர்களின் தலைநகராய் விளங்கிய கருவூர் வஞ்சி என அழைக்கப்பட்ட கரூரில் பிறந்தவர் எறிபத்தர்.
இவரது பூசைநாள்: மாசி அஸ்தம்.
இவர் வரலாறு புகழ்ச்சோழரின் வரலாற்றோடு இணைத்து கூறப்படுவதால், இவரின் காலம் 4-5 ம் நூற்றாண்டு என கருதப்படுகிறது! இவர் காலத்தில், கருவூர் சோழரின் மேலாண்மையில் இருந்தது. கருவூர் நகரத்தின் அன்றைய அழகை சேக்கிழார் அருமையாக விவரித்துள்ளார்( அவருக்கு முன் சுந்தரர் கூறியிருப்பதை அவர் மேலும் மெருகேற்றியிருப்பார்)

[கடகரி துறையில் ஆடும்களி
  மயில் புறவில் ஆடும்
அடர்மணி அரங்கில் ஆடும்
  அரிவையர் குழல் வண்டுஆடும்
படரொளி மறுகில் ஆடும்பயில்
  கொடி கதிர் மீதுஆடும்
தடம்நெடும் புவி கொண்டாடும்
  தனிநகர் வளமை ஈதால்
]

மதங்கொண்ட யானைகள் நீர்த்துறைகளில் விளையாடும், பெண்களின் கூந்தல்மேல் வண்டுகள் மொய்க்கும், ஒளியுடைய வீதிகளில் படர்ந்து ஆடும் கொடிகள் சூரிய சந்திரர் மீது சென்றடையும், அகன்ற நெடிய உலகம் போற்றும் கருவூர்நகரம் இத்தகைய் சிறப்பையுடையது. மேலும் அழகிய நெடிய மதிலைகொண்டது இந்நகர். மேலும் அங்கு இறைவன் நிலைபெற்று வாழ்கின்ற 'திருவானிலை' எனும் கோவில் சிறப்புற்று விளங்கியது.
பக்தி இலக்கியங்களை சமயம் சார்ந்தது என்ற நோக்கில் பாராமல், அதனை ஆழ்ந்து நோக்குங்கால் அன்றைய மக்களின் அரசின் சூழலை காட்டும் கண்ணாடியாய் அறியலாம்.

அன்று சிறப்புற்று விளங்கிய 'திருவானிலை' கோவிலிற்கு வரும் அடியார்களுக்கு தொண்டு செய்து ஒருவர் வாழ்ந்து வந்தார்,
அவரே எறிபத்தர் எனும் பெயருடையவர். எப்போதும் தன் கையில் மழுவை ஏந்தியிருப்பவர். திருவானிலை கோவிலிற்கு தொண்டாற்றுவதில் சிறந்தவர் "சிவகாமி ஆண்டார்" எனும் முனிவர். இவர் தினமும் தம்கரங்களால் மலர்பறித்து மாலையாக்கி இறைவனுக்கு சாற்றுவதே தம்கடன் என்று வாழ்பவர்.

ஒருநாள் அம்முனிவர் நீராடி, வாயைக்கட்டிக்கொண்டு மலரின் வாசம் அறிந்து, அதன் காலம்அறிந்து பறிக்க பூஞ்சோலைக்குள் சென்றார். இறைவனின் திருப்பள்ளி வைபவத்திற்கு மாலையை கோர்த்து, சார்த்துவதற்காய் கோவிலை நோக்கி விரைந்தார். அப்போது அவ்வூரின் மன்னன் புகழ்ச்சோழரின் பட்டத்துயானையான 'பட்டவர்த்தனம்' பெரிய மலைபோன்ற தோற்றத்துடன் மதம்பிடித்து வீதிகளில் ஓடி வந்தது. அனைவரும் அஞ்சி சிதற, மேலும் வெறிகொண்டு ஓடிய யானை தன்முன்னே தலையில் மலர்களை ஏந்திச்சென்ற சிவகாமியாரின் பூமாலை துதிக்கையால் பிய்த்து எறிந்து விரைந்தது ஓடியது.

அந்தநேர கோவத்தாலும், இயலாமையாலும் சிவனை நினைத்து, "சிவதா, சிவதா" என ஆற்றாமையால் ஈசனிடம் முறையிட்டார், இறுதியாக

[என்றவர் உரைத்த மாற்றம்
  எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளாமூளும் நெருப்பு
  உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும்வழிப்
  பகை களிறே அன்றோ
கொன்று அதுவீழ்ப்பன் என்று
  கொலை மழுஎடுத்து வந்தார்
]

இவற்றை கேட்டறிந்த எறிபத்தர் கடுஞ்சினம் கொண்டார். 'ஆடலரசின் அடியாருக்கு யானை வழிப்பகையன்றோ?" எனக்கூறி கடுஞ்சினத்துடன் தன்கொலைமழுவை எடுத்துகொண்டு வந்தார். சிவகாமியாரிடம் அவரது ஆற்றாமையை விசாரித்து, யானை சென்ற வழியை கேட்டு, யானையை நெருங்கினார்.

[பாய்தலும் மிசைகொண்டு உய்க்கும்
  பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம்
  திரிந்து மேற்கதுவ அச்சம்
தாய்தலை அன்பின் முன்பு 
  நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ
  மழுவினால் துணித்தார் தொண்டர்]

நெருப்பை உமிழ்வது போன்ற சிவந்தகண்களையுடைய அந்தயானை எறிபத்தர்மீது பாய, அவரும் வீறுகொண்டு மழுவால் துதிக்கையை ஓங்கி வெட்டினார். அதனை தடுக்க வந்த யானையையும், பாகனையும் மலைபோன்ற தோளுடைய எறிபத்தர் கொன்று வீழ்த்தினார். உடனேஇவ்விடயம் புகழ்ச்சோழன் காதுகளுக்கு எட்ட, தன் பட்டத்துயானையை கொன்றவர் எதிரிநாட்டோனோ என சினம் கொண்டு தன் படை, கொத்தாளங்கள் சூழ வீறுகொண்டு தன்குதிரையில் முன்னோக்கி சென்றார் புகழ்ச்சோழர்.

[கடுவிசை முடுகிப் போகிக்
  களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளம் குறுகச் சென்றான்
  பகைபுலத்து அவரைக் காணான்
விடுசுடர் மழுஒன்று ஏந்தி
  வேறு இருதடக் கைத்தாய
அடுகளிறு என்ன நின்ற
  அன்பரை முன்பு கண்டான்]

படுகளம் நோக்கி சென்ற புகழ்ச்சோழர், அங்கே பகைவர் எவரும் இல்லாது இருபெரும் கைகளைக் கொண்டு ஒளிவீசும் மழுவுடன் கம்பீரமான எறிபத்தரை கண்டார்.அவரின் அடியார் கோலத்தினை கண்டு,இவர் யானை கொன்றிருக்க வாய்ப்பிருக்காது என எண்ணி, சுற்றத்தாரிடம் விசாரிக்க அனைவரும்,நடந்ததை கூறினர். பின் நடந்த உண்மையை கேள்விபட்டு, கூட்டத்தை விலக்கி எறிபத்தரிடம் நெருங்கினார் மன்னர்.

"யானையினால் உண்டான தவறிற்கு, பாகன்களையும் கொன்றது தகுமா? " என எறிபத்தரிடம் கேட்டார் மன்னர்.
அதற்கு எறிபத்தர் "சோழனே ஈசனின் திருவடியார் சிவகாமியார் இறைவனுக்கு சாற்றுவதற்கு வைத்திருந்த மாலையை பறித்து வீசியது இந்தயானை, இதன்கொடுஞ்செயலை பாகர்களும் தடுக்கவில்லை, ஆகவே அவர்களையும் கொன்றழித்தேன்" என எறிபத்தர் கூற,

[அங்கணர் அடியார் தம்மைச்
  செய்த இவ்வப ராதத்துக்கு
இங்கிது தன்னால் போதாது
  என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை
  வழக்குமன்று இதுவாம் என்று
செங்கையால் உடைவாள் வாங்கிக்
  கொடுத்தனர் தீர்வு நேர்வார்.]

எறிபத்தர் பாதத்தில் வணங்கிய மன்னன், அங்ஙனம் நீங்கள் இவர்களை மட்டும் தண்டிப்பது முறையல்ல, இவர்களின் அரசனான என்னையும் தண்டியுங்கள், உமது புனித மழுவால் தண்டிக்க வேண்டாம், எனது வாளினாலே  கொல்லுங்கள் என, தன் உடைவாளை எடுத்து நீட்டினார் புகழ்ச்சோழர்.

அதிர்ந்தார் எறிபத்தர். மன்னரின் வாளை வாங்கினார். தன் பட்டத்துயானையை கொன்ற ஒருவனை நிந்திக்காது, தானே இறக்க முடிவுசெய்த இம்மன்னனின் ஆட்களையா கொன்றேன், அதற்கு முன் தாமே இறக்கலாம் என முடிவெடுத்து, வாளால் தம் கழுத்தை அரியத் தொடங்கினார். மன்னன் விரைந்து சென்று வாளையும், எறிபத்தரின் கையையும் பிடித்தான். மலைகள்போன்று இருவரும் போராடினர்.

அப்போது வானில் அசரீரி ஒலித்தது.

[தொழுங்கை அன்பின் மிக்கீர்!
  தொண்டினை மண் மேற்காட்டச்
செழுந் திருமலரை இன்று
  சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர்
  அருளினால் கூடிற்றென்று அங்கு
எழுந்தது பாக ரோடும்
  யானையும் எழுந்தது அன்றே.
]

அனைவரும் வணங்கும் அடியார்களே! உமது திருத்தொண்டினை உலகோர் உணரவே இந்நிகழ்வு நடந்தது. இவையாவும் பிறைசூடிய பெருமானின் திருவருளே என குரல் ஒலித்தது. அப்போதே பாகர்களுடன் யானையும் உயிர்ப்பெற்று எழுந்தது.

தலையை அரிய சென்ற எறிபத்தர் உணர்ச்சி மிகுதியில் மன்னர் காலில் விழ, மன்னனும் எறித்தர் காலில் விழ மேலே தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். பின் எறித்தரின் வேண்டுகோளை ஏற்று, குதிரையில் வந்த சோழன், யானைமேலே வெண்கொற்றக்குடையுடன் 'திருவானிலை' கோவில் நோக்கி சென்றான். அவருடன் எறிபத்தரும், சிவகாமியாரும் சென்றனர்.

எறிபத்தர் இவ்வுலகில் இடையூறு அடைந்த அடியார்களுக்கு, எந்நாளும் வலியச்சென்று தொண்டுசெய்யும் தவக்கொள்கை மேற்கொண்டு வந்தார். முடிவில் திருக்கயிலை மலையில் கணநாயகத் தலைமைப் பெற்றார்.

"இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்"

சிற்பம்: தாராசுரம்
ஓவியம்:ராஜம்
புகைப்படம் : Ramesh Muthaiyan

#தினம்ஒருஅடியார்
#எறிபத்தநாயனார்
#ஏழாம்நாள்தினம் ஒரு அடியார்-07





No comments:

Post a Comment

Popular Posts In This Blog