Monday, 4 May 2020

இளையான்குடி மாற நாயனார்

தினம் ஒரு அடியார்-03

இளையான்குடி மாற நாயனார்:

இவரது பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி என்றும், பிறந்தது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாழ்ந்தது சோழதேச இளையான்குடி என்றும் இரு கருத்துகள் உள்ளது.இவரது திருநட்சத்திரம் ஆவணி மகம் ஆகும்.

[நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்(பெ.பு-440)
]

இளையான்குடியில் தோன்றிய இவ்வடிகளாரின் இயற்பெயர் மாறன் என்று கருத இடமுள்ளது. இவர் சூத்திர குலத்தில்,வெள்ளாளர் குடியில் பிறந்தவர் என்பது மேற்கூரிய பாடலினால் அறியலாம்.

[ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்
(பெ.பு-441)]

ஏர்த்தொழிலாள் உண்டான அளவில்லாமல் செல்வங்களை பெற்றவர் மாறனார். ஈசனின்மேல் மிகுந்த அன்பினை கொண்டவர். அவரின்  அடியார்களை வழியில் கண்டால், அகமகிழ்ந்து எதிர்சேவை புரிந்து இருகரங்களை கூப்பி வரவேற்பார், அன்புடன் அவர்கள் விரும்பும் சொற்களை மென்மையுடன் கூறுவார், அதன்பின் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று,அவர்களின் அழகிய திருவடியை நீரால் தூய்மை செய்து, அழகிய இருக்கையில் அமரச்செய்து வணங்குவார்,பின்னர் அவர்கள் விரும்பும் உணவை படைத்து உண்ணுமாறுசெய்வார் இதனையே தினமும் செய்து வந்தார். இவரது தூயஅன்பின் காரணமாய் அவர் வீடெங்கும் பொருட்செல்வம் நிரம்பி வழிந்தது. மாறனாரும் அச்செல்வங்களைக் கொண்டு அடியார்தம் மனம்குளிர விருந்தோம்பி மகிழ்வார். 'செல்வம் மிகுந்த காலம் மட்டுமின்றி வருமையிலும் உதவுவான் மாறன்' என ஈசனின் திருவுள்ளம், இதனை உலகுக்கிற்கும் உணர்த்த எண்ணியதோ என்னவோ,
"குன்றக் குன்ற குன்றும் மாளும்" என்ற முதுமொழிக்கேற்ப மாறனாரின் செல்வமும் கரைய ஆரம்பித்து வறுமையின் பிடிக்கு காலம் தள்ளியது.
செல்வம் குன்றியும், மனம் குன்றாமல் கடன்வாங்கி அடியார்களுக்கு முன்போல் திருப்பணி செய்து வந்தார்.

[மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்(பெ.பு-447)]


திருமாலும், நான்முகனும் தேடியும் காணகிடைக்காத அண்ணல், தன்ஊர்தியான இடபமும் இன்றி, தன்பாதியான உமையும் ஒரு எளிய இறைந்துண்ணும் துறவியின் வேடம்பூண்டு, தன்பக்தனின் இல்லம்காண எண்ணி விரைந்தார்.
வழக்கம்போல் மாறனாரும் அடியாரை எதிர்சேவைபுரிந்து வரவேற்றார். முதலில் அடியாரின் மேனியிலுள்ள நீரைதுடைத்து பாதம் கழுவி வணங்கி அமரச்செய்து, உணவுபெற அகமுடையாளிடம் சென்று வினவினார், துறவிக்கு என்ன உணவு படைக்கலாம் என, அப்போதுதான் உறைத்தது, அவர்கள் இருவரும் உண்ணவே இல்லத்தில் உண்ண உணவில்லை என, இரவானதால் அருகேயுள்ள வீடுகளிலும் கேட்க இயலாது, எனகலங்க அவரின் இல்லாள் ஓர் யோசனை கூறினார்.

[செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற-(பெ.பு-452)]


பகலில்நாம் நிலத்தில் விதைத்த விதைநெல்லை இப்போது சென்று தோண்டிஎடுத்து வாருங்கள், நான் சமைத்து தருகிறேன், இதைத்தவிர வேறுவழியில்லை என கூறினாள். மாறானாருக்கேற்ற குணமுள்ள அம்மை.
மாறனாரும் வீருகொண்டு வயல்நோக்கி ஓடினார். கொடுமையிலும் கொடுமையாய் அப்போதுதான் மழைஅதிகமாய் வர ஆரம்பித்தது. மழையினால் விதைத்த நெல்அனைத்தும் மேலெழும்பி நீரில் மிதந்தது. அதனை தடவி, தடவி தேடி, தேடி அந்த மையிருட்டில் கூடையில் நிரப்பிக்கொண்டு இல்லம் நோக்கி விரைந்தார். அங்கே ஓர் பரிதாபம் எரிக்க விறகில்லை. அதைக்கேட்ட மாறனார் வீட்டின் கூரையை அறுத்துத்தள்ளினார்.
பின் கூரையை விறகாக்கி நெல்லைவருத்து அரிசியாக்கி, உலையிட்டு சோறாக்கி, வெஞ்சனம் வைக்க கறியில்லாது, வீட்டுப்புலக்கடையில் நட்ட இளங்கன்றுகீரைகளை பறித்து சுவையான கறியமுது சமைத்தார்.
அதற்குள் அடியார் உறங்கியிருக்க அவரையெழுப்பி, உணவருந்த வருமாறு கைக்கூப்பி வணங்க, அந்த அடியார் சோதியாய் எழும்பினார். இருவரும் திகைத்துநின்றனர்.
திருமாலும், நான்முகனும், தவஞ்செய்து காணகிடைக்காத ஈசன் உமையுடன் காளையூர்தியில் காட்சியளித்தார்.

[அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்.(பெ.பு-465)]


அன்பனே! அடியாரின் பூஜையை தவறாமல் செய்துவந்த நீ உன் மனையாளோடு என்உலகத்தை அடைவாயாக!  குபேரனே உன் ஏவல் கேட்கும்படி அளவில்லா செல்ம் பெற்று பேரின்பம் பெருவாய்! என திருவருள் கூறினார். மாறானும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து! சிவபதம் அடைந்தார்.

இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"

சிற்பம்:தாராசுரம்
புகைப்படம்: திரு.ரமேஷ் முத்தையன்
ஓவியம்: ராஜம்

#தினம்ஒருஅடியார்
#இளையான்குடிமாறனார்
#மூன்றாம்அடியார்



No comments:

Post a Comment

Popular Posts In This Blog