Monday, 4 May 2020

விறன்மிண்டர்

தினம் ஒரு அடியார்-05

விறன்மிண்டர்:

மலைநாடு என்றழைக்கப்பட்ட சேரதேசத்தின் செங்குன்றூரில்
பிறந்தவர், பூசை நாள்:சித்திரை திருவாதிரை, இவர் வேளாளர் குடியில் பிறந்தவர்.

[அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்-பெ.பு-494]


சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக்கோளாய் கொண்டவர். ஆனால் பிறஉலக பற்றுகள் அனைத்தையும் முற்றாய் நீங்கியவர். உண்மையான சிவனடியார்களிடம் எல்லையில்லா அன்பினை உடையவர். ஈசனார் எழுந்தருளியுள்ள தலங்களுக்கெல்லாம் சென்று, கவரை வணங்கும் அடியார் திருக்கூட்டத்தினை முன்சென்று துதித்து அதன்பின் இறைவனின் திருவடியை வணங்கும் இயல்புடையவர். மலைநாட்டினை கடந்து, பலதலங்களை தரிசித்து, வேதங்கள் பூட்டப்பட்ட தேரின்மேல் நின்றவருமான இறைவன் வீற்றிருக்கும், இவ்விடத்தின்பால் பிறந்தாலே முக்தி என்றழைக்கப்படும், திருவாரூர் வந்தடைந்தார்.

[திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்-பெ.பு-497]


அருள்நிறைந்த,திருவாரூரின் 'தேவாசிரியன்' மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களை காணாது, இறைவனை வணங்கச் சென்றார் வன்றொண்டர்(சுந்தரர்), அதுகண்ட விறன்மிண்டர், “தேவாசிரியனிடத்து பொலிந்து விளங்கிய திருத்தொண்டர்களை வணங்காது சென்ற வன்தொண்டன் புறகு. அவருக்குப் பிரான் ஆகிய இறைவனும் புறகு” என்றார்.

[சேணார் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்-பெ.பு-498]


சிவனாரின் அடியார்கூட்டத்தை வணங்காது சென்ற சுந்தரரை  சிவனும் 'புறகு' என்று உரைத்தார். அதன்பின் ஈசனாரோ,

"நாம் உள்ளது அடியாருடன் மட்டுமே,அவர்தம் பெருமையை பாடுவீராக"
என்றுரைத்து, “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுத்து, திருத்தொண்டர்த்தொகையை பாட வைத்து தன் அருளையும் அளித்தார் சுந்தரருக்கு.

அதன்பின் உலகமும்,நாமும் உய்ய நாயன்மார்களின் புகழை பறைசாற்ற, திருத்தொண்டத்தொகையை பாடி, தேவாசிரிய மண்டபத்திலுள்ள அடியார்களை தொழுது வணங்கினார்.

இங்ஙனம் பலநாள் சைவநெறி பேணி, இன்று நம் அனைவருக்கும் சிவதொண்டரை போற்றும் திருத்தொண்டத்தொகை எனும் இலக்கியம்  கிடைக்க காரணமாய் விளங்கி, திருத்தொண்டு செய்திருந்த விறன்மிண்ட நாயனார், மேன்மை உடைய கணநாயகராகும் நிலை பெற்று, சிவபெருமான் திருவடிக்கீழ் பேரின்பம் பெற்றார்.

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்"

#விறன்மின்டர்
#தினம்ஒருஅடியார்
#ஐந்தாம்நாள்


சிற்பம்:தாராசுரம்
புகைப்படம் : Ramesh Muthaiyan
ஓவியம் : ராஜம்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog